ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களின் பணிநிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்துவதற்கு கூட அழைப்பு விடுக்காமல் அவர்களை திமுக அரசு அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு திட்டங்களை தொலைதூரத்தில் மக்களுக்கு கொண்டு செல்லும் சிறந்த பணியை மேற்கொண்டு வருபவர்கள் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் தான். ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. அதனால், வேறு வழியின்றி இப்போது காத்திருப்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டுதோறும் பணியை புதுப்பிக்கும் நடைமுறையை கைவிட்டு, 15 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்; பல்வேறு நிலைகளில் உள்ள பணியாளர்களுக்கான ஊதியத்தை ரூ.25,000 முதல் ரூ.60,000 வரை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்; காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி வழங்க வேண்டும்; வங்கிக் கணக்குகளில் ஊதியத்தை வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து தான் அவர்கள் போராடி வருகின்றனர். எந்த அங்கீகாரமும், நியாயமான ஊதியமும் இல்லாமல் பணி செய்து வரும் அவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை ஆகும். எனவே, அவர்களை மேலும், மேலும் அலைக்கழிக்காமல் அவர்களை அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும்” என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கொளத்தூரில் பொங்கல் விழா கொண்டாட்டம் … சிலம்பம் சுற்றி அசத்திய முதல்வர்…



