சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, விஜய் போன்றவர்களுக்கு அடுத்த இடத்தில் தான் சீமான் உள்ளார். அதனால் தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் சீமான் சாதி ரீதியான ஸ்டண்டுகளை மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்திய மாடு மாநாட்டின் பின்னணி அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை விராதனூரில் மாடுகளுக்கான மாநாடு நடைபெற்றது. பாஜக ஹரியானாவில் ஜாட் சமுதாயத்தை தவிர மற்ற அனைத்து சாதிகளையும் ஒன்றிணைப்பார்கள். அதேபோல் உத்தர பிரதேசத்தில் யாதவர்களை தவிர்த்து மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரை ஒன்று சேர்ப்பார்கள். ஏனென்றால் ஜாட்டுகள், யாதவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இதற்கு பெயர் சோசியல் இன்ஜினியரிங் என்று சொல்கிறார்கள்.
அதேபோல், தமிழ்நாட்டில் சீமான் சோசியல் இன்ஜினியரிங் செய்கிறார். தமிழ் தேசியம் என்று சொல்லிவிட்டு, தமிழ்தேசியத்தில் உள்ள சாதிகளாக பிரிப்பதன் நோக்கம் என்ன? ஒவ்வொரு சாதிகளுக்கும் ஒரு பிரச்சினை இருக்கும். அதை சரிசெய்வது தான் அரசாங்கத்தின் வேலையாகும். அதை தவிர்த்து எல்லோருக்கும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன. அரசு எல்லோருக்கும் சேர்ந்துதான் அரசாங்கம் கவனிக்கும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. போன்ற குறிப்பிட்ட சமூகத்தினரின் வளர்ச்சிக்கு இடஒதுக்கீடு வழங்கலாம்.
ஆனால் சீமான் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளை கவர்வதற்காக கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். மாறிவரும் சூழலில் பனைசார்ந்த தொழில்கள் வர்த்தகமயமாகி விட்டன. கருப்பட்டி தொழில் என்பது பெரிய துறையாக மாறியுள்ளது. முன்பு கள் இறக்கும் தொழிலை நம்பி இருந்தது போன்ற சூழல் தற்போது கிடையாது. மற்றொரு விஷயம் பனைமரம் உள்ள இடங்களில் எங்காவது கள் இறக்காமல் உள்ளனரா? கிராமங்களில் கள் அருந்தும் விஷயம் இன்றும் நடைபெறுகிறது. பனைமரம் ஏறுவது குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. கள் இறக்க அனுமதி அரசு வழங்கினால், அவர்கள் கள் இறக்கி பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுவார்களா? படித்து முன்னேறினால் தானே வாழ்க்கையில் மேலே வர முடியும். அதனால் கள் இறக்கினால் குறிப்பிட்ட சாதியினர் வாக்களிப்பார்கள் என்பது நடக்காது.
தற்போது ஆடு, மாடு மாநாடு கோனார், யாதவர் சமுதாய மக்களை மனதில் வைத்து செய்கிறார் என்கிறார்கள். மேய்ச்சல் நிலத்தை பாதுகாக்க வேண்டும். காடுகள், மலைகளில் கால்நடைகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சீமான் சொல்கிறார். கிராமங்களில் இருக்கும் மேய்ச்சல் நிலங்களை அந்த கிராமத்தினர்கள் தான் ஆக்கிரமித்து விளை நிலங்களாவோ, குடியிருப்புகளாகவோ மாற்றுவார்கள். உழவுத் தொழிலுக்கு துணை தொழிலாக தான் கால்நடை வளர்ப்பு உள்ளது. அனைத்து சமுதாயத்தினரும் உழவு தொழில் செய்கிறார்கள். அவர்களும் கால்நடை வைத்திருக்கிறார்கள். எனவே கோனார் சமுதாயத்தினர் மட்டும் கால்நடை வைத்திருக்கிறார்கள் என்பதில்லை. அதேபோல் பால் வியாபாரம் செய்பவர்களும் கால்நடை வைத்திருக்கிறார்கள். பால் பண்ணை வைத்திருப்பவர்களும் குறிப்பிட்ட சாதியினர் வைத்திருப்பார்கள் என்பது தவறாகும். முதலில் அந்த அந்த தொழிலை அந்த அந்த சாதியினர் தான் செய்வார்கள் என்கிற மனோபாவமே மிகவும் மோசமானதாகும். கோனார் சமூகத்தினர் தான் மாடு வளர்க்கிறார். பால் விற்கிறார் என்கிற மனோபாவமே மோசமாகும்.
மக்கள் தொகை வளர வளர எல்லோரும் எல்லா தொழில்களையும் செய்ய தொடங்கி விட்டார்கள். இன்றைக்கு சென்னையில் முடி வெட்டுபவர்கள் எல்லாம் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களா? அதற்கான வாய்ப்புகள் கிடையாது. இதேபோல் தான் பனை தொழிலும், பால் தொழிலும் உள்ளன. சீமானின் கண்ணோட்டம் என்பது தவறானது. அவருக்கு ஒரு சாதிவெறியன் ஆலோசனை வழங்குகிறார் என்று நினைக்கிறேன். சீமான் தமிழ் தேசியம் பேசுவதும் நல்ல விஷயம். பிரபாகரனுடைய தீவிர பற்றாளர்களை தன் பக்கம் இழுக்கிறார். அதேபோல் பெரியாரை எதிர்த்தால் பிராமணர்கள் வாக்களித்து விடுவார்கள்.
பறையர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கேட்டால், அவர்கள் தனக்கு வாக்களித்து விடுவார்கள். தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து எடுக்க வேண்டும் என்று சொன்னால் அவர்களும் ஓட்டுபோட்டு விடுவார்கள் என்று சீமான் நினைக்கிறார். உள்ஒதுக்கீடு வேண்டும் என்று எல்லோரும் தானே சொல்கிறார்கள். ஆனால் சீமான் சொன்னால் மட்டும் அவர்களுக்கு ஓட்டு கிடைத்துவிடுமா? முக்குலத்தோருக்கு எடப்பாடி பழனிசாமியை பிடிக்காது. அவர்கள் எல்லாம் சீமானுக்கு தான் வாக்களிப்பார்கள். அப்போது முக்குலத்தோர் சமுதாயத்தினர் தினகரனை கைவிட்டு விடுவார்களா?

சீமானுக்கு இதுவரை வாக்கு சதவீதம் உயர்ந்து வந்ததற்கு காரணம் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணியாக உள்ளார். இருவரையும் விமர்சித்து பேசுகிறார். ஆனால் பெரியாரை விமர்சிப்பதன் வாயிலாக பாஜகவுக்கு இன்னொரு வகையில் ஒத்து ஊதுகிறார். இன்றைக்கு புகழ்கிற அயோத்திதாச பண்டிதரையோ, அல்லது வேறு தலைவரையோ நாளைக்கு சீமான் விமர்சிக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது? இன்னும் 10 வருடம் கழித்து எனக்கு அன்றைக்கு புரிதல் இல்லை என்று சொல்லிவிட்டு நீங்கள் எம்.சி. ராஜாவை திட்டினால் யார் கேட்க முடியும்? ஏனென்றால் உங்களுடைய முதல் புரிதலே சரியானது இல்லையே. அதனால் சீமான் சாதிரீதியாக வாக்குகளை குவிப்பது என்பது சாத்தியமற்றது. இந்த முறை சீமானுக்கு வாக்களித்த விஜய் ரசிகர்கள் எல்லாம், அவரிடம் இருந்து ஷிப்ட் ஆவார்கள். அதனால் இம்முறை சீமான் 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் போகலாம். அல்லது 5 சதவீதம் ஆக கூட குறையலாம்.
சீமான் சாதி ரீதியாக வாக்குகளை திரட்டுகிறார். அது தவறான அணுகுமுறை ஆகும். ஆட்சியாளர்களை குறை சொல்லி, எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்கு முழு உரிமை உள்ளது. ஆனால் சாதி ரீதியாக முப்பாட்டன் முருகனை கையில் எடுப்பது, மாயன் கிருஷ்ணனை கையில் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார். தமிழ்தேசியம் என்ற ஒன்றை தொடங்கினார். அதற்காக அர்ப்பணிப்போடு இளைஞர்கள் வருகிற நிலையில், அவர்களை வளர்த்து கட்சியை முன்னெடுக்க வேண்டும். ஆனால் ஏன் சாதி ரீதியாக முன்னெடுத்து செல்கிறீர்கள். நிச்சயம் மக்கள் சாதிய ரீதியாக பார்த்து எல்லாம் வாக்களிப்பது கிடையாது. அவர்கள் அரசியல் ரீதியிலான சிந்தனையோடுதான் மக்கள் இருப்பார்கள்.
மாடுகளை வைத்து போராட்டம் நடத்தப் போகிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். அவருடைய பிரதான நோக்கம் என்பது கோனார் சமுதாயத்தினரின் வாக்குகளை பெறுவதாகும். மாடு வைத்திருப்பவர்கள் எல்லாம் அந்த சமுதாயத்தினர் கிடையாது. ஊடக வெளிச்சத்திற்காக சீமான் இதுபோன்ற ஸ்டண்டுகளை செய்கிறார். தேர்தலில் வாக்களிப்பது என்பது முழுக்க முழுக்க வேறுபட்ட விஷயமாகும். இன்றைக்கு சீமான் மேய்ச்சல் நிலத்திற்காக போராடுகிறார் என்று சொல்வார்கள். அதே தேர்தல் வந்தால் யாதவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் யாருக்கும் தெரியாது. இதுவரை சீமான் 8 சதவீத வாக்குகள் பெற்றார் என்றால், அதற்கு காரணம் இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்று இருவரையும் அட்டாக் செய்து பேசினார். ஈரோடு கிழக்கு, விக்கிரவாண்டியில் அதிமுகவின் வாக்குகளை எல்லாம் வாங்கினார்.
இன்றைக்கு திமுக, அதிமுக, விஜய் என்று மூன்று பேர் களத்தில் உள்ளனர். நான்காவதாக தான் சீமான் உள்ளார். இம்முறை உங்களுக்கான வாய்ப்பு என்பது குறையுமா? அல்லது கூடுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. உங்களுடைய வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சாதி ரீதியான விஷயங்களை கையில் எடுக்கிறீர்கள். ஆனால் தேர்தல், தேர்தலில் வாக்களிப்பது, மக்களின் பார்வை, மக்களின் அரசியல் நோக்கம் போன்றவை உள்ளன. அவற்றை வைத்து பார்க்கும்போது, இம்முறை நீங்கள் ஆடு, மாடுகளை திரட்டி பேசினாலும், வெவ்வேறு சாதிகளை குறிவைத்து பேசினாலும் அது எவ்வளவு தூரம் உங்களுக்கு பலன் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சாதி மட்டுமே என்றைக்கும் வெற்றியை தீர்மானிக்காது என்பது முக்கியமான விஷயமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.