அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி, மனுதாரர் சூரியமூர்த்தி அதிமுகவின் உறுப்பினரே இல்லை.
உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியாது எனக்கூறி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் சூரியமூர்த்தி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சூரியமூர்த்தி தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் வேறு ஒரு வழக்கின் விசாரணையில் உள்ளதால் இந்த வழக்கை சிறிது நேரம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையையேற்று வழக்கின் விசாரணையை சிறிது நேரம் ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். விசாரணையின் போது சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட பிறகு, தான் எந்த ஒரு கட்சியிலும் இணையவில்லை. எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கவும் இல்லை. அதனால் தன்னை அடிப்படை உறுப்பினர் இல்லை என்று எவ்வாறு கூற முடியும்? என கேள்வி எழுப்பினர். மேலும் தான் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டேனே தவிர வேறு கட்சியிலோ நான் இணையவில்லை.
அப்படி இருக்கையில் தான் அதிமுக உறுப்பினர் இல்லை என்று எவ்வாறு அவர்கள் முடிவெடுக்க முடியும்? என்ற வாதத்தை முன் வைத்தனர். மேலும் தான் அடிப்படை உறுப்பினரில் இருந்து எதற்காக நீக்கப்படுகிறோம் என்பதையும் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு தான் அடிப்படை உறுப்பினர் இல்லை என்பதை கூற முடியும் என கேள்வி எழுப்பியதோடு, தான் உரிமையியல் வழக்கு தொடுப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. ஏனெனில் வேறு ஒரு கட்சியில் இணைந்தாலோ அல்லது கட்சிக்கு எதிராக செயல்பட்டாலோ தான் அவ்வாறு என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியும்.
ஆனால் இந்த விவகாரத்தில் எதையும் விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் தனது உரிமையியல் வழக்கை நிராகரித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றமும் இதனை உறுதி செய்திருக்கிறது. எனவே எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் என்பதற்கு எதிராக தான் தொடர்ந்த உரிமையியல் வழக்கை ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு, ஏற்கனவே கீழமை நீதிமன்றம் கொடுத்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என தனது வாதத்தை முன்வைத்தார்.
ஆனால் இந்த வாதங்களை மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிராக சூரியமூர்த்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஜனநாயகன் மார்ச் 27 ரிலீஸ்! கசிந்த சென்சார் ரகசியம்! சுபேர் உடைக்கும் உண்மைகள்!


