தமிழுக்காக தமிழர் நலனுக்காக ஒரு வரலாறாக வாழ்ந்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாள் விழாவாக முன்னெடுப்பது சிறப்புக்குரிய விஷயம் என்று சுகிசிவம், கவிதா ஜவகர், மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோா் பெருமிதம் கொண்டு செம்மொழி நாள் புகழரங்க நிகழ்ச்சியில் பேசினாா்கள்.கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவையொட்டி
“கருத்தால் உயர்ந்த அறிஞர், காலத்தை வென்ற கலைஞர்” என்ற தலைப்பில் கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் செம்மொழி நாள் புகழரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற இந்தப் புகழரங்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பட்டிமன்ற பேச்சாளர்கள் சுகி சிவம், பாரதி பாஸ்கர், கவிதா ஜவகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகழுரைத்தனர்.

கலைஞரின் கம்பீரம் என்ற தலைப்பில் பேசிய கவிதா ஜவஹர்….என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பு என்ற கலைஞரின் வார்த்தை இமயத்தை தாண்டி நிற்கிறது. ஆண்,பெண், குழந்தைகள் என்று அனைத்து தரப்பிற்கும் பொருந்தும் வார்த்தையாக இது உள்ளது. தமிழை பற்றி படிக்க விரும்புபவர்கள் கலைஞரின் பேனா என்னும் புத்தகம் வாங்கி படிக்க வேண்டும். தனக்கு கிடைத்த வெற்றி தோல்வியை நாணயத்தின் இரு பக்கம் போல் பார்த்தார். அது தான் அவரின் கம்பீரம். அடுத்து என்ன நடக்கு போகிறது என்ற எதிர்கால சிந்தனையில் ஆழ்ந்த கவனம் செலுத்தியவர் கலைஞர்.
கலைஞரின் கம்பீரத்திற்கு அவரின் கனிவும் முக்கிய காரணம் எங்கே கம்பீரம் காட்ட வேண்டும் எங்கே கனிவு காட்ட வேண்டும் என்று தெரிந்து எல்லோரிடத்திலும் பழகியவர் கலைஞர். இந்தியா தொடங்கும் இடம் காஷ்மீர் என்று இருந்த வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி வைத்த பெருமை கலைஞரையே சேரும். எந்த சூழலையும் தன்னுடைய பேனாவால் எதிர் கொண்டவர். சினிமாவில் மட்டும் இல்லை நிஜத்திலும் கலைஞர் ஹீரோவாக தான் வாழ்ந்தார். தமிழனின் சொத்து உயிரை தாண்டி தன்மானம் தான் என்று எடுத்து சொன்னவர் கலைஞர்.
கலைஞரின் வசனம் என்ற தலைப்பில் பேசிய பாரதி பாஸ்கர்….ஒரு நூற்றாண்டு காலம் அரசியல், சினிமா என பல துறைகளில் மைய புள்ளியாக இருந்தவர் கலைஞர். புத்தகங்களின் காதலனாக கடைசி வரை இருந்த கலைஞர். உடனுக்கு உடன் கேள்விக்கு பதில் அளிக்கும் ஆற்றல் பெற்றவராகவும், மேடை பேச்சாளர். எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். எதிர் தரப்பாக இருந்தாலும் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டின் தன்மை குறித்து ஆழ்ந்து ஆராய்பவர் அதில் உண்மை இருந்தால் அதனை ஏற்று கொண்டு பிரச்சனையை உடனுக்குடன் தீர்த்து வைப்பார்.
தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர்.மற்றும் சிவாஜிக்கு சிறப்பான சினிமா வசனங்களை கொடுத்தவர் தான் கலைஞர். ஏன் என்றால் கலைஞர் ஒரு மிகச்சிறந்த நாடக கலைஞராகவும் இருந்ததால் தான் அது சாத்தியம். திரை உலக வரலாற்றில் பராசக்தி பட வசனம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. வசனம் என்பது இன்றைய நாட்களில் ஒரு வரி கூட இல்லை. ஆனால் கலைஞரின் வசனம் எழுதும் போது அவர் தன்னை ஒரு நடிகராக நினைத்து தான் எழுதுவார். கலைஞரின் எழுத்துக்கு ஆயுட்காலம் என்பதே இல்லை. திருக்குறளுக்கு உரை விளக்கம் தேடி கூகுளில் தேடினால் அதில் முதல் 5 பேர்களில் கலைஞரின் பெயரும் வரும் என்பதே பெருமை தான்.
கலைஞரின் பேனா என்ற தலைப்பில் பேசிய சுகிசிவம்…வெற்றி, தோல்வி என எதுவும் தன்னை பாதிக்காத வகையில் இயல்பாக காலத்தை வென்றவர் கலைஞர். எமர்ஜென்சி நெருக்கடியை சந்தித்து பின்னாளில் யாரால் தனது ஆட்சி பறிக்கப்பட்டதோ அவர்களையே தன் கூட்டணியில் தன் பின்னால் நிற்க வைத்தவர் தான் கலைஞர். கலைஞர் வசனத்தில் என்று சினிமா படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது என்பது தமிழ் சினிமா வரலாற்றிலே வேறு எந்த வசனகர்த்தாவிற்கும் கிடைக்காத பெயர். சமயம் தாண்டி நியாயம் இருந்தால் அவர்களை கொண்டாடியவர் தான் கலைஞர்.
அமைதியாக மார்க்கத்தில் புரட்சியை ஏற்படுத்திய ராமானுஜருக்கு பெருமை சேர்த்தவர் கலைஞர். இன்றைக்கு அரசியல் காரணங்களுக்காக திமுகவை நாத்திக கட்சியாக கட்டமைக்க நினைப்பவர்களுக்கு இந்த ஆட்சியின் முருகன் மாநாடு பதில் சொல்லும். காலத்துக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து மக்களுக்கு சேவை செய்தவர் கலைஞர். பல வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்தவர் கலைஞர். தமிழுக்காக தமிழர் நலனுக்காக ஒரு வரலாறாக வாழ்ந்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாள் விழாவாக முன்னெடுப்பது சிறப்புக்குரிய விஷயம் என்றார்.