எம்.ஜி.ஆர் வாக்குகளை கவர அவரது பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை, ஜெயலலிதா வாக்கு வங்கியான பெண்களை கவர மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை மற்றும் அதன் பின்னணி குறித்து தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எந்த கட்சியின் பொதுக்குழுவாக இருந்தாலும் தேர்தலை ஒட்டிய பொதுக்குழுவுக்கு வாக்கு சேகரிப்பதுதான் நோக்கமாகும். அதில் மாற்றுக்கருத்து வைக்க வேண்டாம். திமுக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், அதற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனாலும் வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்குகள் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். பலமுனை போட்டி என்று வந்தால், 30 சதவீத வாக்குகளே போதும் திமுக வெற்றி பெற்றுவிடலாம். மதுரையில் முதல் நிகழ்வு முத்தண்ணன் சிலை திறப்பு நிகழ்வு ஆகும். மதுரையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடம்பெயர்ந்துள்ளது. அப்போது, அந்த சமுதாயத்தின் வாக்குகளை மீண்டும் திமுகவுக்கு இழுக்க வேண்டும் என்று முதலமைச்சர் திட்டமிடுகிறார்.
முத்தண்ணன் திமுகவில் மதுரை நகராட்சியின் தலைவராகவும், மாநகராட்சியாக மாற்றப்பட்டபோது மேயராகவும் இருந்துள்ளார். அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் மன்றத்திற்கு அவர்தான் நிதியுதவி செய்து வந்தார். 1972ல் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது, கலைஞர் கட்டளைக்கு இணங்கி அனைத்து மன்றங்களையும் கலைத்துவிட்டார். எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை நாங்கள் வெளியிட முயன்றதால், அவருக்கு எங்கள் மீது கடும் கோபம் ஏற்பட்டது. மதுரையின் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் முத்தண்ணன். அவர் திமுகவை விட்டு விலகியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தற்போது மதுரை பொதுக்குழு அவருக்கு ஒரு வெண்கல சிலை வைத்து, 30 சதவீதம் இலக்கு நிர்ணயித்து அந்த சமுதாய வாக்குகளை பாஜகவில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் விலகி திமுகவின் பக்கம் வந்துவிடும். இது ஒரு மைக்ரோ அனாலிசிஸ் ஆகும். ஆளுங்கட்சியின் பொதுக்குழு மிகப்பெரிய அளவில் தான் நடைபெறும். ஆனால் அதை பயன்படுத்தி வாக்கு வங்கியை இப்படி இப்படி பெருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
ஒரு பெரிய கால்குலேஷனை வந்து, ஃபீட்பேக்கை கீழிருந்து கொடுக்க வேண்டும். கலைஞருக்கு ஃபீட்பேக் தாமாகவே தெரியும். இந்த ஊரில் இந்த நிலைமை என்று அவருக்கே நன்றாக தெரியும். ஸ்டாலின் அப்படி இல்லை. அவர் கலைஞரின் மகன் என்பதால் மேல்மட்டத்தில் இருந்தே வருகிறார். அவருக்கான ஃபீட்பேக் என்பது கீழ்மட்டத்தில் இருந்து அதிகளவு வருகிறது. அப்படி இல்லாமல் இவ்வளவு நுணுக்கமான விஷயத்தை செய்ய முடியாது. 1972ல் மதுரையில் திமுக மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளில் எம்.ஜி.ஆர் வர வேண்டும். ஆனால் மு.க.முத்து யானை மீது அமர்ந்து திமுக கொடியை ஏந்தி வருகிறார். இதனால் எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாம் ஆத்திமடைந்தோம். அப்படியே மன்றம் கலைந்தது. பின்னர் சண்டையாகிறது. திமுக எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கமாக இழுத்துவிட்டது. எம்ஜிஆர் பிறந்தநாள் இன்றைக்கு விடுமுறை நாளாகும். ஜெயலலிதாவின் வாக்கு வங்கி என்பது பெண்கள். அவர்களை மாதம் ஆயிரம், இலவச பயணம் என பெண்களை கவரும் பல்வேறு திட்டங்கள் மூலம் திமுக இழுக்கிறது. இது படுபயங்கரமான மைக்ரோ அனாலிசிஸ் ஆகும்.
பாஜக கூட்டணி இனிமேல் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்தவர் ஜெயலலிதாதான். அவரது மரணத்திற்கு பின்னர் வந்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் தயவோடுதான் ஆட்சி செய்தார். நடுவில் இப்போது ஒன்றரை ஆண்டுகள் தான் இடைவெளி இருந்தது. மோடி, எடப்பாடியை தங்கள் கூட்டணியின் தென்னிந்தியாவின் முகம் என்று சொன்னார். திமுக தொடக்கம் முதலே முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன என்றால் அதிமுக – பாஜக இடையே மறைமுக கூட்டணி உள்ளது என்பதுதான். தற்போது அது உறுதியாகி உள்ளது. அப்போது, பாஜகவுக்கு எதிரான வாக்குகள், வலதுசாரிகளுக்கு எதிரான வாக்குகளை திமுக ஓரணியில் திரட்டுகிறது. ஏற்கனவே தேசிய கட்சியான காங்கிரஸ் உள்ளது. அப்போது, திமுகவுக்கு எதிரான அதிருப்தியில் உள்ளவர்களும், பாஜக வந்துவிடும் என்ற அச்சத்தில் திமுக கூட்டணிக்கே வாக்களித்துவிடுவார்கள்.
திமுக மட்டும்தான் பாஜகவை எதிர்க்கும் வலிமை உள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். மாற்று என்று சொல்லிக்கொண்டு நிறைய பேர் வருவார்கள். எத்தனை பேர் வந்தாலும், திமுகவுக்கு தான் அந்த வலிமை உள்ளது என்று மறந்துவிடாதீர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால்தான் அவர் கோமாளி அரசியல் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். மறைமுகமாக அவர் குறிப்பிடுவது விஜய் தான். அந்த வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்துவதற்கு காரணம் பாஜக வராமல் தடுக்க ஒரே வழி திமுக தான். திமுகவை ஆதரிப்பதுதான் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது சரியானதுதான். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிற திமுக, மத்திய அரசை தான் எதிர்த்து ஆக வேண்டும். பாஜகவின் வலதுசாரி சித்தாந்தத்திற்கு இங்கே எதிர்ப்பு அதிகம். பாஜக எதிர்ப்பு வாக்குகள் என்பது 90 சதவீதம், ஆதரவு 10 சதவீதம். சட்டமன்றத் தேர்தல் என்று வருகிறபோது எனது கணிப்பின்படி பாஜகவுக்கு மட்டும் 15 சதவீத ஆதரவு வரும். எதிர்ப்பு என்பது 85 சதவீதம் வரும். இந்த 85 சதவீத எதிர்ப்பு என்பதில், திமுக எதிர்ப்பும் அடங்கும். ஆனால் பாஜக வரக்கூடாது. இது ஒரு புத்திசாலிதனமான கணக்கீடு ஆகும். 85 சதவீத எதிர்ப்பில் நம்முடைய எதிர்ப்பும் அடக்கம், நம்முடைய ஆதரவும் அடக்கம். அப்போது, 85 சதவீத வாக்குகளை நாம் ஈர்க்க வேண்டும். அதற்கு பங்குபோட யாராவது வந்தால் அது கோமாளி அரசியல் ஆகும். இப்படியான கண்ணீடு உள்ளது.
அண்ணா கதை, வசன எழுதிய நல்லத்தம்பி படத்தில், நாட்டை திருத்த நாகரிக கோமாளி வந்தேனய்யா என்கிற பாடல் வரும். என்.எஸ்.கே. நடித்த அந்த பாடலில் நாகரிக கோமாளி நாட்டை திருத்த முடியுமா? என்கிற கேள்வியை வைத்திருப்பார். ஏனென்றால் நாகரிக கோமாளிகளுக்கு இயல்பாகவே சித்தாந்தகளின் மீது அவர்களுக்கு எவ்வளவு பிடிப்பு இருக்கும். விஜய் போன்றவர்களும், அவரை சார்ந்து இருக்கிற கட்சியினரும் சித்தாந்தங்களுக்காக எந்த அளவுக்கு தியாகம் செய்வார்கள் என்கிற கேள்விக்குறி உள்ளது. காரணம் அவர்களுக்கு சித்தாந்த பயிற்சி இல்லை. எம்ஜிஆர் மன்றத்திற்கு அரசியல் பயிற்சி இருந்தது. அதனை விஜய் மன்றத்தோடு பொருத்தி பார்க்கக்கூடாது. பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால், திமுகவையும் நாங்கள் எதிர்க்கனும், பாஜகவையும் எதிர்க்கனும் அதனால் விஜய்க்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்கிவிடாதீர்கள் என்றுதான் சொல்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.