ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் !!
நமது சமூதாயம் சிறிது சிறிதாக சிதைந்து வருவதற்கு ஆவடியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆவடியில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக போன்ற அரசியல் கட்சியினர் சமூதாயத்தின் மீது அக்கறை இருப்பதாகக் கூறிக் கொள்ளும் சமூக ஆர்வாளர்கள் அனைவரும் பொதுநலனில் சிறிதும் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.
அரசியல் வாதிகள் நேரடியாக தவறு செய்யக் கூடியவர்களாகவோ அல்லது கண்டுங்காணாமல் அந்த தவறுக்கு உடந்தையாகவோ இருக்கிறார்கள்.
பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அரசு துறை இயங்கும் என்ற எழுதப்படாத விதியை ஏற்படுத்தி, அரசு நிர்வாகத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள். இந்த சீரழிவும், சமுதாய சிதைவும் கடந்த 10, 15 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
உங்களையும் என்னையும் வழிநடத்தக் கூடிய அரசியல் வாதிகளிடம் சுயநலம் அதிகரித்து விட்டது. பேராசை பிடித்த பேய் போல் கிடைப்பதெல்லாம் அள்ளி பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள். இந்த கொடுஞ்செயலை துளியும் வெட்கப்படாமல் செய்கிறார்கள். அடுத்த தலைமுறைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ஊரில் காலியாக இருக்கும் அரசு இடத்தை கண்டுவிட்டால் அதனை அவர்களுக்கு சொந்தமாக்கிக் கொள்கிறார்கள்.
அப்படி செய்ய முடியாத இடத்தை அதிகாரிகளுடன் சேர்ந்து விற்பனை செய்து விடுகிறார்கள். ஆவடியில் அடுத்த தலைமுறையினர் பயன் படுத்த வேண்டிய பொது நிலத்தை அரசியல் வாதிகள் பகீரங்கமாக மடக்கி விற்பனை செய்கிறார்கள். அவருக்கு பின்னால் கட்சி இருக்கிறது, பிரச்சனை என்றால் பத்துபேர் வந்து நிற்பார்கள் என்ற தைரியத்தில் அந்த காரியத்தை செய்கிறார்கள்.
இப்படி மோசமடைந்து வரும் சமுதாயம் தனி மனிதனின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் சுரண்டி, அதன் மூலம் வரும் வருவாயை வைத்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தனி மனிதன் மீது சொத்துவரி போன்ற பல விதமான வரிகளை சுமத்தி தனி மனிதனின் உழைப்பை சுரண்டுகிறது. ஆனால் அந்த தனி மனிதனின் பிரச்சனையை சமுதாயம் காது கொடுத்து கேட்பதற்கு தயாராக இல்லை.
தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இருக்கும் இடைவேளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமுதாயத்தின் கட்டமைப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நாடு முழுவதும் இந்த பேராபத்து நிகழந்து கொண்டு இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் சிறிது அதிகமாகவே இருக்கிறது.
தனி மனிதனின் பிரச்சனையை, துயரத்தை காது கொடுத்து கேட்டு, அதற்கான தீர்வுகளுக்கு வழி ஏற்படுத்தி தரவேண்டிய அரசு இயந்திரம் முற்றிலும் செல் அரித்து விட்டது. அதனால் ஒவ்வொரு மனிதரும் விரக்தி அடைந்து, செய்வதறியாமல் தவிக்கிறார்கள்.
தனி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர் பெற வேண்டும். அப்பொழுதான் ஒரு மாறுதல் ஏற்படும். எண்ணம், சிந்தனை செயல் அனைத்திலும் மாறுதல் வேண்டும். நீங்கள் தான் சமுதாயம், நீங்கள் இல்லாமல் சமுதாயம் இல்லை. உங்கள் எண்ணங்களில் மாறுதல் நிகழ்ந்தால், சிந்தனையில் மாறுதல் ஏற்பட்டால் சமுதாயமும் மாறுதல் அடையும்.
இடதுசாரி இயக்கத்தினர், வலது சாரி இயக்கத்தினர் மற்றும் சில கொள்கை வாதிகள் ஒரு கருத்தை மையமாக வைத்து இயங்கக் கூடியவர்கள். அவர்களால் பெரியதாக எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டது இல்லை. புறத்தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவது போல் தோற்றம் அளிக்கும். ஆனால் அவர்களால் சமுதாயம் வன்முறை காடாகத்தான் மாறியிருக்கிறது.
அவர்களின் தலைமை கட்டளையிட்டால் தான் நமது ஊரில் நடக்கும் மோசடிகளை, அத்துமீறல்களை கேட்பதற்கு முன்வருவார்கள். அவர்களின் தலைமை மோசடி கும்பலுக்கு ஆதரவாக இருந்துவிட்டால் அதுவும் நடக்காது. புறத்தோற்றத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதால் பெரியதாக மாற்றம் எதுவும் நடந்து விடாது.
உங்களின் மனதில், எண்ணத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். உள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். உங்கள் உள் மனதில் மாறுதலுக்கான புரட்சி ஏற்பட்டால் மட்டுமே சமுதாயம் மாற்றத்திற்கு சாத்தியமாகும்.
நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று அடுத்த தலைமுறைகள் நாம் வாழும் நிலத்தில் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். அதுதான் நமது பணிகளில் முதன்மையானதாக இருக்க வேண்டும்.
நாம் இப்பொழுது மாற்றத்தை விரும்பவில்லை என்றால், மாற்றத்திற்கு தயாராகவில்லை என்றால் நமது அரசியல் வாதிகள், சித்தாந்த வாதிகள் இதனை மனிதர்கள் வாழுவதற்கு தகுதியற்ற பூமியாக மாற்றிவிடுவார்கள்.
உங்கள் பிரச்சனை என்ன என்று ஆட்சியாளர்கள், அரசியல் வாதிகள் காது கொடுத்து கேட்கமாட்டார்கள். புரிந்துகொள்ளவும் முன்வரமாட்டார்கள். ஆனால் சாதி அரசியலையும், மத அரசியலையும், இன அரசியலையும் பேசி மேலும் மேலும் உங்களை குழப்பத்தில் வைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலத்தில் அரசியல் வாதிகளால் ஏற்பட்ட மாற்றத்தை விட, அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் அதிகம்.
ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 1993 ல் தோன்றியது. தற்போது வரை அந்த மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஒரு இருக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். 30 ஆண்டுகள் அந்த மக்கள் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்து, ஆர்ப்பாட்டம் செய்தும், போராட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
வீட்டுவசதி வாரியம் என்ற அரசுதுறை, ரியல் எஸ்டேட் வியாபாரியை விட மோசமாக நடந்துக் கொள்கிறது. ஏரியை மடக்கி வீட்டுமனையாக விற்பனை செய்ய தெரிந்த அரசுதுறைக்கு அந்த மக்களின் கழிவுநீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க தெறியவில்லை. இதனை எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. இதுதான் இவர்களின் செயல்பாடு.
நாம் அவர்களிடம் அடிமையாகி விட்டோம் அல்லது அவர்கள் நாம் எல்லோரையும் அடிமையாக வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் பேசும் பேச்சில், அவர்களின் கருத்தில், அவர்களின் கொள்கையில், அவர்களின் மதம் அல்லது சாதியில் நாம் அடிமையாகி விட்டோம். அதுவே நமது பலவீனம். அவர் நமது கொள்கைக் காரர், நமது மதத்தை சார்ந்தவர்,நமது சாதியை சேர்ந்தவர் என்று நாம் அவர்களிடம் அடிமையாகி விட்டோம். அதனால் அவர்கள் எதை செய்தாலும், ஊரையே விற்றாலும், நாசம் செய்தாலும் நம்மால் கேட்கமுடியாது.
ஏனென்றால் அவர் நமது கொள்கைகாரர், மத்தத்தை சார்ந்தவர். அதனால் கேட்கமாட்டோம். அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. அந்த அடிமை மனநிலையில் இருந்து விடுதலை அடைந்தால் மட்டுமே நீங்கள் சுதந்திர மனிதனாக மாறமுடியும். அவர்களிடம் இருந்து நமக்கு விடுதலை வேண்டும் என்றால் நாம் மனதளவில் மாற்றங்களை விரும்ப வேண்டும்.
(தொடர்ந்து பேசுவோம்)
– என்.கே.மூர்த்தி