கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டதற்கும், 100 வீடுகள் சேதம் அடைந்ததற்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ் என்ற தொழிற்சாலையின் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி இன்று அதிகாலை வெடித்ததில், அருகிலுள்ள குடிகாடு கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கொதிக்கும் நிலையிலிருந்த இரசாயனக் கழிவுகள் புகுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொதிக்கும் இரசாயனக் கழிவு நீர் புகுந்ததால், அங்கு வாழும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களும் சேதமடைந்துள்ளன. குடிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் டேங்கர்கள் வெடிப்பதும், அதன் கழிவு நீர் ஊருக்குள் நுழைவதும் வாடிக்கையான நிகழ்வுகளாகி விட்டதாகவும், ஆண்டுக்கு இருமுறையாவது இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகவும் அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்போது பெரிய அளவிலான டேங்கர் வெடித்திருப்பதால் பாதிப்பு அதிகமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய தொழிற்சாலைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதும், ஆபத்தான தொழிற்சாலைகளில் முறையாக பாதுகாப்பு தணிக்கை செய்யப்படாததும் தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். இத்தகைய விபத்துகள் ஏற்படும் போது, அதை மூடி மறைப்பதில் தான் அதிகாரிகளும், அரசும் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை அகற்றுவது குறித்து சிந்திக்க மறுக்கின்றனர்.

எண்ணூர் பகுதியில் உள்ள உரத் தொழிற்சாலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமோனியா வாயு கசிந்ததால், ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், கடலூர் சிப்காட் விபத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு ஆணையிடுவதுடன், குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மூட ஆணையிட வேண்டும்.
சிப்காட் தொழிற்சாலையில் டேங்கர் வெடித்ததால் பாதிக்கபட்ட பகுதிகளில் இருந்து இரசாயனக் கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளாா்.
சிங்காரச் சென்னை 2.0… தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் தத்ரூப சுவர் ஓவியங்கள்…