கர்நாடகா பாஜக பிரமுகர் வீட்டில் வணிகவரித்துறை சோதனை
கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினர் வீட்டில் வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் மக்களுக்கு வழங்குவதற்காக பரிசுப் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் வாங்கப்படும் பொருட்கள் முறையாக வரி செலுத்தி வாங்கப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில ஹாவேரி மாவட்டத்தின் ரானேபென்னூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போதைய கர்நாடக சட்டமன்ற மேலவை உறுப்பினருமான பாஜகவைச் சேர்ந்த ஆர்.சங்கர், தனக்கு சொந்தமான குடோனில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேலை, வேட்டி, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மொத்தமாக வைத்திருப்பதை வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து அங்கு அதிரடி சோதனை மேற்கொண்ட வணிகவரித்துறை அதிகாரிகள் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மூட்டுகளில் கட்டி குடோனில் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இந்த பொருட்களை வாங்கியதற்கான முறையான ரசீதுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டபோது அந்த பொருட்களுக்கு முறையான ரசீதுகள் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் சுமார் 6000 புடவை மற்றும் ஒன்பதாயிரம் குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே பொருட்களை வாங்கியதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு பாஜகவைச் சேர்ந்த ஆர்.சங்கர் தரப்பில் கேட்டதை தொடர்ந்து, முறையான ஆவணங்களை செலுத்தி அந்த பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஒருவேளை ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால், பாஜகவைச் சேர்ந்த ஆர்.சங்கர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கவோ அல்லது கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.