சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன், சபாநாயகரை தனியே சென்று சந்தித்துள்ளது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்த விவகாரத்தின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் தராசு ஷியாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- அதிமுகவை கவலை மேகங்கள் சூழ்ந்துகொண்டிருப்பதாக தான் பார்க்க வேண்டும். செங்கோட்டையன், சபாநாயகரை சென்று சந்தித்ததற்கு இன்னொரு ஆபத்தான பின்னணி உள்ளது. சபாநாயகர் அப்பாவு பதவி விலகக் கோரும் தீர்மானத்தை அதிமுக கொண்டுவரப் போகிறது. அந்த சூழலில் அதிமுகவின் மூத்த உறுப்பினரான செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்து பேசியுள்ளார். ஒரு கட்சி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்பதை உணர்ந்து, பதவி விலகக்கோருவது பலமுறை நடைபெற்றுள்ளது.

1972ல் மதியழகன் சபாநாயகராக இருந்தபோது, ஆளுங்கட்சியான திமுகவே சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது எம்ஜிஆர், திமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்திருந்தார். அந்த நிலையில், சபாநாயகர் மதியழகன் அவருக்கு ஆதரவாக செயல்படலாம் என நினைவுத்து கொண்டுவந்தார்கள். முதலில் சபாநாயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக முன்மொழிந்தது. 2 தீர்மானங்கள் நிலுவையில் இருந்தால் முதலில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சபாநாயகரை நீக்கிவிட்டு, துணை சபாநாயகராக இருந்த விருதுநகர் சீனிவாசனை சபாநாயகராக கொண்டுவர முடிவு செய்தனர். அது பெரிய பிரச்சினையாக மாறியது. சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் 2 சபாநாயகர்கள் அமர்ந்தார்கள். இப்படி எல்லாம் சட்டமன்றத்தில் எவ்வளவோ நடைபெற்றிருக்கிறது.
சமீப காலமாக பதவி விலகக்கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்வார்கள். அதன் மீது விவாதம் மட்டுமே நடைபெறும். ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். விவாதத்தின்போது டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசலாம். அப்படிப்பட்ட சூழலில் செங்கோட்டையன் சென்று சபாநாயகரை சந்தித்துள்ளது, அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்டுத்தும். காரணம் திமுக பதில் சொல்லும்போது இவற்றை எல்லாம் வைத்து எதிர்க்கட்சியை மிகப்பெரிய அளவுக்கு தாக்குதல் நடத்தும். செங்கோட்டையன் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளார் என்பது பரவலாக அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
பாஜகவுடன், அதிமுக கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இருக்கிறார்கள். இந்த பிரச்சினை தொடர்ந்தால் தங்கமணி, வேலுமணி என்ன முடிவு எடுப்பார்கள்? ஏற்கனவே ஒபிஎஸ் தலைமையிலான 4 எம்எல்ஏக்கள் தனியாக உள்ளனர். ஓபிஎஸ் உடன்தான் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்தார் என்பதுதான் நேற்றைய தகவல்கள். அந்தரங்கமாக அரசியல் நகர்வுகள் நடைபெறுவது என்பது இயல்பானது தான். ஆனால் பகிரங்கமாக எப்படி இப்படி அரசியல் நடக்கும்?. அப்படி பகிரங்கமாக நடைபெறுகிற போது அதன் நோக்கம் என்ன என்றால்? நாம் இப்படியான முரண்பட்ட நிலையை எடுத்து இருக்கிறோம் என்று தெரியப்படுத்துவதற்காக தான். அதிமுகவின் மூத்த தலைவராகிய செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடியை வெளிப்படையாக எதிர்க்கிறார் அல்லவா?
அதிமுக என்கிற கட்சி தற்போது என்ன மாதிரியான பிரச்சினையில் இருக்கிறது என்றால்? பாஜக உடன் கூட்டணி சேர முடியாது. சேர்ந்தால் அது, அதிமுகவுக்கு ஆபத்தாகும். எடப்பாடி பழனிசாமிக்கும் ஆபத்தாகும். அதிமுக உடன் கூட்டணி வைப்பதில் அண்ணாமலைக்கும் விருப்பம் கிடையாது. அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும்போது, தற்போதுதான் தினகரனை சந்தித்து விட்டு வருவதாக சொல்வார். இது ஒரு மிரட்டல் போக்கு ஆகும். எனவே கூட்டணி வைப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கோ, அண்ணாமலைக்கோ விருப்பம் கிடையாது. ஆனால் பாஜக விரும்புகிறது. பாஜக ஆதரவு நிலைபாடு உள்ள அதிமுக விரும்புகிறது. அதிமுக ஆதரவு நிலைப்பாடு உள்ள பாஜகவும் கூட்டணியை விரும்புகிறது. இரு கட்சிகளிலும் அதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதை நோக்கி நகர்வுகள் சென்றுகொண்டிருக்கிறது.
செங்கோட்டையன் அடுத்தக்கட்டமாக சாணக்யா வெப் தொலைக்காட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளார். அதனை கண்டித்து அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பாண்டே, முதலமைச்சர் ஸ்டாலின் நிகழச்சியிலேயே கலந்து கொண்டுவிட்டார். பாண்டேவுக்கும், காந்தராஜுக்கும் இடையேயான வார்த்தைப் போர் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதனை தாண்டி வெறுமனே ஒரு ஆண்டு விழாவில் கலந்துகொள்வது என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர் நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதுதான். நாளைக்கு தினகரனுடன் பேசிவிட்டு வந்தேன் என்று சொல்வதுபோல, செங்கோட்டையன் அண்ணனுடனும் பேசிவிட்டு வந்தேன் என்றும் அண்ணாமலை சொல்லுவார். அண்ணாமலை அதிரடி அரசியல் செய்கிறார். அவரை பொறுத்தவரை அவரது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாகும். டாஸ்மாக்கிற்கு முற்றுகை போராட்டம் அறிவிக்கிறார்.
மத்திய அரசுக்கு சொந்தமான அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.டாஸ்மாக்கில் ஊழல் என்று யார் சொன்னது. அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதற்கு பின்னர் எல்லாமே கசியவிடப்பட்ட செய்திகள்தான். ஆயிரம் கோடி என்று அமலாக்கத்துறை அறிக்கைவிட்டுள்ளது. மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு அறிக்கை விட முடியாது. சோதனை நடத்திய உடன் என்ன கிடைக்கும்? பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் கிடைக்கும். பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டால் சொல்லியாக வேண்டும். ஆனால் ஆவணங்கள் கிடைத்ததை சொல்ல முடியாது. அதை படிக்க எவ்வளவு நாட்கள் ஆகும். செந்தில்பாலாஜி மீது ஆயிரம் கோடி ரூபாய் என்று தொகையை இட்டுகட்ட முடியும்.
30 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.ஜே. தொலைக்காட்சியில் சோதனை நடைபெற்றது. தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் நேரில் சென்று விசாரித்தபோது சோதனை செய்தது அமலாக்கத்துறை என்றும், சாஸ்திரிபவனில் அலுவலகம் உள்ளது என்றும் தெரியவந்தது. அதன் பிறகு இன்றைய காலகட்டத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ என்பது அரசியல் ஆயுதமாகிவிட்டது.அப்போது அமலாக்கத்துறை தரப்பில் இருந்து கசியவிடப்பட்ட தகவல்கள். அதற்கு முக்கியத்துவம். அதை வைத்து ஒரு அரசியல் கட்சி முற்றுகை போராட்டம் அறிவிக்கிறது என்று பார்த்தால் அரசியல் முடிச்சு தெரியும். நான் ஊழல் நடக்கவில்லை என்று சொல்லவே இல்லை. நடக்கலாம், நடக்காமலும் போயிருக்கலாம். செந்தில்பாலாஜியை கேட்டால் நடக்கவில்லை என்பார். அண்ணாமலையை கேட்டால் நடந்தது என்பார். செங்கோட்டையன் இப்படி செய்தபோது, வேளாண் பட்ஜெட்டிற்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.