தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசின் முடிவுக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி உயர்வு சாதாரண மக்களின் சேமிப்பை சுரண்டும் செயல் என்றும், இதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியிருப்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வரி உயர்வு, பொதுமக்களின் சேமிப்பை நேரடியாக பாதிக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த திடீர் உயர்வால் தங்க நகைகளின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. பொருளாதார நிலையை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தாலும், இது சாதாரண மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல், குடும்பங்களின் முக்கிய சேமிப்பாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் திருமணம், அவசரத் தேவைகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்காக மக்கள் தங்கத்தை சேமித்து வைப்பது வழக்கமாக உள்ளது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இத்தகைய வரி உயர்வு அமல்படுத்தப்பட்டிருப்பது திட்டமிட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் கருத்து தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, “அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களின் சேமிப்பாக இருக்கும் தங்கத்தின் மீதும் அதிக வரி விதிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களின் எதிர்கால நம்பிக்கையாகக் கருதப்படும் தங்கத்தின் மீது இவ்வளவு அதிக வரி விதிப்பது குடும்பங்களின் பொருளாதாரத் திட்டங்களை சீர்குலைக்கும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் நிலவும் பொருளாதார சவால்கள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றாக்குறையால் மக்கள் சிரமத்தில் இருக்கும் நேரத்தில், இந்த வரி உயர்வு அவர்களின் சுமையை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி மீதான 15 சதவீத சுங்க வரி உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை தொடர்ந்தால் நகைத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
