செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும் நெரிசல்,பேருந்து தாமதமாவதால் போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.


திருவள்ளூர் – பூந்தமல்லி இடையேயான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் வழிமார்க்கத்தில் தினந்தோறும் சுமார் 3 லட்சம் மக்கள் வரை பயணம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த சாலையை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வழியாக பயணம் செய்யும் வர்ஷினி என்ற மாணவி, பூந்தமல்லியில் உள்ள எஸ்.ஏ பொறியியல் கல்லூரியில் முதுநிலை படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரி செல்வதற்காக காலை நேரத்தில் 62-ம் எண் கொண்ட பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருகிறாா். பல நேரங்களில் இவ்வழியாக பேருந்து வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும்,அப்படியே வந்தாலும் மிகுந்த கூட்ட நெரிசல் காரணமாக ஏற முடியாத சூழல் ஏற்படும் என்று கூறியுள்ளாா்.
இதனால்,பேருந்து வர தாமதமாகும் சில நேரங்களில் ஆட்டோவில் செல்வதால் பேருந்தை விட ஆட்டோவில் பயணிக்க அதிக கட்டணம் செலவாகிறது என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மற்றும் தினக்கூலி வேலை செய்யும் பெரும்பான்மையான மக்களின் அன்றாட வாழ்வில் இது பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் கூறினாா். அதேபோன்று பேருந்துக்காக நீண்ட நேரகாத்திருப்புக்கு பின் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும் போது கல்லூரிக்கு தாமதமாக செல்லும் சூழலும் உருவாகிறது என்றும், அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளாா்.
இந்த வழித்தடத்தில் ஏ.வி.எல் பள்ளி, வேலம்மாள் பள்ளி, மகாலட்சுமி பள்ளி, ஆர்.எம்.கே பள்ளி, சுதர்சனம் வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளி போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களும், மகாலட்சுமி கல்லூரி, எஸ்.ஏ. கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இத்தனை கல்வி நிறுவனங்கள் ஒரே பகுதியில் இயங்குவதால், காலை நேரங்களில் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை கொண்டு செல்லும் பெற்றோர்களின் இருசக்கர வாகனங்கள், பள்ளி, கல்லூரிகளின் சொந்த வாகனங்கள், அதே நேரத்தில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் ஒரே நேரத்தில், ஒரே சாலையில் பயணங்களை மேற்கொள்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக செங்குன்றம் – பூந்தமல்லி வழியாக இயக்கப்படும் 62-ம் எண் பேருந்து எப்பொழுதுமே மிகுந்த கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. நிற்க கூட இடமின்றி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாகன நெரிசல் அதிகரிப்பால் விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, 62-ம் எண் பேருந்து சேவையை அதிகரித்து, குறிப்பாக காலை மற்றும் மாலை உச்ச நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர்: வேப்பம்பட்டு அருகே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாமல் பொதுமக்கள் அவதி…


