காங்கிரஸ் தரப்பில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு கேட்டு அதிக அழுத்தம் கொடுத்தால் 2016ல் ஜெயலலிதா எடுத்த முடிவை திமுகவும் எடுக்க நேரிடும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை கேட்டு அழுத்தம் கொடுப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- 2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை விஜய் கட்சி தொடங்கியது, அனைத்துக் கட்சிகளுக்கும் குரல் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதுவரை திமுக, அதிமுக என இரு துருவ அரசியல் இருந்து வந்தது. இதனால் கட்சிகள் இந்த இரு கூட்டணிகளிலோ, அல்லது தனித்தோ போட்டியிட்டு வந்தனர். மூன்றாவதாக ஒரு அணி அமைந்தால் வாக்குகளை பிரிக்குமே தவிர, வெற்றி பெறாது என்கிற எண்ணம் மக்களிடையே உள்ளது. ஆனால் விஜய்க்கு ஒரு வாக்கு வங்கி உள்ளதாக எல்லோரும் நம்புகிறார்கள். எனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், செல்வதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
அதிகாரத்தில் பங்கு என்பது திமுக ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகும். அதைவிட அதிகமான இடங்கள் வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாக இதை காங்கிரஸ் பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் விஜய் கூட்டணிக்கு செல்கிறபோது அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு குறைவாகும். அதை காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தும்போது திமுக தரப்பில் தெரிவிக்கப்படும். திமுக ஒரு கணக்கு வைத்திருக்கும். அதன்படி தான் காங்கிரசுக்கு இடங்கள் தரப்படும். அதுவும் ஒன்று இரண்டு இடங்கள் தான் கூடுதலாக தருவார்கள். ஆனால் அதிகாரத்தில் பங்கு என்பதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

கடந்த 2021 தேர்தலை பொறுத்தவரை திமுகவில் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு அதிகபட்சமாக 70 இடங்கள் பிரித்து தரலாம். அதற்கு மேல் தர வாய்ப்பு இல்லை. திமுக குறைந்தபட்சம் 175 இடங்களிலாவது போட்டியிடும். அதற்கு ஏற்றபடி இடங்களை பிரித்து தருவார்கள். பிரவீன் சக்கரவர்த்தி, 75 சதவீத காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம் ஆட்சியில் பங்கு, அதிக இடங்கள் என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என திராவிட கட்சிகள் உள்ளதால் அவர்களால் வளர முடியவில்லை. இந்த கட்சிகளுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்த பிறகு ஏன் ஆட்சியில் பங்குதர வேண்டும்.
கட்சியை வளர்ப்பதற்கு ஆட்சியில் பங்கு தர அவசியமில்லை. 2016 தேர்தலில் ஜெயலலிதா சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். அவர் கூட்டணியில் பெரிய கட்சிகள் இல்லை. இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் அதிக அழுத்தம் கொடுக்கும்பட்சத்தில் திமுக அந்த முடிவை எடுக்கும் சூழலுக்கும் தயாராக உள்ளனர். திமுக தரப்பில் காங்கிரஸ் எந்த நிபந்தனைகளையும் விதிக்கலாம். ஆனால் அதை பேச்சுவார்த்தை குழு மூலம் சொல்ல வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் காங்கிரசில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற சூழல் உள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் 38 எம்எல்ஏ இடங்கள், 3 அமைச்சர் பதவிகள் கேட்பது மேலிடத்தின் தூண்டுதலின் பேரிலானது என்றும் சொல்ல முடியாது. அவர்கள் தூண்டிவிட வில்லை என்றும் சொல்ல முடியாது. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்களா? என்கிற சந்தேகம் உள்ளது. காங்கிரஸ், பாஜகவை எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் விஜய் கூட்டணிக்கு செல்கிற போது, அவர் பாஜக எதிர்ப்பை கையில் எடுப்பாரா? கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், திருப்பரங்குன்றம் விவகாரம் போன்றவற்றில் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
விஜயுடன் சென்றால் சிறுபான்மை மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்களா என்று காங்கிரஸ் கட்சியும் யோசிக்க வேண்டும். திமுக பாஜக எதிர்ப்பில் தீவிரமாக உள்ளது. அவர்களின் முக்கியமான வாக்கு வங்கியே, பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கிதான். மற்ற கட்சிகள் பாஜக எதிர்ப்பு அரசியலை செய்வதற்காக தான் திமுக உடன் இணைந்துள்ளனர். எனவே காங்கிரஸ் விஜயோடு சென்றால், சிறுபான்மை மக்களே அவர்களை நம்ப மாட்டார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு வாய்ப்புகள் இல்லை. தமிழ்நாட்டை பொருத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளையும் மார்கழி ஃபீவர் பற்றிக் கொண்டுள்ளது. தை மாதம் பிறந்த உடன் தான் அதற்கான குழுவை திமுகவினர் அமைப்பார்கள். அப்போது தான் கூட்டணிகளும் செட் ஆகும். பிப்ரவரி மாத தொடக்கத்தில் தேர்தல் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதுக்கோட்டையில் பேசிய அமித்ஷா, ஏப்ரலில் என்டிஏ ஆட்சி அமையும் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அவர்கள் சொல்கிற நாளில் தான் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். எனவே தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கோரிக்கை உடனடியாக ஏற்க வாய்ப்பு இல்லை. காங்கிரசில் உள்ள 18 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 15 பேர் திமுக உடன்தான் கூட்டணி செல்ல வேண்டும் என்பார்கள். எம்.பி-க்களாக உள்ளவர்கள் தான் எதிர் குரல் கொடுக்கிறார்கள். திமுக, காங்கிரஸ் மேலிடம் நம்முடன் தான் உள்ளனர் என்று நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கையை காங்கிரஸ் மேலிடம் எந்த அளவுக்கு காப்பாற்றுகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


