விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது வகுப்புவாத, சாதிவெறி சக்திகள் குறி வைத்து அவதூறு பரப்புவதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு தொல் திருமாவளவன், நேற்று முன்தினம் (07.10.2025) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு வந்த போது, அவரது வாகனத்தை ராஜீவ்காந்தி என்பவர் வழி மறித்து வம்பு இழுத்துள்ளார்.
இந்த உண்மை நிலையை மறைத்து, தொல் திருமாவளவன் வாகனம் மோதியதாக திரித்துக் கூறும் தவறான தகவலை சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருப்பது சரியல்ல என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெளிவு படுத்தியுள்ளது.

நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது நடந்த தாக்குதல் முயற்சியை தொடர்ந்து நடந்துள்ள இந்த நிகழ்வு, தற்செயலாக எதிர்பாராது நடந்த சம்பவமாக கருதி கடந்து போக முடியாதுபடி, ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனாதன கருத்தியலும், மனுதர்ம நடைமுறைகளும், சமூகத்தை பிளவு படுத்தி, சாதிய அடுக்குமுறை சமூக அமைப்பை பாதுகாத்து வரும் பிற்போக்கு சக்திகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் தொல் திருமாவளவன் மீது வகுப்புவாத, சாதிவெறி சக்திகள் குறி வைத்துள்ளதா என்ற வினாவும் எழுகின்றது.
தொல் திருமாவளவன் பயணம் செய்த வாகனம் என்பதை உறுதி செய்து கொண்டு, அதனை முந்திச் சென்று, வழி மறித்து நின்று, வம்பிழுத்த குற்றச்செயலை மறைத்து, விசிக தலைவர் மீது அவதூறு பரப்பு வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.”
2027ல் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் – மாயாவதி உறுதி