காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 4 பேரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிகாரிகள் ஆய்வில் அம்பலமான முறைகேடு
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேண்பாக்கம் ஊராட்சி மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் ஊராட்சி ஆகியவற்றில் மக்கள் நலத்திட்டங்களுக்கான ஊராட்சி நிதி பெருமளவில் முறைகேடு செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இரு ஊராட்சிகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, வரவு – செலவு ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகள் மற்றும் அரசாங்க வழிகாட்டுதல்களை முற்றிலும் மீறி, விதிகளைப் புறந்தள்ளி நிதி செலவிடப்பட்டிருப்பது ஆவணப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

சட்டப்பிரிவின் கீழ் அதிரடிப் பதவி நீக்கம்
முறைகேடு புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சினேகா இதற்கான அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி, வேண்பாக்கம் ஊராட்சித் தலைவர் சரளா, துணைத் தலைவர் அருள் மற்றும் வைப்பூர் ஊராட்சித் தலைவர் சுமதி, துணைத் தலைவர் பாரதிராஜா ஆகிய 4 பேரும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் பிரிவு 205(11)-இன் கீழ் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாகப் நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பதவி நீக்கத்தைத் தொடர்ந்து, அந்த ஊராட்சிகளின் நிர்வாகப் பணிகள் முடங்காமல் இருக்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கியுள்ளனர். இரு ஊராட்சிகளின் அனைத்து வரவு-செலவு கணக்கு புத்தகங்கள் மற்றும் அரசு ஆவணங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) முன்னிலையில், தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களின் பொறுப்புகள் அந்தந்த வார்டு உறுப்பினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளன. ஒருவேளை வார்டு உறுப்பினர்கள் இப்பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், ஊராட்சியின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (Zone Deputy BDO) ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் நிதி முறைகேடு புகாரில் கூண்டோடு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
