கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், துணை அமைப்பு தலைவர்கள் என 300 செயற்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டிலிருந்து மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல முடியவில்லை என்றாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் வியூகம் அமைத்து, வெற்றிபெறும் அளவிற்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான் தமாகாவின் நோக்கம் என்று தெரிவித்தார்.
2024 ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவை பொதுக்கூட்டமாக திருச்சியில் கொண்டாட உள்ளதாகவும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உருவாக வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முத்திரையை பதிக்க வேண்டும். 2026 சட்டமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் உள்ளது எனவும் டாஸ்மாக்கை குறைப்பேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயதால் உயிர்கள் பறிபோய் உள்ளதை கேட்டால் வேதனை அளிப்பதாகவும், தமிழக அரசின் மெத்தனப்போக்கு மற்றும் கவனக்குறைவால் கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.
உயிரிழப்பிற்கு ஆட்சியர்களின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்றும் தவறுக்கு துணை போனவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நீட் தேர்வில் மத்திய அரசு வெளிப்படை தன்மையோடு தவறுகள் கண்டிக்கப்படும் என கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்க்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் (apcnewstamil.com)
இனிமேல் நீட் தேர்வில் சந்தேகங்கள் ஏற்படாத வண்ணம் நீட் தேர்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ், திமுக கூட்டணி கல்வியில் நீட் தேர்வு மூலமாக அரசியலை நுழைத்து மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்ப நினைக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.