தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது.
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், தமிழகத்தின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர்.

இதற்கு முன்பாக, தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜயுடன் தவெகவைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்த உடனேயே, முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை தொடங்கினார். விழா மேடையிலேயே கோப்புகளில் கையொப்பமிட்ட அவர், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், பெண்களின் பாதுகாப்பிற்காக “சிங்கப் பெண்” சிறப்பு அதிரடிப் படை அமைத்தல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களை கட்டுப்படுத்த மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கினார்.
இதனையடுத்து, சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற கருப்பையா, தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கும் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்றைய கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு பதவியேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நாளை (மே 12) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் மே 13ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
தவெகவின் அமைச்சர் கீர்த்தனா, வெற்றி சான்றிதழை எடுத்து வராததால் உறுப்பினராக பதவியேற்கவில்லை
