3 – புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 3 -புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர்கள் தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டெல்லியில் நாடாளுமன்றம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்கள்.
ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் நடைமுறையில் இருந்த, இந்திய தண்டனைச் சட்டம் என்பது பாரதிய நியாய சன்ஹிதா என்றும், குற்ற விசாரணை முறைச் சட்டம் பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா என்றும், இந்திய சாட்சிகள் சட்டத்தை பாரதிய சாக் ஷிய அதிநியம் என்று பெயர் மாற்றப்பட்டதுடன் மட்டுமில்லாம் அதை புதிய சட்டங்களாக மத்திய அரசு கொண்டு வந்ததுள்ளது. புதிய சட்டங்களும் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் அதை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்களும் அரசியல் கட்சிகளும் போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தை விரிவுபடுத்தி உள்ளனர். தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 1000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
தற்போது நடைப்பெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 3 – புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் வழக்கறிஞர்கள்.
வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா எம்.பி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி. ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் ஜோதிமணி மற்றும் விஜய்வசந்த், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து மத்திய அரசு உடனடியாக 3 – புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.