கல்யாணராமன்
தமிழில் கடித இலக்கியம் அதன் உச்சநிலைக்குச் சென்றது, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கடிதங்களால்தான் என்று அழுத்திச் சொல்ல முடியும். தந்தை பெரியார், அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், சம்பத், கண்ணதாசன் போன்றோரின் மேடைகளை மாலை நேர வகுப்பறைகள் என்ற தொடரால் குறிப்பது, அன்று ஒரு மரபாகவே நிலைபெற்றிருந்தது.
இவர்களில் அண்ணாவும் கலைஞரும் மேடைப்பேச்சால் மட்டுமல்லாமல், தம்பிக்கும் உடன்பிறப்புக்கும் தாங்கள் எழுதிய உணர்வு கொப்பளிக்கும் பல நூறு கடிதங்களாலும் தமிழுக்குப் பெரும் பங்களித்துள்ளனர். உள்ளூர் அரசியலையும் இந்திய அரசியலையும் சர்வதேச அரசியலையும் சாதாரண தமிழர்களுக்கும் அறிமுகப்படுத்தி விளக்கமளிப்பதில், இக்கடிதங்களின் பணி மகத்தானதாகும்.

பேரறிஞர் அண்ணாவின் கடிதங்களில் அடுக்குமொழியும் அறிவைக் கிளரும் அரசியல் விளக்கங்களும், இதயத்தின் ஆழத்தில் சென்று பதியும் உணர்வுக் கொந்தளிப்புகளும், எதிரிகளைச் சுருக் சுருக்கென்று குத்தும் வார்த்தைப் பிரயோகங்களும், மலைவீழ் அருவிபோன்ற இயற்கையான கம்பீரமும், மெலிதான நகைச்சுவையும் மலைப்பை ஏற்படுத்துமளவிற்கு விரிவான சுவையான தகவல்களும் தங்குதடையின்றி வெளிப்பட்டு, படிப்போரின் அறிவுக்கு விருந்தாகும் புத்துணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. கலைஞரின் கடிதங்களிலோ, மக்களிடம் சொந்தம் பாராட்டிப் பேசும் இன்றியமையாத உறவுணர்வும், சாதி மத இனம் தாண்டி அனைவரையும் உடன்பிறப்பாக அரவணைத்துப் போற்றும் தலைமைப் பண்பும், ஒவ்வொரு கிராமத்திலும் தாம் எப்போதோ கண்ட மனிதர்களை மீண்டும் அங்குச்செல்லும்போது, மறவாமல் குறிப்பிட்டுப் பாராட்டும் பெருந்தன்மையும் அன்றாட அரசியல் களத்தை அணுவணுவாய் விண்டு, அனைவருக்கும். புரியுமாறு எளிமை மாறாத ஆழத்தோடு எடுத்துரைக்கும் நடைமுறைப் பாங்கும், சூழ்ச்சி வலைகளையும் சதிப்பின்னல்களையும் குறிப்புணர்த்திவிட்டு நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் வலியுறுத்தும் நேர்நிலைப் பண்பும் திராவிட இயக்கப் பேராளுமைகளை நினைவூட்டிப் பகுத்தறிவையும் அரசியல் சுயமரியாதை உணர்வையும் கூர்மழுங்காமல் உடன்பிறப்புகளுக்குக் கடத்தும் இனமானச் சுரணையும், அனைத்துலகும் பாராட்டும் அரசியல் பண்பாடும், கொள்கை விளக்கக் குறிப்புகளும், பரபரப்பான எழுத்து நடையும், மாற்றாரும் ஏற்கும் வகையிலான வாதத்திறமையும் பின்னிப்பிணைந்து, ஒரு புதிய கருத்துலகமே விரிவதைக் காண்கிறோம்.
இவ்விரு பெரும் ஆளுமைகளின் கடிதங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான கூறு என்னவென்றால், இவர்கள் மக்களோடு எந்த இடைத்தரகர்களின் உதவியுமின்றி நேரடியாகப் பேச முனைவதுதான். இந்த ஒளிவுமறைவற்ற மனந்திறந்த பகிர்ந்துகொள்ளல்கள் இக்கடிதங்களை அரசியல் வரலாற்று ஆவணங்களாகவே நிலைநிறுத்திவிடுகின்றன.
அரசியல் கூர்ப்புணர்வை வெறும் அடுக்குமொழி அலங்காரத் தமிழால் மட்டுமே அண்ணா சாதித்ததாகச் சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். அது, பச்சைப்பொய். குன்றின் மேலிட்ட விளக்கு (கடிதம் : 156) என்றொரு கடிதம் (06.08.1961) எழுதியிருக்கிறார் அண்ணா. அவர் ஏன் பேரறிஞர் எனப் போற்றப்பட்டார் என்பதற்குச் சாட்சியாக, இந்த 86 பக்கக் கடிதம் திகழ்கிறது. ‘திருப்பரங்குன்றம் மாநாடு, கழகம் விடுதலை இயக்கமே தஞ்சைச் சம்பவம் தரும் படிப்பினை, பதவிப் பித்தர்கள் யார்?, சோற்றுப் பிரச்சினை, தி.மு.க. அரசியல் வெட்டுக்கிளி அன்று, மக்களாட்சி என்பதன் பொருள், மெழுகுவர்த்தியால் பெற்ற பாடம், அண்ணாவின் உடற்கூறும் ஊர்ப்பாங்கும், செய்தித்தாள்களின் வேலைத்திறம், சிங்களத்தில் சித்திரவதை என்ற பதினொரு பகுதிகளுடையது இக்கடிதம்.

இந்த ஒரு கடிதமே போதும் – ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல! அவ்வளவு தகவல்கள், அவ்வளவு பெயர்கள், அவ்வளவு நிகழ்வுகள், அவ்வளவு அரசியல் கூருணர்வு! மாநில – தேசிய – சர்வதேசிய உள்ளூர்ப் பிரச்சினைகளில் தொடங்கி, இன்று வரை விவாதிக்கப்பட்டுவரும் அனைத்துச் சமூகப் பிரச்சினைகளையும் தொட்டும் அகழ்ந்தும் காட்டிக் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிர்கிறார் பேரறிஞர் அண்ணா. விரிவஞ்சிச் சில சான்றுகளை மட்டும் அண்ணாவின் சொற்களிலேயே காண்போம்.
உரிமையுடன் பெருமிதம் கொள்கிறாய் உன் புன்னகையிலேயே ஓர் புது எழில் காண்கிறேன் – பனித்துளியுடன் காணப்படும் புதுமலர் உன் கண்கள் ஆமாம்! வெற்றிக்களிப்புடன் இருக்கிறாய் – வேழத்தின் தந்தத்தை முறித்து, உடலில் பாய்ந்திருந்த வேலினைப் பறித்தெடுத்து, மாற்றான்மீது வீசி, வெற்றிகண்ட வீர மரபின் வழிவந்தவனன்றோ -இன்று, விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டு, வீறுகொண்டெழுந்து வெற்றிப்பாதையிலே நடைபோடுகிறாய்.
உன் கைவண்ணமாக, கருத்தோவியமாக, எழுச்சி வடிவமாகத் தோற்றமளித்த திருப்பரங்குன்றம் மாநாடு, உன்னையும் என்னையும், மரபின் மாண்பையும் தாயகப் பெருமையையும் மறவாத அனைவரையும், களிப்புக் கடலில் நீந்திடச் செய்தது. எப்படி அண்ணா என் பணி? என்று கேட்கிறாய். என் சொல்வேன், தம்பி! உன்னிடம் இத்தகைய அரும் ஆற்றல் நிரம்ப இருப்பது அறிந்துதானே, நாடு மீட்டிடும் நற்பணியில் ஈடுபட, நான் துணிந்தது, தம்பி! திருப்பரங்குன்றம் மாநாடு, நமது இயக்க வரலாற்றிலே நிச்சயமாக ஒரு திருப்புமுனை என்பதை, நிகழ்ச்சிகளையும் நிலைமைகளையும் ஆராய்வோர் அனைவரும் உணர்வர்” என்றெழுதியுள்ளார் அண்ணா.
இன்றைக்கு மாநாடு நடத்துவோர்கள்கூட, அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா நடத்திய திருப்பரங்குன்றம் மாநாட்டிலிருந்து கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ உள்ளன. அதனால்தான், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் தவிர்க்கமுடியாதவராகிறார் பேரறிஞர் அண்ணா. பெருமிதம், புது எழில், பனித்துளி, புதுமலர், வெற்றிக் களிப்பு, வேழத்தின் தந்தம், வெற்றி கண்ட வீர மரபு, கைவண்ணம், கருத்தோவியம், எழுச்சி வடிவம், மரபின் மாண்பு, தாயகப் பெருமை, களிப்புக் கடல், நாடு மீட்டிடும் நற்பணி, இயக்க வரலாறு திருப்புமுனை, நிகழ்ச்சிகள், நிலைமைகள், தம்பி. அண்ணா! – best words in best order என்பது இதுதான்! அண்ணாவின் தமிழ் – கேட்டாரையும் படித்தாரையும் வேறு எங்கும் போகவிடாமல் ஆரத்தழுவி அரவணைத்திடும் அடுக்குமொழித் தமிழ்!
‘விடிந்ததும், இன்று என்ன தூற்றலோ? இன்று எவர் அறிக்கையோ எவருடைய அறைகூவலோ? என்று நினைத்தவண்ணமே இதழ்களைப் பிரிக்க முடியும் என்ற நிலைமை. இப்படியொரு தாக்குதல், இதுவரையில் எந்த இயக்கத்தின் மீதாவது தொடுக்கப்பட்டதுண்டா என்று நானும் எண்ணிப்பார்க்கிறேன். ஒன்றுகூட எனக்குத் எந்தக் கட்சியிலாகிலும்?” தெரியவில்லை. மனமுறிவுகள் முகாம்கள் அமைக்கப்பட்டதுண்டு – புகார்கள் வெளியிடப்பட்டதுண்டு ஆனால், ஏற்பட்டதுண்டு – பிளவுகள் காணப்பட்டதுண்டு அப்பப்பா பகை, இந்த அளவுக்குக் கக்கப்பட்டதுண்டா? எப்போதாகிலும்?எந்தக் கட்சியிலாகிலும்?‘
இவ்வாறு அண்ணா கடிதமெழுதிக் கேட்கும்போது, ‘இல்லை அண்ணா இல்லை அண்ணா; இல்லவே இல்லை அண்ணா’ எனத் தம்பிகள் தம் உள்ளங்களுக்குள்ளே பதிலெழுப்பித் தம்மை அறியாமலேயே அண்ணாவுடன் உரையாடத் தொடங்கிவிடுவர் அல்லவா? இதுதான் அண். வின் கடிதங்களுக்குக் கிடைத்த வெற்றி. மக்களுடன் அந்தரங்கமாக அண்ணா பேசுகிறார்; உள்ளம் உருக்கும் கம்பீரத் தமிழில் பேசுகிறார்!

ஒரு மாபெரும் தலைவராக வெளியே தள்ளி நின்றுவிடாமல் தொண்டருக்குத் தொண்டராகத் தம் மனவேதனையை அடிமட்டத் தொண்டர்களிடம் அண்ணா பகிர்ந்துகொள்ளும் விதமே தனியழகாக இருக்கிறது . அண்ணன் – தம்பி’ உறவு என்பதை வெறும் வாய்ப்பேச்சு உறவாகக் கொள்ளாமல், உண்மையான உணர்வு உறவாக வளர்த்து நடைமுறைப்படுத்தியதுதான், அண்ணா பெற்ற மாபெரும் வெற்றிக்குக் காரணமென்று எனக்குத் தோன்றுகிறது. சொல்லில் சொல்லிவிட முடியாத வேதனையைக்கூட தம் சொற்களின்மூலம் தம்பிகளுக்குக் குறிப்புணர்த்திவிட் முடிவதென்பது,அண்ணாவின் தமிழுக்குக் கிடைத்த வெற்றியாகும். இப்போது படித்தால்கூட, நாயகன் – நாயகி அல்லது தலைவன் – தலைவி பாவம்போல, ‘அண்ணா – தம்பி’ உறவு இலக்கியமாகவும் அன்றாடமாகவும் கோலோச்சி நிற்பதைக் கண்டு வியப்படையாமலிருக்க முடியவில்லை.
ஜூலை 13ஆம் தேதி மாநாடு – தம்பி! நான் ஜூலை 09ஆம் தேதி வரையில், வடாற்காட்டிலே கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். பொருளாளர் கருணாநிதி, மாநாட்டு அமைப்பாளர், அலுவலையும் சேர்த்துப் பார்க்கவேண்டி நேரிட்டது. கலைக்காட்சிப் பொறுப்போ, நண்பர்கள் இராஜாஜி, பார்த்தசாரதி, பொன்னுவேல், செழியன் ஆகியோரிடம். நண்பர் மதி.நடேசன், நாவலர் ஆகியோர் மாநாட்டுக்கான அறிவிப்புகளை, அலுவல்களைக் தோழர் முத்துவுடன், மாவட்டத் தோழர்களும், கவனித்துக்கொண்டிருந்தனர். மதுரைத் ஊரூருக்கும், தர்மலிங்கம் எம்பி அவர்களால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்!’
இது அண்ணாவின் மற்றுமொரு தலைமைப்பண்பு, ஒரு பத்து வரிக்குள் பத்துப் பேர்களையாவது சொல்லிவிடுவது! ‘இந்த நிலையினின்றும் நானோர் பாடம் பெற்றேன்’ என்றெழுதுகிறார் அண்ணா. என்ன பாடம் அது? அவரே சொல்வதைக் கேளுங்கள்.
நாம் கவனிக்காவிட்டால், கருத்துடன் காரியமாற்றாவிட்டால், செம்மை ஏற்படாது என்ற எண்ணம், அகந்தையளவு எனக்கு எப்போதும் எழுவதில்லை என்றாலும் அச்சம் தரத்தக்க அளவுக்கு எழுவதுண்டு. இதைச் செய்ய வேண்டுமே, அதை இப்படி அமைக்க வேண்டுமே, எதை எதை எப்படி எப்படிக் கெடுத்துவிடுவார்களோ என்றெல்லாம் ஒரு பதைபதைப்பு, பரபரப்புணர்ச்சி ஏற்படும். அதனால், எல்லாக் காரியத்திலும், எதேனும் ஒரு விதமான தொடர்பு இருக்க வேண்டும் என்று துடிப்பதுண்டு! அப்படித் தொடர்பு இருப்பதனால்தான், காரியம் செம்மையாக நடக்கிறது என்ற நினைப்பும் உண்டு மறைப்பானேன்? ஆனால் தம்பி, இம்முறை நடைபெற்ற மாநாடு,எனக்கிருந்து வந்த அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை நான் உணரச் செய்தது.
என்றெழுதித் தம்பிகளிடமிருந்து பாடம் கற்ற அண்ணனாகத் தம்மை மேலும் உயர்த்திக்கொண்டுவிடுகிறார் அண்ணா! அதை அவர் சொற்களிலேயே, அண்ணா சொல்லக் கேட்போம்.
‘தம்பி! இதன் உட்பொருள் என்ன, தெரிகிறதல்லவா? நடுநாயகர்களின் திறமையால் மட்டுமே. நமது இயக்கம் வாழமுடியும், வளரமுடியும் என்பது தவறான தத்துவம்! பல இலட்சக்கணக்கானவர்களின் அறிவாற்றலால், உழைப்பினால், வடிவமெடுத்துள்ள இயக்கம், தன்னைத்தானே இயக்கிக்கொள்ளவும், மற்றவர்களை இயங்க வைக்கவுமான ஓர் நிலையை, வலிவை, தன்மையைப் பெற்றுவிட்டது. இந்தப் பாடம் எனக்குக் கிடைத்ததைப் போல் கிடைத்திருந்தால், ஒருவேளை, விலகி வீறாப்புப் பேசுவோர் தன்னடக்கம் கொண்டிருக்க முடியுமோ, என்னவோ?
எவ்வளவு நுட்பமானவர் அண்ணா என்பதற்குச் சான்றாக, அவரது கடிதங்கள் திகழ்வதாகக் கூறலாம். எத்தகைய நிலைமை தமக்கு ஏற்பட்டாலும், அதைத் தம் தம்பிகளிடம் வெளிப்படையாகச் சொல்லி, எப்படியாவது அவர்களின் அறிந்தேற்பைப் பெற்றுவிடும் அசாதாரணமான வித்தை அண்ணாவுக்குச் சாமர்த்தியமாக இல்லாமல் அன்புறவாகப் பதிந்திருந்தது.
‘வீரனுடைய ஆற்றலின் காரணமாகத்தான், அம்பு பாய்கிறது. ஆனால், விடுபட்ட அம்புக்கு, செலுத்துபவனிடம் உள்ளதைக் காட்டிலும் வேகமும் துளைக்கும் சக்தியும் ஏற்பட்டுவிடுகிறது அல்லவா? அம்பினை எய்துவிட்டு, எய்தவனே முயன்றாலும் அதன் வேகத்தைத் தடுக்க, கெடுக்க, மடக்க முடியாது அல்லவா?’ – இது அண்ணாவின் கவித்துவப் பேச்சு,
‘தம்பி! நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வோர் அளவு, இயக்கம் வளர வகையும் வடிவமும் பெறத் துணைநின்றோம். நமது கூட்டுமுயற்சியின் விளைவுதான் தி.மு.க. ஆனால், அந்த அமைப்பு செம்மைப்பட்டதும், நாமே கண்டு வியக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது அதிலே, நமது பங்கு இது, அதன் தரம் இத்தகையது என்று பிரித்தெடுத்துக் காட்ட இயலாது – உரிமை கொண்டாடுவதும் பொருளற்றதாகும் இது அண்ணாவின் அன்புப் பேச்சு.
கட்சி தொடர்பான பகிர்ந்துகொள்ளல்களில் மட்டுமன்று; அன்றாட அரசியல் நிகழ்வுகள் பற்றிய அண்ணாவின் விமர்சனங்களிலும் பரந்துபட்ட அவரின் படிப்பறிவு வெளிப்பட்டுக்கொண்டேதான் இருந்தது. ‘சட்டம் ஒரு கழுதை பயந்து பின்னால் செல்பவர்களைக் காலால் உதைக்கும். துணிந்து முன்புறம் சென்றாலோ, பயந்து ஓடும்’ என்று காலஞ்சென்ற கல்கி கூறினார். ஒரிசாத் தேர்தலில், சட்டம் குறிக்கிடுமோ என்ற அச்சமற்று. பட்நாயக் நடந்துகொண்டார், வெற்றி கிட்டிற்று என்றெழுதியுள்ளார். அண்ணா, கல்கியிலிருந்து ஒரே தாவலில் பட்நாயக்கிற்குச் சென்றுவிட்டார். அண்ணாவின் எழுத்தை வரையறுப்பதென்றால், வள்ளலாரைக் கடன்வாங்கி, இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது எனக்கு – கல்லார்க்கும் கற்றாருக்கும் களிப்பருளும் களிப்பு’ – அவரே நம் அண்ணா!
ஒரு ரூபாய் வைத்திருக்கிறான் ஒருவன்; அவனுக்குப் பசி கடுமையாக இருக்கிறது; அவன் தனது பசியை நீக்க, அந்த ரூபாயைக் கொண்டு உணவுப் பண்டம் வாங்குவானா? அல்லது வீட்டிலே கொளுத்தி வைத்தால் ‘கம்’ மென்று மணக்கும் என்று கருதி ஊதுவத்தி வாங்குவானா? ‘ஊதுவத்தி வாங்குவேன் என்கிறார் சுப்பிரமணியம் – தனது வரவு- செலவுத் திட்டச் சொற்பொழிவின்மூலம் மனிதனே, சோறின்றிச் சாகும்போது, ‘அந்த மனிதனுக்கு மருந்தும் கல்வியும் தருகிறேன்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம்!
பாவம் சுப்பிரமணியம்! தம் பட்ஜெட் பற்றி இப்படியும் ஒருவர் விமர்சிப்பார் எனக் கனவிலும் அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஏதோ சந்தர்ப்பவசத்தாலோ, அதிர்ஷ்டத்தாலோ, காரண காரியமின்றியோ, தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் ஏறிவிடவில்லை. அண்ணாவின் வாதத் திறமைகளே தி.மு.க.வின் வெற்றிக்கு வழியமைத்துக் கொடுத்தன என்பதற்கு ஆயிரம் சான்றுகளை அண்ணாவின் கடிதங்களிலிருந்து நம்மால் எடுத்துக்காட்டிவிட முடியும்.
‘துகிலுரித்த துச்சாதனனுக்குத் துரோபதை மாலையிடுவதா?”எனத் தேர்தலின்போது கேட்டார் அவர். ‘சுயம்வர மண்டபத்தில், போலி நளன்களின் கூட்டம், கையில் மாலையுடன், குருட்டுத் தமயந்தி’ என்ற அப்துல் ரகுமானின் கவிதைக்கும், ஒருவேளை அண்ணாவே அடியெடுத்துக் கொடுத்திருக்கக் கூடுமென்றும் நினைத்துக்கொள்கிறேன். அண்ணாவின் நடையில் உவமைகளும் உருவகங்களும் கரைபுரண்டோடுகின்றன. எதைச் சொன்னாலும், அதைச் சுவையாகச் சொல்லத் தெரிந்தவர் அவர்
“பூஜை அறைக்குள்ளே இருப்பதாலேயே, புலி சாதுவாகவா மாறிவிடும்? கதராடை அணிந்துகொண்டதாலேயே, காதகர்கள் இரட்சகர்களாகவா மாறிவிடுகிறார்கள்? தங்கப்பூண் போட்ட தடியால் தலையில் அடித்தால் வலி எடுக்காமல், மகிழ்ச்சியா பிறக்கும்? வாழ்வை அழிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள், வந்தேமாதரம் பாடிவிட்டால், கொடுமைகளை மறந்துவிடவா முடியும்?” எனக் கேட்டவர், அண்ணா.
அவரைப் பொறுத்தவரையில் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு எனக் கருதியதோடு மட்டும் நில்லாமல், தம் சொல்லாலோ செயலாலோ பிறரைப் புண்படுத்துவதையோ அவமதிப்பதையோ கனவிலும் கருதாதவர் என்பதுதான், அண்ணாவின் தனிப்பெருமையாகும். இதுபற்றி அவரே சொல்வதைக் கேளுங்கள், அப்போதுதான் நம் அண்ணா, எவ்வளவு பெரியவர் என்பதை உணர முடியும்.

“என்னைப் பொறுத்தவரையில், என் சொல்லாலோ செயலாலோ நெருக்கடிகள், முறிவுகள், மாச்சரியங்கள் ஏற்படக் கூடாது என்பதிலே மிகமிகக் கவலை கொண்டுதான் இத்தனை ஆண்டுகளாக நடந்துகொண்டு வந்திருக்கிறேன். என்னையும் அறியாமல் எவருக்கேனும் இடர்பாடோ, மனத்தாங்கலோ, இழப்போ ஏற்பட்டு விட்டிருக்குமானால்,அந்த அளவுக்கு, நான் எனக்கென்று வகுத்துக்கொண்டுள்ள வேலை முறையில் தோல்வி கண்டதாக எண்ணி என்னை நானே நொந்துகொள்வேனேயன்றி, பிறர் மீது கோபப்படுவது என் இயல்பு அல்ல. ஆனால், இதிலே கவனிக்கவேண்டிய, மிக முக்கியமானது, தொடர்புகளில் ஏற்படும் நெருக்கடிகள், மனச்சங்கடத்தை, கோபத்தை மூட்டினும்கூட, இயக்கத்திற்கு ஊறு நேரிடத்தக்க முறையிலும், எதிரிகள் ஏளனம் செய்து நம்மை முறியடிக்கக்கூடிய வகையிலும், நமது சொல்லும் செயலும் இருத்தல் ஆகாது” என்றவர் அண்ணா.
உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போதும், அமெரிக்கா -இரஷ்யா – இங்கிலாந்து – ஸ்பெயின் – அல்ஜிரியா – பொலிவியா இத்தாலி எனச் சர்வதேச அரசியலைக் கலந்தே அவர் பேசினார். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டும் நோக்கமே அண்ணாவின் கடிதங்களில் மிகுந்திருந்தது.
பார்ப்பனர்களுக்கு எதிரானதா தி.மு.க.? நம் அண்ணா என்ன சொல்கிறார் என்று பாருங்கள். இவர்கள் வகுப்புவாதிகள், வகுப்புத் துவேஷிகள், பார்ப்பன விரோதிகள் என்று நம்மைப் பற்றி சொல்லிப் பகைமூட்டப் பார்த்தனர். ஐயா, நாங்கள் சில முறைகளை, நடவடிக்கைகளை, தத்துவங்களை, நம்பிக்கைகளை ஏற்பாடுகளைக் கண்டிக்கிறோம், நீக்க வேண்டும் என்கிறோம். ஒரு வகுப்பின் மீதோ, தனிப்பட்டவர்கள் மீதோ, பகையுமில்லை துவேஷமுமில்லை என்று விளக்கமளித்தோம், மகிழ்ந்தனரா? இல்லை; மற்றோர் பழி சுமத்தலாயினர் பார், பார்! பார்ப்பனருக்கு அடிமைகளாக்கிவிட்டார்கள் என்று கூறத் தலைப்பட்டனர். தம்பி! இப்படியே ஒவ்வொன்றாக அலசிப் பார்த்தால் தெரியும். 24 மணி நேரமும் என்ன பழி சுமத்தலாம்? எத்தகைய எதிர்ப்பு மூட்டலாம்? என்று அலைகிறார்கள், மாற்றார் என்பது.
இப்படி தம்மைச்சுற்றி நிகழ்ந்தவற்றை மிகச்சரியாகப் பேரறிஞர் அண்ணா புரிந்துகொண்டமையாலேயே, தி.மு.க.வை யாராலும் அசைக்கமுடியாத மாபெரும் கோட்டையாகக் கட்டியெழுப்ப அவரால்முடிந்தது. அண்ணா வழியில் நடந்த தம்பி கலைஞர் என்பதைக் கலைஞரின் கடிதங்களால் நன்குணர முடிகிறது. ஓரிடத்தில் கலைஞர் இப்படியெழுதியுள்ளார்.
எந்த மாநிலத்திலிருந்து யார் சென்று டெல்லியிலே ‘மந்திரி மகுடம்’ சூட்டிக்கொண்டாலும், உடனடியாக அவர்களின் பேச்சும் போக்கும் மாறிவிடும் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில உதாரணங்களையும் அனுபவரீதியாகக் கண்டிருக்கிறேன்’ எனப் பேரறிஞர் அண்ணாவின் வழியில், ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்பதற்காகத் தொடர்ந்து குரலெழுப்பிய தன்மானத் தலைவர்தான் நம் கலைஞர். தம் கடிதமொன்றுக்குக் கலைஞர், ‘எதிர்ப்பு வாழ்க’ எனத் துணிச்சலாகத் தலைப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பை வாழ்த்த, எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும்? அது காலமெல்லாம் கலைஞருக்கு இருந்ததை, அவரின் கடிதங்கள் சிறப்பாகக் காட்டுகின்றன. கழக ஆட்சியைப் பற்றித் தம் கடிதமொன்றில் கலைஞர் குறிப்பிடும்போது, ‘எங்குத் தவறு நடந்து, அதனை யார் சுட்டிக் காட்டினாலும், அதனைத் திருத்தி அமைக்கவே இந்த அரசு முயற்சிகளை எடுத்துவருகிறது. கவர்னர்தான் சுட்டிக்காட்ட வேண்டுமென்று கூட இல்லை, யாரோ ஒரு கந்தன் – கடம்பன் சுட்டிக்காட்டினாலும், அதனைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கக் கழக அரசு தவறியதே இல்லை’ என்று உறுதியளித்துள்ளார்.
இந்தச் சனநாயகப் பண்புதான், கலைஞரின் ஆகப்பெரும் வலிமையாகும். அண்ணாவைப் போலவே கலைஞரும் மிகவும் நுட்பமானவர். அரசியலைப் பற்றியும் மானுட வாழ்வைப் பற்றியும் கலைஞருக்கு மிகவும் ஆழமான நடைமுறைப் புரிதல் இருந்ததை, அவரின் கடிதங்களால் அறிகிறோம். மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகச் சில மணி நேரங்கள் அனுபவிப்பது என்பது நம் வாழ்க்கையில் இல்லாமலே போய்விட்டது’ என்ற அவரின் ஒப்புதல் வாக்குமூலம், எத்தகைய நெருக்கடிகளுக்கிடையில் கலைஞர் தொடர்ந்து போராட்ட உணர்வுடன் வாழ்ந்தார் என்பதற்கான ஓர் ஆவண சாட்சியமாகும்.
கரிகாலனுக்கு விழா, இளங்கோவுக்குச் சிறப்பு, கட்டபொம்மனுக்குக் கோட்டை, வள்ளுவருக்குக் கோட்டம், காரைக்குடியில் தமிழ்த்தாய் விழா – இவைகளையெல்லாம் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழினத்தின் சிறப்பை மங்காமல் மறைக்காமல் காப்பாற்றுகிற எதனையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. அந்தப் பொறாமைக் கணைகளைத்தான் எழுத்துகளாக வடித்தெடுத்து, ஏடுகளில் வெளியிட்டிருக்கிறார்கள். பரிதாபம்! தங்கள் உடம்பில் உள்ள சிரங்கைச் சொறிந்துகொள்கிறார்கள். சொறியும்போது சற்று நிம்மதி – சொறிந்து முடித்த பிறகல்லவா எரிச்சல் கிளம்பப்போகிறது! அதுவரையில் அவர்கள், அந்த அற்ப மகிழ்ச்சியை அடைந்துகொள்ளட்டுமே.
இவர்தான் கலைஞர். அற்ப மகிழ்ச்சியைத் தம் எதிரிகள் அடைந்துகொள்வதை அனுமதித்தவர் அவர். அத்துடன், தம் உடன்பிறப்புகளைப் பற்றிய தெளிவான ஒரு புரிதலும் அவருக்கிருந்தது.
உனக்கிருக்கும் தொல்லைகள் ஒன்றா இரண்டா? ஓராயிரம் அல்லல்களுக்கிடையே, நீ அலைந்துதிரிந்து – அண்ணன் உருவாக்கிய கழகத்தைக் காத்திடும் தொண்டினை ஆற்றிக்கொண்டிருக்கிறாய். அதை எண்ணும்போது, எனக்கு இருக்கும் ஓயாப் பணிகளைக்கூட அயராது நிறைவேற்றுகின்ற தம்பியினைப் பெறுகிறேன். என் களைப்புப் போக்கும் மாமருந்தாக, உன் உழைப்பின் வெற்றிகள் அமைந்துவருகின்றன. ஏதேதோ நடந்தபோதெல்லாம் நாம் அழிந்துவிடவில்லை; நமது தமிழ் உணர்ச்சி குன்றிவிடவில்லை; உரிமைக்குரல் ஓய்ந்துவிடவில்லை. எது நடந்திட்டாலும் எத்தகைய எதிர்ப்பு நம்மை மோதிட்டாலும் – அண்ணனை நெஞ்சில் பதியவைத்துக்கொண்டிருக்கும் நாம், அமைதிவழி நிற்போம்.
என்றவரே கலைஞர். அண்ணாவின் அமைதிவழியைத் தம் வாழ்நாளெல்லாம் கலைஞர் பின்பற்றினார். அவருக்கு எது முக்கியமானதாக இருந்தது தெரியுமா? அவரே சொல்வதைக் கேட்போம்.
‘உடன்பிறப்பே! கழகத்தைக் கோட்டை சிம்மாசனத்திலிருந்து ஒருவேளை இறக்கிவிடலாம்: ஆனால், நமது கழகம் கொலுவீற்றிருக்கும் மக்களின் இதயச் சிம்மாசனத்தை அவர்கள் அறிய மாட்டார்கள்.’
என்றவர் கலைஞர், மேலும் கலைஞர், ‘வன்முறைகளைக் களைந்துவிட்டு நன்முறைகளாகக் கடைப்பிடிக்க, நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்’ எனத் தம் கடிதமொன்றில் எழுதியிருப்பதும், இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். கலைஞரின் கடிதங்களைப் பற்றி ஒரே தொடரில் சொல்ல வேண்டுமானால், அவரே கடிதமொன்றுக்குத் தலைப்பிட்டது. போலவே, ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை’ எனக் கூறிவிடலாம். கலைஞரின் கடிதங்களில் கோபமுண்டு; வீரமுண்டு; பரிவுண்டு; பாசமுண்டு நையாண்டியுண்டு; அன்புண்டு; பண்புண்டு; நம்பிக்கையுண்டு; வெறியில்லை ‘உடன்பிறப்பே! தொடர்ந்து நான் எழுதுகிற கடிதங்களை, நீ படித்துக் கொண்டுதான் வருகிறாய். அவை உன் உள்ளம் ஊக்கம் பெற வேண்டும் என்று நினைத்து எழுதுகிறேனேயல்லாமல், வெறி உணர்ச்சியைத் தூண்ட வேண்டுமென்ற எண்ணம் கிஞ்சிற்றும் இல்லை எனக்கு’ என்றெழுதியுள்ளார் கலைஞர். அண்ணாவும் கலைஞரும் தமிழ்நாட்டின் கண்கள் என்பதையே, அவர்களின் கடிதங்களால் நாம் அறிகிறோம். ஒருதாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும், ‘அவர் அண்ணா; இவர் தம்பி’ என்ற அந்த ஓருணர்வைக் காலமெல்லாம் தமிழ் மக்கள் உணரும் வகையில் இக்கடிதங்கள் உறுதிசெய்கின்றன எனலாம்.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிராமங்களில் முழங்கிய பெருங்குரல்கள்!



