கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. நீதிமன்றத்தை அரசியல் அரங்கம் ஆக்க வேண்டாம் என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, திமுக தரப்பு தனது மனுவை அவசர அவசரமாக வாபஸ் பெற்றுக்கொண்டது.


வழக்கின் பின்னணி:
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ ஏற்கனவே பலமுறை விசாரணை நடத்தியுள்ளது.
திமுக தாக்கல் செய்த மனு:
இந்தச் சூழலில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து பேசி வருகிறார். இது சாட்சிகளை அச்சுறுத்தும் செயல் மற்றும் சிபிஐயின் நடுநிலையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். எனவே, முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் திமுக முறையிட்டிருந்தது.
நீதிபதிகள் கடும் கண்டனம் – மனு வாபஸ்:
இன்று (ஜூலை 07) இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த மனுவை விசாரிக்க எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். குறிப்பாக நீதிபதி விஸ்வநாதன் திமுக தரப்புக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
“இந்த வழக்கில் முதல்வர் விஜய் ஒன்றும் குற்றவாளி கிடையாது. ஆனால், நீங்கள் இன்று இந்த நீதிமன்றத்தை அரசியல் அரங்கம் ஆக்குகிறீர்கள்; அது எப்படி முடியும்?” என்று நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்த கடுமையான கண்டிப்பைத் தொடர்ந்து, வேறு வழியின்றி திமுக தரப்பு வழக்கறிஞர், தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
