தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அபராதம் விதிக்கப்பட்டு வருவதும் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சட்ட நடவடிக்கைகள் எடுத்து அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இனி எல்லை மீறி வருகிற மீனவர்களுக்கு எந்த கருணையும் காட்டப்படாது என்று இலங்கை மீனவத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் மூலமாக இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லைகளைத் தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருப்பது குறித்து இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் 1974, 1976 ஆம் ஆண்டுகளில் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு சர்வதேச கடல் எல்லைகள் வகுக்கப்பட்டாலும், “பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கின்ற உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது”என்று ஒப்பந்தத்தின் 5-வது பிரிவை சுட்டிக்காட்டி அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன்சிங் நாடாளுமன்றத்தில் உறுதி கூறியிருக்கிறார்.
அந்த உறுதியின் அடிப்படையில் இந்திய – இலங்கை கடற்பகுதி என்பது மிகமிக குறுகலான கடற்பரப்பு கொண்டதாகும். தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிற போது, சர்வதேச கடல் எல்லைக்கோடு எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியாத நிலையிலும், மீன்வளம் இருக்கிற பகுதியில் மீன்பிடிக்க வேண்டிய வாழ்வாதார நிர்ப்பந்தம் தமிழக மீனவர்களுக்கு இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த அடிப்படையில் மீன்பிடிக்கிற போது தான், தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அப்படி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 மாதம் முதல் 24 மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படுவதும், இலங்கை மதிப்பில் ரூபாய் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிற கொடூரமான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2024 நவம்பர் 22 அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறிய தகவலின்படி, 141 மீனவர்கள் இலங்கை அரசின் காவலில் உள்ளனர். அதில் 45 மீனவர்கள் மீதான விசாரணையும், 98 மீனவர்கள் தண்டனையும் விதிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றனர் என்றும், 198 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், 163 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். கடந்த 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மொத்தம் 3544 மீனவர்கள் இதுவரை இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கொடுமைகளை தமிழக மீனவர்கள் நாள்தோறும் சந்திக்க முடியாது.
இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் எடுக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை. இதுவொரு மனிதாபிமான பிரச்சினையாகும். நமது மீனவர்கள் குற்றவாளிகள் அல்ல. நமது கடற்பகுதியில் மீன்வளம் முற்றிலும் குறைந்துவிட்டதால் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை இருக்கிறது. ஒன்றிய அரசு இத்தகைய நிர்ப்பந்த நிலையை கருத்தில் கொண்டு இலங்கை கடற்பகுதியில் மாதத்தில் 15 நாட்களாவது மீன்பிடிக்கின்ற உரிமையை பெற்றுத் தர வேண்டும். மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
இந்திய – இலங்கை நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக இருக்கிற வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும், இரு அண்டை நாடுகளிடையே நிலவ வேண்டிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் இப்பிரச்சினையை அணுக வேண்டும். 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு, உயிரையும், உடைமைகளையும் இழந்து ஆயிரக்கணக்கில் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர். அப்போது பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுகின்ற வகையில், இலங்கைத் தமிழர்களின் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை தலைநகர் தில்லிக்கு வரவழைத்து 1983 ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் அவரை மேடையில் அமர வைத்து இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அதைப்போன்ற கடுமையான நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். கடந்தகால ஆட்சியின் மீது பழிபோடுவதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா நிறைய நிதியுதவி செய்திருக்கிறது. இலங்கை அரசின் வலியுறுத்தலின், பேரில் அண்டை நாடுடன் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் சில நிபந்தனைகளுடன் மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தர பிரதமர் மோடி, இலங்கை அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அத்தகைய பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு தயாராக இல்லையெனில், அந்நாட்டு அரசுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை மனிதாபிமான உணர்வுடன் இலங்கை அரசு அணுகாத நிலையில் இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து பிரதமர் மோடி செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளாா்.
திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க முடியுமா? உயர்நீதி மன்றம்