தமிழ்நாடு அரசு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ஒரு நபர் தொடுத்த வழக்கை அடிப்படையாக வைத்து அவசர அவசரமாக விசாரித்தது, நடைமுறை சாத்தியமற்றதும், மாநில அதிகாரிகளை மிரட்டுவதும், ஒன்றிய மாநில ஆயுத படைகளுக்கிடையே மோதலை தூண்டுவதும், நீதிமன்ற விதிகளுக்கு புறம்பாக தொடர்ச்சியாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இவர் பிறப்பிக்கும் உத்தரவுகள் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாகவும், மக்களிடையே மோதலை தூண்டுவதாகவும் உள்ளது. தவறான கணிப்புகளின் அடிப்படையில் இந்த தீர்ப்புகள் அமைந்துவிட்டன என்று கருத வாய்ப்பில்லாத அளவிற்கு கலவர முயற்சியில் ஈடுபடுகிறவர்களுக்கு உதவும் வகையிலேயே அவரது உத்தரவுகள் அமைந்துள்ளன.

இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நேற்றைய தினம் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றைய தினம் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோடு ஒன்றிய உள்துறை செயலாளர் அவர்களை இவ்வழக்கில் சேர்த்து உத்தரவிட்டிருக்கிறார். இது முற்றிலும் அவசியமற்றதும், ஒன்றிய அரசை இணைப்பதன் மூலம் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் திட்டமிட்டு ஒன்றிய அரசை தலையிட வைக்கும் சதியை மறுப்பதற்கில்லை.
மேலும், இப்பிரச்சனை மத்திய அரசிற்கு சம்பந்தமில்லாத போதும், மனுதாரர் அப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைக்காத நிலையிலும் நீதிபதியே ஒன்றிய உள்துறை செயலாளர் அவர்களை இவ்வழக்கில் இணைத்திருப்பது இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலாக்குவதற்கே உதவும். திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் தர்கா நில உரிமை குறித்த தகவல் எதுவும் இல்லாத போது வேண்டுமென்றே அதையும் இணைத்திருக்கிறார். அவருடைய நீதிமன்ற தீர்ப்புகள் நீதிபதிகள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளுக்கு உட்பட்டோ, அரசியல் சாசன சட்டத்தின்படியோ, அல்லது வழக்கின் தன்மையின் அடிப்படையிலோ அமையவில்லை. மாறாக, உள்நோக்கத்துடன் அவர் செயல்படுவதாகவே கருத இடமளிக்கிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று 107 எம்.பி.க்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ள நிலையிலும் தொடர்ந்து இப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்கி வருகிறார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் இந்தப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், தமிழ்நாட்டு மக்கள் இந்தப் போக்கிற்கு எதிராக தங்கள் குரலை வலுவாக எழுப்புவதுடன், ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் சதிச் செயல்களை ஒன்றுபட்டு முறியடிக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்நாடு அரசு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.


