spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது – அன்புமணி விமர்சனம்

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது – அன்புமணி விமர்சனம்

-

- Advertisement -

ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு, 5 ஆண்டுகளில் கூட அவ்வளவு நியமனம் இல்லை, வேலை தேடும் இளைஞர்களுக்கு திமுக மிகப்பெரிய துரோகம் செய்கிறது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாா்.இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது – அன்புமணி விமர்சனம்மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில்  8144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர்.  மே மாத இறுதியில் அரசு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெறுவது இயல்பானது தான். ஆனால், அவ்வாறு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களால் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள்  ஆண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும், அவர்களுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்பதால்,  மே மாத இறுதியில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மற்ற மாதங்களில் சராசரியாக 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், அந்த இடங்களை நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா? என்பது தான் வினா ஆகும். ஆனால், அதற்கான பதில் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது தான்.

we-r-hiring

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை ஒட்டுமொத்தமாகவே 70 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிலும் கூட சுமார் 40 ஆயிரம் பேர் மட்டும் தான் நிரந்தரப்பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள 30 ஆயிரம் பேர் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவர்கள் தான்.  ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், 5 ஆண்டுகளில் வெறும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிரந்தர அரசு வேலைகளை திராவிட மாடல் அரசு வழங்குகிறது என்றால், அரசு  வேலைவாய்ப்பு வழங்கும் விஷயத்தில் இளைஞர்களுக்கு திமுக அரசு எவ்வளவு துரோகம் செய்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மேலும் 2 லட்சம் பணியிடங்களை புதிதாக உருவாக்கி அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதுடன், கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக கூடுதலாக ஏற்பட்ட சுமார் மூன்று லட்சம் காலியிடங்களையும் திமுக அரசு நிரப்பவில்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.  இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்ற பாட்டாளி மக்கள் கட்சியின்  குற்றச்சாட்டை இந்த புள்ளிவிவரங்கள்  உறுதி செய்கின்றன. 2021 தேர்தலில் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மறக்க முடியாத  தண்டனையை திமுக அரசு வழங்கியுள்ளது.

எவ்வளவு தான் சுட்டிக்காட்டினாலும்  இளைஞர்களுக்கு திராவிட மாடல் அரசு வேலை வழங்கும் என்ற நம்பிக்கை குலைந்து விட்டது. வாக்களித்த இளைஞர்களுக்கு துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வரும் தேர்தலில்  மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது உறுதி” என்று கூறியுள்ளாா்.

சமூகநீதியை படுகொலை செய்யும் திராவிட மாடல் அரசு – அன்புமணி குற்றறச்சாட்டு

MUST READ