7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருந்தால் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார் என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.கேரள மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட ஒருவர் வழக்கறிஞராக பயிற்சி பெறவில்லை எனக்கூறி நியமன ஆணையை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவின் படி கடந்த 2021-ம் ஆண்டு கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதன் பிறகு இது தொடர்பான விரிவான விசாரணைகள் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்விலும், பின்னர் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டு வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாரி தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருந்தால் மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
அதே வேலையில் ஒருவர் 5 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி விட்டு பின்னர் 10 ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினால் அவர் மாவட்ட நீதிபதிக்கு தகுதி பெறமாட்டார். ஏனெனில் அந்த 10 ஆண்டு இடைவெளி என்பது அவர் வழக்கறிஞர் பணியில் இருந்தே முழுமையான துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என கருத முடியும். எனவே 7 ஆண்டு தகுதி என்பது தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்துவதாக நீதிபதிகள் தீர்ப்பு வாசிப்பின் போது சுட்டிக்காட்டினர்.

மேலும் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை தடுப்பது என்பது நீதித்துறை அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்து முடித்த நீதித்துறை அதிகாரிகள் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு தகுதி உடையவர்கள் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அனைவருக்குமான சம நிலையை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி பதவி விண்ணப்பத்திற்கான குறைந்தபட்ச வயது 35 என விண்ணப்ப தேதியில் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளும் உயர்நீதிமன்றங்களுடன் கலந்து ஆலோசித்து இன்னும் 3 மாத காலத்திற்குள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப விதிகளை திருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
தவெக தலைவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது…