கோத்தகிரி அருகே பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி சோலூர் மட்டம் பகுதியை சேர்ந்தவர் முரளி (31). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு மாமரம் சேர்ந்த பள்ளி மாணவி பள்ளிக்கு செல்ல கோத்தகிரி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, தனது நண்பர் கோபால கிருஷ்ணனுடன் காரில் சென்று மாணவியை கடத்தி சென்றுள்ளார். குன்னூர், ஊட்டிக்கு சென்ற பின்னர் கோபாலகிருஷ்ணனை இறக்கி விட்டு, சிறுமியை காரமடை புஜங்கனூரில் உள்ள ஒரு பணிமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கிருந்து காவலாளியிடம், தனது உறவினர் பெண் என்றும், இரவு நேரமாகிவிட்டதால், தங்கி காலையில் சென்றுவிடுவதாக கூறியுள்ளார். சிறுமி திருமண வயதை அடையாதவர் என்று தெரிந்தும், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமியை குஞ்சப்பனை பள்ளி அருகே இறக்கி விட்டு, இது குறித்து யாரிடமும் கூற கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி அச்சத்தில் தாயாரிடம் நடந்த சம்வத்தை கூறியுள்ளார். இது குறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடத்தலில் ஈடுப்பட்ட முரளி, கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. இந்த வழக்கு மீதான தீர்ப்பை நீதிபதி செந்தில்குமார் வழங்கினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முரளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், கோபாலகிருஷ்ணன் குற்றவாளி இல்லை என்பதால் அவரை விடுத்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.