

இந்தியாவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் யார் யார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், கடந்த 2019- ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019- ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடகா அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறைத் தெரிவித்திருந்தது.
ஹவாலா பணத்தைக் கையாண்டது தொடர்பான பண மோசடி வழக்கில், கடந்த 2022- ஆம் ஆண்டு மே மாதம் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. கடந்த 2022- ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கு வங்கம் மாநிலம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், அம்மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறைக்கு நியமனம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதேபோல், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி, கடந்த 2022- ஆம் ஆண்டு முதல் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2023- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
இதே வழக்கு தொடர்பாக தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகள் கவிதாவும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். நிலங்களை வாங்கிக் கொண்டு ரயில்வேத்துறையில் பணி நியமனம் செய்ததாகக் கூறி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.