அ.மார்க்ஸ்

திராவிட இயக்கத்தின் முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவது, தேசியம் குறித்த அதன் அணுகுமுறை.

நானும் சில நண்பர்களும் இணைந்து நடத்திய ‘நிறப்பிரிகை’ இதழில் பல்வேறு சிந்தனைப்போக்குகளை அறிமுகப்படுத்தி அறிவுச்சூழலில் பல உரையாடல்களைத் தொடங்கிவைத்தோம். அப்படி நாங்கள் அறிமுகம்செய்த ஒரு சிந்தனைப்போக்குதான் பெனடிக்ட் ஆண்டர்சனின் ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்னும் கருத்தாக்கம்.
‘தேசியம் என்பது இயற்கையானதல்ல; அது கற்பிதமே. தேசியம் குறித்த கற்பிதமும் வரையறையும் காலந்தோறும் மாறும் யார் வரையறுக்கிறார்களோ அவர்களைப் பொறுத்தும் மாறும். யாராவது சிலரை தேசிய அடையாளத்தில் இருந்து வெளியில் நிறுத்தியே வரையறுக்கப்படுகிறது. அப்படி நிறுத்தும்போது, அது பாசிசமாக மாறிவிடக் கூடாது’ என்பதுதான் நாங்கள் முன்வைத்த தேசியம் ஒரு கற்பிதம்’ என்னும் சிந்தனைப்போக்கின் அடிப்படை. ‘நிறப்பிரிகை’ இதழில் இதையொட்டி கட்டுரைகள் வெளியிட்டபோதும் 1994ல் ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்னும் புத்தகத்தை வெளியிட்டபோதும் தமிழ்த்தேசியவாதிகளிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போது, நாங்கள் சுட்டிக்காட்டிய ஒரு முக்கியமான அம்சம்தான், ‘பெரியாரும் திராவிட முன்னேற்றக்கழகமும் கட்டமைத்தது உள்ளடக்கும் தேசியம், அது பாசிசத்துக்கு எதிரானது’ என்பது.
‘யார் தமிழர்’ என்ற வரையறை காலம்தோறும் மாறிவந்திருக்கிறது. தமிழ்/திராவிட மீட்பு வாதங்களின் தொடக்ககால முன்னோடிகளில் ஒருவராக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையைக் குறிப்பிடுவர். அவர் தனது இறுதிக்காலத்தில் எழுத இயலாமற்போன குறிப்புகளைத் தான், எழுதுவதாக முன்னுரைத்து, அவரது முக்கியக்கிய சீடரான வெ.ப. சுப்பிரமணிய முதலியார் எழுதியுள்ள ‘இராமாயண உள்ளுறையும் ஆரிய-திராவிடப் போராட்டமும்’ என்கிற நூலில் குறிப்பிடப்படுகிற கீழ்க்கண்ட வரையறையைத் தொடக்ககால முன்னோடிகளின் வரையறையாகவே கொள்ளலாம். முதலியார் குறிப்பிடுவார்:
“இந்து தேசத்தவர்களை, ஹிந்துக்கள், முகமதியர், கிறிஸ்தவரென்று மதம் பிரிப்பது போல தென்னிந்தியர்களைச் சாதி பற்றி ஆரியர்- தமிழர் என்று பாகுபாடு செய்யலாம். அப்படிப் பாகுபாடு செய்வதில் பெரும்பான்மை காரணமாகத் தமிழர் என்ற பெயர்ப் பொருளில் தெலுங்கர். கன்னடர், மலையாளிகள் என்ற பெயர்ப் பொருள்களும் அடங்கும். ஹிந்துக்களும், மகமதியர்களும் வாழும் சென்னப்பட்டணத்தில் ஹிந்துக்கள் மகமதியர் என்று கூறவேண்டிய சமயங்களில் ‘தமிழாள்’ ‘துலுக்காள்’ என்று சாதாரண சனங்கள் சொல்வதுண்டு. இந்து வெகுஜன வழக்குச் சொற்றொடரில் ‘தமிழாள்’ என்பது ‘தெலுங்காளை’ உள்ளிட்டது கவனிக்கத் தக்கது.’
தொடக்ககால மீட்புவாதிகள் ஆரியரல்லாத அதாவது, பார்ப்பனரல்லாத மக்கட் பிரிவினரைத் தமிழர்! திராவிடர் எனக் குறிப்பிட்டனர். இதில் தெலுங்கர் கன்னடர் /மலையாளிகள் உள்ளடங்குகின்றனர். வெ.ப.சு. முதலியார் ‘துலுக்காளை’ (இஸ்லாமியர்களை) விலக்குகிறார்.
தவிரவும், மேற்குறிப்பிட்ட அதே நூலில் பிறிதோரிடத்தில், ‘ஆரியரல்லாராயினும் இந்து மதத்தராய்… மாட்டு மாமிசம் தின்னாராயுள்ள ஜாதி ஜனங்களோடிருந்து, இன்னும் பொம்பாய் போன்ற வடதேசத்துப் பிராமணர் போசனஞ் செய்கின்றனர்” என்று குறிப்பிடுவதிலிருந்து இவர் மாட்டு மாமிசம் தின்பாராயுள்ள ஜாதி ஜனங்களை வரையறையிலிருந்து விலக்குவது குறித்து கவலைப்படாதவர் என்பது புரிகிறது.
எங்கள் ‘தேசியம் ஒரு கற்பிதம்’ நூல் வெளியான அதே காலகட்டத்தில்தான் இன்னொரு அபாயமான புத்தகமும் வெளியானது. அது குணா எழுதிய ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’.
அந்தப் புத்தகம் ‘அருந்ததியர்கள் உள்ளிட்ட பிறமொழி பேசும் சாதியினர் தமிழர்கள் இல்லை’ என்றது. ‘படுகர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது, பௌத்தமும் சமணமும் ஆரிய மதங்கள், விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் தீண்டாமை உருவானது’ என்றது. ‘பெரியார் ஒரு கன்னடர். அவர் தமிழர்களை ஒடுக்குவதற்காகத்தான் திராவிட அடையாளத்தை முன்வைத்தார். அதற்காக, மார்வாடிகளிடம் பணம் வாங்கினார்’ என்று அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ‘திராவிட இயக்கம்தான் தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணம். திராவிடத்தை ஒழித்தால்தான் தமிழ்த்தேசியம் மலரும்’ என்றார் குணா. வெறுப்பும் அவதூறுகளும் நிரம்பிய குணாவின் கருத்துகளை மறுத்து, கோ.கேசவனுடன் இணைந்து ‘குணா: பாசிசத்தின் தமிழ்வடிவம்’ என்ற புத்தகத்தை எழுதினேன்.
1994ல் குணா எந்தெந்த அவதூறுகளை முன்வைத்தாரோ அதைத்தான் இப்போது ‘தமிழ்த்தேசியம்’ என்ற பெயரில் ‘நாம் தமிழர் கட்சி’ சீமான், பெ.மணியரசன் போன்றோர் திராவிட இயக்கத்துக்கு எதிரான அவதூறு ஆயுதங்களாக ஏந்தி வருகின்றனர். இவர்களது இந்த பாசிசக் கருத்தியலுக்கு, மொழிச்சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை முன்வைத்த ம.பொ.சியும் முன்னோடி. இவர்கள் ஏன் பெரியார் மீதும் தி.மு.க. மீதும் இவ்வளவு வெறுப்பைக் கக்குகின்றனர்? ஏனென்றால், இவர்களின் பாசிச சிந்தனைக்கு எதிராகப் பெரியாரும் தி.மு.க.வும் இருப்பதால்தான்.
பெரியார், அண்ணா: உள்ளடக்கும் தேசியம்
1950-க்கு முன்பு வரை ‘திராவிடர்’ என்ற கருத்தாக்கத்திற்கு அழுத்தம் தந்துவந்த பெரியார், அதன்மூலம் ஆரியர் அதாவது, பார்ப்பனர் தவிர்த்த ஏனைய மக்களை-முஸ்லிம்-கிறிஸ்தவர், சிறுபான்மை மொழியினரை உள்ளடக்கி-பொருள் கொண்டு வந்தார். ஆனால், 1950-க்குப் பின்பு ‘சுதந்திரத் தமிழ் நாடு’ என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக எல்லைக்குட்பட்ட ‘சுதந்திர’ அரசே அவர் கோரியது. பார்ப்பனர் உள்ளிட்ட மாநில எல்லைக்குட்பட்ட மக்கள் அனைவருக்குமான அரசு. வடவர் ஆதிக்கத்திலிருந்து விடுபடுதலே பிரதானம்.
அவர் கோரிய தமிழ்நாடு விடுதலை என்பது தாழ்த்தப்பட்டவர்களையும் தமிழகத்திலுள்ள பிறமொழி பேசும் திராவிடர்களையும் உள்ளடக்கியது. தி.மு.கவை அண்ணா உருவாக்கியபோது, தென்னிந்தியாவையே ‘திராவிடம்’ என்றார்.
திராவிட என்கிற புவியியற்றெல்லைப் பரப்பின் அடிப்படையில் பார்ப்பனர், சிறுபான்மை மொழியினர் எல்லோரையும் உள்ளடக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரையறை அமைந்தது. ‘திராவிட உள்ளுணர்வுள்ள அனைவரும், அம்மண்ணுக்கு நன்றியுள்ள யாரும்” என வரையறை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள மொழிச் சிறுபான்மையர், மதச் சிறுபான்மையினர் யாரையும் ஒதுக்கிவிடாமல், உள்ளடக்கியதுதான் திராவிட தேசியம். வெறும் இரண்டரை சத அளவே உள்ள பார்ப்பனர்களைத்தான் அது வெளியில் நிறுத்தியது. அப்போதுகூட அவர்கள்மீது வன்முறையையோ, அவர்களை முற்றாக ஒதுக்க வேண்டும் என்றோ, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றோ, பெரியாரும் தி.மு.க.வும் சொன்னதில்லை.
திராவிட தேசியம் என்பது தமிழர்கள் எல்லோரையும் உள்ளடக்குவதாக இருந்தது. எல்லா வகைச் சிறுபான்மை மக்களுடனும் அது மிகவும் நெருக்கமாக இருந்தது. முஸ்லிம் கட்சிகளுடன் அது கூட்டணி அமைத்தது. எனவேதான் தி.மு.க. முன்வைத்தது எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு Inclusive Nationalism.
அண்ணா வலியுறுத்திய பன்முகம்:
தமிழர், திராவிடர் என்ற வரையறைக்குள் பார்ப்பனர் அல்லாத எல்லோரையும் அரவணைத்தனர், பெரியாரும் தி.மு.க.வும். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத்தான் அவர்கள் எதிர்த்தார்களே தவிர, அவர்கள்மீது வெறுப்பைத் தூண்டி, வன்முறையை ஏவவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் எல்லோருக்கும் சமபங்கு வேண்டும் என்றார்களே தவிர, பார்ப்பனர்களின் பங்கை மறுக்கவில்லை.
அதேபோல், அண்ணாவின் ஓர் உரையைப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறேன்.
‘இந்தக் கூட்டத்தில் உயரமாக இருப்பவர்கள் வலப்புறமும் குள்ளமாக இருப்பவர்கள் இடப்புறமும் வாருங்கள் என்றால், வலப்புறமும் இடப்புறமும் பிரிந்து வருவார்கள். இந்தக் கூட்டத்தில் கருப்பாக இருப்பவர்கள் இடப்புறமும் சிவப்பாக இருப்பவர்கள் வலப்புறமும் வாருங்கள் என்றால், உயரமாக இருப்பவர்களிலும் வருவார்கள்: குள்ளமாக இருப்பவர்களிலும் வருவார்கள். அப்போது அந்த வலது, இடது வரிசை மாறியிருக்கும்’ என்னும் அர்த்தம் தொனிக்க அண்ணா பேசியிருப்பார்.
அண்ணாவின் இந்தப் பேச்சின் அடிப்படையாக உள்ள சிந்தனை முக்கியமானது. இங்கு எல்லா மனிதர்களுக்கும் ஒற்றை அடையாளம் கிடையாது; பன்முக அடையாளங்களே உள்ளன, ஒருவர் தொழிலாளியாக இருக்கும் அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவும் மதத்தைச் சேர்ந்தவராகவும், பாலின அடையாளம் கொண்டவராகவும் அரசியல் சார்பு உள்ளவராகவும் இருப்பார். எனவே, ஒற்றை அடையாளத்துக்குள் மட்டும் மனிதர்களை அடக்க முடியாது. பன்முக அடையாளங்களைக் கணக்கிலெடுத்தே நம் அரசியல் அமைய வேண்டும்.
எப்படி மனிதர்களுக்குப் பன்முக அடையாளங்கள் இருக்கின்றனவோ அதேபோல் ஒரு நாட்டுக்கும் பன்முக அடையாளங்கள் இருக்கின்றன. ஒரே மதம், ஒரே மொழி என்ற ஒற்றை அடையாளத்தைக் கொண்ட ஒரு தேசியத்தை உருவாக்கும்போது, அது பாசிசமாகவே இருக்கும்.
அண்ணா வலியுறுத்திய பன்முக அடையாளமும் எல்லோரையும் உள்ளடக்கிய தேசியமும் தமிழ் இனவாதிகளுக்கு மட்டுமல்ல, இந்துத்துவ பாசிசத்துக்கும் எதிரானது. அதனால்தான், இரு தரப்பும் திராவிட இயக்கத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

கலைஞரை வெறுப்பவர்கள் யார்?
கலைஞர் மறைந்தபோது, அவரது மறைவு குறித்து அன்றைய காலகட்டத்தில் வெளிப்பட்ட பல்வேறுபட்ட கருத்துக் குவியல்களையும் பார்த்தபோது, ஒரு விஷயம் எனக்கு மிகவும் சுவாரசியமாகப் பட்டது.
நீடகாலம் அரசியல் உலகில் தடம் பதித்து, எண்ணற்ற மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் அவர். அப்படியான ஒருவரின் மறைவு என்கிற அளவில் குறைந்தபட்ச அனுதாபமும்கூட இல்லாமல் வெளிப்படையாக அவர்மீது வெறுப்பைக் கக்குபவர்கள் அடைகிற ஒரு சங்கடம்தான் அந்த சுவாரஸ்யத்துக்குரிய அம்சம். அவர்களால் வெறுப்பைத்தான் கக்க முடிகிறதே ஒழிய, ஏன் தாங்கள் இந்த வெறுப்பைக் கக்க நேர்கிறது என்பதை அவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.
கலைஞரின் சமாதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக் கூடாது என வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வெறுப்பைக் கக்கும் அவர்கள். ‘கலைஞர் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வரலாம் எனச் சட்டம் கொண்டுவந்தார், பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டை 16-லிருந்து 18 சதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்குமான இட ஒதுக்கீட்டை 25 சதத்திலிருந்து 31 சதமாகவும் உயர்த்தினார், சாதி மறுப்புத் திருமணங்களுக்குப் பரிசுகள் அளித்து ஊக்குவித்தார். தமிழ்நாட்டை இந்தி இல்லாத மாநிலமாக ஆக்கினார். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிச் சட்டம் இயற்றினார், எல்லாச் சாதியினரும் ஒன்றாக வாழும் சமத்துவபுரங்களை அமைத்தார். முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்தார். ‘பாலம் கட்டுவதற்கு இராமன் என்ன இன்ஜினீயரா?’ எனக் கேட்டார், இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் திரும்பி வந்தபோது, அதை வரவேற்காமல் அவமதித்தார்-இதை எல்லாம் நாங்கள் எப்படிச் சகித்துக்கொள்வோம், இவற்றுக்காகத்தான் நாங்கள் அவரை ஜென்ம வைரியாகப் பார்க்கிறோம்.” என எப்படிச் சொல்வார்கள்?
இப்படித் தன் அரசியல் எதிரிகளை ஏன் தாங்கள் அவரை எதிர்க்கிறோம் எனச் சொல்ல இயலாதவர்களாக ஆக்கியதுதான் கலைஞர் அரசியல் களத்தில் அடைந்த முக்கிய வெற்றி எனத் தோன்றுகிறது. அவர்மீது வீமர்சனங்களே இல்லை என்பதோ, அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதோ அல்ல. ஆனால், எந்த விமர்சனங்களும் மேலே குறிப்பிட்ட தமிழ்ச் சனாதனிகள் ஏன் அவரை வெறுத்தார்கள் என்பதைக் கணக்கில் கொண்டதாகவே இருக்க வேண்டும்.
மிகவும் இளம் வயதில், தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் அவர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, (1942) அவருக்கு 18 வயது. இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டபோது (1947), 23 வயது. முதல் பொதுத் தேர்தல் நடந்த அதே ஆண்டில்தான் (1952) அவரது ‘பராசக்தி’ திரைப்படம் வெளிவந்து பெரும் புகழை அவர் எட்டியிருந்தார். 1953ல் கல்லக்குடி போராட்டத்தின் ஊடாக அவரது புகழ் மேலும் கூடியது. அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கிய காலப் பின்னணி இதுதான்.
பிரிட்டிஷ் ஆட்சியினூடாக இங்கு தேர்தல் அரசியல் அறிமுகப்படுத்தப்பட்ட அதே காலத்தில், தென்னக அரசியலைப் பொறுத்தமட்டில் அது வட இந்திய அரசியலிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருந்தது. இங்கே இந்து முஸ்லிம் பிரச்சினை அரசியலில் முதன்மைப்படவில்லை. மாறாக, திராவிடர் X ஆரியர் என்கிற சமூக நீதிப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை இங்கே மேலுக்கு வந்தது. காங்கிரசைக் காட்டிலும் இங்கே நீதிக்கட்சி வலுவாக இருந்தது. இடஒதுக்கீடு எனும் கருத்தாக்கம் இங்கே முக்கிய அரசியலாக வடிவெடுத்திருந்தது.
1940-களில் இங்கு காங்கிரசுக்கு மாற்றாக உருவெடுத்திருந்த நீதிக்கட்சி அண்ணா, கலைஞர் போன்ற அன்றைய இளைஞர்களுக்கு ஒரு மாற்று அரசியல் களத்தை அமைத்துத் தந்தது. சுயமரியாதை, மொழிப்பற்று, திராவிடத் தனித்துவம் ஆகியன அன்று இளைஞர்களின் ஈர்ப்புக்குரிய கொள்கைகளாக அமைந்தன. இந்திய தேசிய உருவாக்கம், பொதுவுடைமைச் சமூக உருவாக்கம் என்கிற அரசியல் லட்சியங்களுக்கு அப்பால், இங்கு இப்படி மூன்றாவதாக ஒரு மாற்று அடித்தள அரசியல் உருவாகியிருந்தது.
பெரியாரிடம் இருந்து பிரிந்து அண்ணா, தி.மு.க.வை உருவாக்கிய பிறகு, இருக்கும் தேர்தல் அரசியல் கட்டமைப்பில் எப்படி தங்கள் லட்சியங்களை நிறைவேற்றுவது என்று சிந்தித்தார். அண்ணாவுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தின் துணையோடு இந்த நடைமுறைவாதத்தை (pragmatism) தமிழ் மக்களின் தனித்துவமான அரசியலாகக் கொண்டுசென்றவர், கலைஞர்.
மைய நீரோட்டத்தில் கலந்துகொண்டதனால் அவர் தென்னகத்தின் தனித்துவங்களைக் கைவிட்டுவிடவில்லை. மாநில சுயாட்சி என்கிற அடிப்படையில் மாநில உரிமைக் கோரிக்கைகளை அவர் உரத்து ஒலித்துக்கொண்டே இருந்தார். அவர் குறியீட்டு (Symbolic) ரீதியாகவும், அரசியல் மற்றும் பொருளியல்ரீதியாகவும் பல உரிமைகளைத் தக்க வைத்துக்கொண்டார். தமிழகத்துக்கென ஒரு மொழி வாழ்த்துப் பாடல், சுதந்திரநாளன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடியை ஏற்றும் உரிமை ஆகியன இப்படிக் குறியீட்டுரீதியாகப் பெற்ற உரிமைகள்.
இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது, முஸ்லிம் வெறுப்பைத் தமிழகத்துக்குள் அனுமதிக்காதது, இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, தமிழ்ச் சமூக அமைப்புக்குத் தக அருந்ததியர், முஸ்லிம்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என ஒதுக்கீட்டை விரிவாக்கியது முதலியன அரசியல் மற்றும் பொருளியல்ரீதியாக நமக்குக் கிடைத்த பயன்கள். கலைஞரை அரசியல்ரீதியாகத் தோற்கடித்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்கூட, அவரது வழியிலேயேதான் தொடர்ந்து செல்ல முடிந்தது. இடஒதுக்கீட்டை அதிகரிப்பது அல்லது மதிய உணவை விரிவாக்குவது என்பதாகத்தான் அவர்கள் தம் சாதனைகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.
பொது விநியோக முறையை இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக விரிவாக்கியது, பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமை ஆக்கி இந்தியாவிலேயே மலிவான சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தியது, பல்கலைக்கழகங்களை அதிகப்படுத்தியது. நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி மறுத்தது, எல்லாவற்றிற்கும் மேலாக குடிசைமாற்று வாரியம் அமைத்தது முதலியன, கலைஞர் அரசின் சாதனைகளாகச் சொல்லத் தக்கவை. தேசிய அரசியலில் அவர் நெருக்கடி நிலையை எதிர்த்து நின்று ஆட்சியை இழந்தது. வரலாற்றில் மறக்க இயலாத ஒன்று.

ஐந்து தடவைகளில் பத்தொன்பதாண்டு காலம் மாநில முதல்வராக இருந்த யாருக்கும் ஒரு நீண்ட சாதனைப் பட்டியல் இருக்கும்தான். காமராஜர், எம்.ஜி.ஆர் உட்பட எல்லோருக்கும் சாதனைப் பட்டியல்கள் உண்டுதான். ஆனால், அந்தச் சாதனைகள் எந்தத் திசையை நோக்கி அமைந்தன, எந்தப் பிரிவு மக்களுக்கு அவை வலுசேர்த்தன. யாரால் அவை வெறுக்கும்படியாக அமைந்தன என்கிற வகையில்தான் ஒரு ஆட்சியாளரின் சாதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் சமூகநீதியை நேசிக்கும் யாரும் கலைஞரை மறந்துவிடவோ வெறுத்துவிடவோ முடியாது.
இன்று கலைஞரின் காலத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க தன் பவளவிழாவைக் கொண்டாடுகிறது. இப்போது, ஒன்றிய அரசு அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இந்துத்துவ பாசிசம் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ள சூழலில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க, பா.ஜ.க எதிர்ப்பைத் தீவிரமாக முன்வைக்கிறது. பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளைத் தேசிய அளவில் திரட்டுவதிலும் முன்நிற்கிறது.
ஏனென்றால் அதன் வேர், அண்ணா முன்வைத்த பன்முகத்தன்மையிலும் உள்ளடக்கும் தேசியத்திலும் இருக்கிறது. அதனால்தான் அது எப்போதும் ஒற்றை அடையாளத்தையும் வெறுப்பரசியலையும் முன்வைக்கும் பாசிசத்துக்கு எதிராக இருக்கிறது.


