சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் அசுர வேகத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள், சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இக்கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் – ரெட்ஹில்ஸ் சாலை, புதூர் பகுதியில் இன்று வழக்கம்போல் வாகனப் போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது. அப்போது அந்தச் சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அசுர வேகத்தில் பைக் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூன்று பேரும் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, புதூர் அருகே சாலையைக் கடக்க முயன்ற ரேணுகா தேவி என்ற மூதாட்டி மீது, கட்டுப்பாட்டை இழந்த அந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி ரேணுகா தேவி, மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இளைஞர்களுக்குப் படுகாயம்
விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர். விபத்தைக் கண்டு ஓடிவந்த பொதுமக்கள், காயமடைந்த இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த ஆவடி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக விசாரிக்க வந்த போக்குவரத்து போலீசாரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், தங்களின் நீண்ட நாள் குமுறல்களைக் கொட்டினர்.
அம்பத்தூர் – ரெட்ஹில்ஸ் சாலையில் பகல், இரவு என எந்நேரமும் போதை இளைஞர்கள் பைக் ரேஸ்களிலும், ஆபத்தான வாகன சாகசங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காததே இன்று ஒரு உயிர்பலி ஏற்படக்காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதை இளைஞர்களின் பைக் ரேஸை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இப்பகுதியில் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டின் முன் மதுபோதையில் ரகளை – தட்டிக்கேட்ட ஆட்டோ ஒட்டுநரைத் தாக்கிய தவெக நிர்வாகி கைது!

