தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் மே 31ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.
மே 31ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்தத் தவறினால், அதன் பின்னர் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரூ.10 வீதம் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இந்த திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் முழுமையாக அமல்படுத்த இயலவில்லை என்று கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், மதுபாட்டில்களுக்கு கியூஆர் (QR) கோடு பொருத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டால், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது என்று குறிப்பிட்டனர். மேலும், ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் என்ன பிரச்சினை என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டாஸ்மார்க் காலி பாட்டில் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் – நீதிமன்றத்தில் அரசு உறுதி…
