
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கொண்டு வந்தனர். அதன் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 10) தொடர்கிறது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகளுக்கு, ஆளும் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதனால் மக்களவையில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை – தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
குறிப்பாக, பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் தி.மு.க.வைக் குறி வைத்துப் பேசி வருகின்றனர். அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, “நீதித்துறையை பா.ஜ.க. கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ஊழலைப் பற்றி பேசும் போது, தி.மு.க.வைப் பாருங்கள் என காங்கிரஸ் கட்சிக்கு கூறினார். ஆ.ராசா விரைவில் கைது செய்யப்படுவார்” எனவும் எச்சரித்தார்.
அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அவையில் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்த நிலையில், விரைவில் ED வரும் என்று கூறினார் மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி. இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மணிப்பூரில் பெண்களை அவமானப்படுத்தியதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி கவலைப்பட்டார். கடந்த 1989- ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டது குறித்து கனிமொழி பேச வேண்டும். மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான் என எங்கு பெண்கள் பாதிக்கப்பட்டாலும் கவலைப்பட வேண்டும். சிலப்பதிகாரம் நாம் அனைவரும் தமிழர்கள் என்று சொல்கிறதே தவிர திராவிடர்கள் என்று சொல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.