P.G.பாலகிருஷ்ணன்
இந்திய தேசிய காங்கிரஸ், இந்த பெயர் இன்று உலக அளவில் அடையாளம் காணும் வகையில் இருந்தாலும், 1885-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி இந்திய அளவில் வெள்ளையர்களை எதிர்க்கக் கூடிய மனநிலையில் இருந்த பல தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் பரிணாம வளர்ச்சி தான் இந்த காங்கிரஸ் கட்சி, அன்றைய காலகட்டத்தில் இந்திய அளவில் முக்கிய தலைவர்களாகவும், இந்திய விடுதலை போரில் முதன்மையான இடம்பிடித்த தாதாபாய் நௌரோஜி,பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திரபால், முகமது அலி ஜின்னா, ஆகியோரால் பலமாக கட்டமைக்கப்பட்ட அந்தக் கட்சியில், 1915-க்கு பிறகு இந்தியா வந்த மகாத்மா காந்தியும் அதன் சமகாலத்தில் அந்த கட்சியில் பயணித்த நேருவும் அக்கட்சியை சிறப்பாக வழி நடத்தி வெள்ளையர்களை எதிர்த்து போராடி பின்னர், 1947 ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்த நேரு மிகவும் சிறப்பாக சிறிதும் சுயநலம் இன்றி காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவர்களுடைய ஆலோசனையின் பேரில், சிறப்பாக ஆட்சி நடத்தினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தொடர்ந்து 54 ஆண்டுகள் 7 பிரதமர்களை கொண்டு இந்தியாவை ஆட்சி செய்து வந்த மிக பாரம்பரியமான இந்த காங்கிரஸ் கட்சி, துவக்க காலத்தில் மிகவும் தன்னலம்மற்ற தலைவர்களால் கட்டமைக்கப்பட்டு, இந்திய அளவில் மக்களுக்காக தொண்டாற்றிய இந்த காங்கிரஸ் கட்சி, இந்திரா காந்தி முதல் சோனியா காந்தி வரை வந்த காங்கிரஸ் தலைவர்கள் இந்திய அளவில் காங்கிரசை மிகவும் பின்னோக்கி கொண்டு போய் அழிவு பாதையில் பயணித்து தவித்தனர்.முன்னோர் செய்த தவறுகள் பின்னால் வரும் சந்ததிகளை பாதிக்கும் என்று பெரியோர்கள் சொல்வார்கள் அதை நிரூபிக்கும் வகையில், தற்போது அழிவு பாதையில் பயணிக்கும் காங்கிரசை மீட்டெடுக்க வேண்டும் என்று தற்போது காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்க கூடிய ராகுல் காந்தி அவர்கள் பல விதங்களில் போராடி வருகின்றார். அவர் முன்பு காங்கிரஸ் பயணித்த பாதையை மாற்றி தற்போது காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பெயர் அளவில் இல்லாமல் உண்மையிலேயே மதச் சார்பற்ற கொள்கையையும், சமூக நீதி கொள்கையையும் கடைப்பிடித்து, காங்கிரஸ் கட்சி ஏழை-எளிய மக்களின் கட்சி என்ற ஒரு அடையாளத்தை உருவாக்கி காங்கிரசை புதுப்பித்து மீண்டும் நேரு பிரதமராகவும் காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராகவும் இருந்த அந்த காலகட்ட நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை புதிய பொலிவிற்கு கொண்டுவர போராடி கொண்டிருக்கிறார்.

ஆனால், இதே வேளையில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சிக்கல்களை உருவாக்கி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியில் சிக்கல்களை நிவர்த்தி செய்ய ராகுல் காந்தி பல முயற்சிகளை எடுத்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தில் இருக்க கூடிய முன்னணி தலைவர்கள் ஒவ்வொரு புதிய, புதிய சிக்கல்களை உருவாக்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.அதில், தமிழ்நாட்டில் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்க கூடிய செல்வப் பெருந்தகை அவர்கள் உருவாக்கி இருக்கும் சிக்கல் மிகவும் பிரச்சனைக்கு கூறியதாக மாறி உள்ளது. தேசிய அளவில் ராகுல் காந்தி தலைமையில் இருக்க கூடிய இந்தியா கூட்டணிக்கு அதிக பலம் சேர்க்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அளவில் இருக்க கூடிய கூட்டணி கட்சிகள் மிகவும் பலமாக ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். இந்த கூட்டணியை உடைப்பதற்கு பாஜக உட்பட பல கட்சி தலைவர்களும் முயற்சி செய்து தோல்வி அடைந்து அவர்கள் அனைவரும் விரக்தியாக சோர்வடைந்து போய் இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில், பாமக கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாற்றி இருக்கிறார்.
செல்வப் பெருந்தகை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்த சந்திப்பு நடந்திருந்தால் யாரும் எந்த கருத்தையும் சொல்லி இருக்க மாட்டார்கள். ஆனால், தேர்தல் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி அதனால் பாமக கட்சி தலைவர்களுடைய குடும்பமே இரண்டு பிரிவாக பிரிந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பாமக தலைவரை ஏற்கெனவே பாஜக கட்சியின் தூதுவராக குருமூர்த்தி இரண்டு முறை ராமதாஸ் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ராமதாஸ் உடனான செல்வப் பெருந்தகையின் இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்து , திமுக கூட்டணியில் இருக்க கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை மிகவும் வெறுப்படைய செய்திருக்கிறது.” பாஜகவோ, பாமகவோ இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் ” என்று பகிரங்கமாக விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் ஏற்கெனவே கூறியிருக்கிறார். அதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தரப்பில் இருக்க கூடிய நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் கட்சியில் இருக்க கூடிய சில நிர்வாகிகளுக்கும் இடையே, வார்த்தைகள் மற்றும் அறிக்கை போர்கள் நடந்து வருகின்றன.
அதனால், எதிர்க்கட்சிகளாக இருக்கும் பாஜக, அதிமுக, தவெக, நதக, உட்பட பல கட்சியினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த சூழ்நிலையில், இரும்பு போல் மிகவும் உறுதியாக இருந்த ஒரு கூட்டணியில் சலசலப்பு உருவாகி இருப்பது, அரசியல் தரப்பில் இருக்க கூடியவர்களை மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க கூடிய தமிழ்நாட்டின் சாமானிய மக்கள் அனைவரையும் கவலை அடைய செய்திருக்கிறது.செல்வபெருந்தகை இதற்கு முன்பாக கூட,
சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய போது, “தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், தோழமை என்பது வேறு சார்ந்திருத்தல் என்பது வேறு. எத்தனை நாட்களுக்கு நாம் அவர்களை சார்ந்திருக்க போகிறோம்?” என்று பேசினார். அதை கூட திமுகவின் உயர் மட்டத்தில் உள்ள தலைவர்கள் அந்த கட்சியை வளர்ப்பதற்கு ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் பேசியிருக்கிறார் என்று கூட எடுத்து கொள்வார்கள். ஆனால், திமுக தொண்டர்கள் அவருடைய அந்த பேச்சால் கொதிப்படைந்தனர்.
திமுகவினரோ, அல்லது விசிகாவினரோ இல்லாவிட்டால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 10 எம்பிக்களையும், 18 எம்எல்ஏக்களையும் வென்று இருப்பார்களா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு இருக்க கூடிய இந்த சூழ்நிலையில் இவருடைய இது போன்ற நடவடிக்கைகளால் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சி தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியின் மீது வெறுப்படைந்து போனால், தேர்தல் நேரத்தில் எப்படி ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்பதை செல்வ பெருந்தகை உணர வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக இவர் பொறுப்பேற்ற பிறகு அந்த கட்சியை வளர்ப்பதற்கு அவர் என்னென்ன பணிகளை எல்லாம் மேற்கொண்டார் என்பதையும், தமிழ்நாட்டில் ஒன்றிய ஆட்சியாளர்களை கண்டித்து எத்தனை ஆர்ப்பாட்டங்கள், எத்தனை போராட்டங்களை அவர் முன்னெடுத்து நடத்தி இருக்கிறார் என்ற கேள்வியும் இப்போது எழுகிறது.
தமிழக பாஜகவினர் தமிழ்நாட்டில் அவர்கள் கட்சியை வளர்ப்பதிலும், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள நன்கு திட்டமிட்டு செயல்படுவதிலும் காட்டும் ஆர்வத்தில், செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக ஆன பிறகு, 10% கூட தனது கட்சியை வளர்ப்பதில் முனைப்பு காட்ட வில்லை என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சி நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் இருந்து மிகவும் வலுவாக கால் ஊன்றி அரசியல் செய்து கொண்டிருந்தது.அதனால் தான், காங்கிரஸ் கட்சி 1937 முதல் 1967 வரை 30 ஆண்டு காலத்தில், 6 முதல் அமைச்சர்கள் பதவி வகித்து ஆட்சி செய்திருந்தாலும், அதிலும், காமராஜர் ஆட்சி செய்த 9 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று கூறிக்கொண்டாலும், 1967 க்கு பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தலை தூக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், ஒன்று உள்ளது. அதையாவது செல்வப்பெருந்தகை செய்வதற்கு முயற்சி செய்திருக்கலாம். அது என்னவென்றால், நீதிக்கட்சியின் முக்கிய தலைவராக இருந்த டி.எம்.நாயர் முதல், இன்றைய ஜி.கே.வாசன் வரை பல பெரும் தலைவர்கள் இந்த காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவருமே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தூண்கள் என்பதை இவர் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் மிக முக்கியமானவர்கள் என நாம் கூற வேண்டுமென்றால், நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயர், பெரியார், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், எம்ஜிஆர், சிவாஜி, மூப்பனார், இறுதியாக ஜி கே வாசன் வரை இந்த பட்டியல் இன்னும் மேலும் நீண்டு கொண்டே போகும்.
அதிலும், குறிப்பாக காமராஜருக்கு காங்கிரஸ் செய்த துரோகம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவே மாட்டார்கள். காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்து கொண்டிருந்த 1963 ஆம் ஆண்டு கால கட்டத்தில், இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மிகவும் தொய்வான சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்த காமராஜர், நேருவிடம் இந்தியா முழுவதும் ஆட்சி பதவியில் இருக்கக் கூடிய முக்கியமான மூத்த தலைவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஒரு திட்டத்தை கூறியதுடன், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கட்சி பணி செய்ய விரும்பினார். காமராஜரின் அந்த திட்டத்தை ஏற்று கொண்ட நேரு, அந்த திட்டத்திற்கு,” காமராஜர் திட்டம் “ (கே.பிளேன்) என பெயரிட்டு அதை உடனடியாக நடைமுறைப்படுத்தினார். அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் 6 முதல்வர்கள் பல மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணி செய்ய துவங்கினர்.
நேருவின் இறப்பிற்கு பின்பு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த காமராஜரை இந்திய பிரதமராக பதவி ஏற்கும் படி பலர் வற்புறுத்தியும் அதை ஏற்று கொள்ளாத காமராஜர், லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார். பின்னர், அவருடைய மறைவிற்கு பின்பு இந்திரா காந்தியை பிரதமராக்கினார்.
இப்படிப்பட்ட ஒரு சுயநலம் இல்லாத ஒரு மாபெரும் தலைவரை இந்த காங்கிரஸ் கட்சி அந்த கட்சியை விட்டு வெளியேற்றியது மட்டுமல்லாமல், அவரை எமர்ஜென்சி காலத்தில் காமராஜரை கைது செய்யவும் முயற்சி செய்தது. காங்கிரஸ் தனக்கு செய்த துரோகத்தை எண்ணியே மனம் குன்றி போய் இருந்த நிலையில், உடலும் குன்றி போய் திடீரென உயிர் துறந்தார் காமராஜர். காங்கிரஸில் இருந்து பல தலைவர்கள் தாங்களாக வெளியேறி இருந்தாலும், காமராஜர் மட்டும் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது, காமராஜருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் செய்த மிகப்பெரிய அவமதிப்பாக்கும்.
அது மட்டும் இல்லாமல், கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த உலகமே பார்க்க காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் செய்த துரோகத்தை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள். இவ்வளவு தவறுகளை தமிழ்நாட்டில் செய்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தனியாக இயங்க முடியுமா? ஆனால், இந்த பலிகளை பெரும்பாலும் சுமந்து கொண்டு திரிவது திமுகவும், திமுகவின் தோழமை கட்சிகளும் தான், இதையெல்லாம் மறந்துவிட்டு, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை எல்லாம் திருத்தி அந்த கட்சியை எப்படி வளர்ப்பது என்ற முயற்சி எதையும் இதுவரை செய்யாமல், தேர்தல் நேரத்தில் தான் ஒரு சாணக்கியன் என்பதை நிரூபிக்க செல்வ பெருந்தகை முயற்சிக்க வேண்டாம். நீங்கள் எப்படிப்பட்ட சாணக்கியர் என்பதை நாடறியும்…
சுற்றுபயணம் தொடங்கிய எடப்பாடி! எச்சரிக்கும் அன்வர் ராஜா! அண்ணாமலை பார்த்த உள்ளடி வேலை!