பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் சில்லறை விலையில், விலை அதிகரிக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தொிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்து இன்று முதல் அமலுக்கு வருவதாக கூறியுள்ளது. கலால் வரி அதிகரிப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை குறைத்து சில்லறை வர்த்தகத்தில் விலை மாற்றமின்றி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாய்வுத்துறை அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், கலால் வரி உயர்வு காரணமாக சில்லறை வர்த்தகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயராது என பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. இதனால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகும் என உறுதியாகிறது.