அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்புகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். 
பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அண்மையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற திருவிழாவை கொண்டாடி அரசு கல்வி நிலையங்களிலிருந்து சிறப்பான கல்வி பயின்று உயர்வை அடைந்த மாணவர்களின் வெற்றியை கொண்டாடியது பாராட்டிற்குரியது. தமிழக அரசு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை செயல்படுத்தி அரசு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வளவு திட்டங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே நடப்பு ஆண்டுகளில் உள்ளது.

1990 வரை தமிழ்நாட்டில் பள்ளி கல்வி என்பது அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்ட பள்ளிகள் வழியாக தான் பெரும்பாலும் கல்வி கற்பிக்கப்பட்டது. அன்று தனியார் பள்ளிகள் மிக குறைவாக தான் இருந்தன. அந்த காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் அரசு சார்ந்த பள்ளியில் தான் படித்தார்கள். ஆகவே அரசின் கவனமும் சமூகத்தின் கவனமும் அரசு பள்ளிகள் மீது இருந்தது. அரசு பள்ளிகளின் சிறப்பான செயல்பாட்டால் மாணவர் சேர்க்கை அதிகம் இருந்தது.
மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக பள்ளிகளின் தேவையை அதிகரிக்க அரசு தனியார் பள்ளிகளுக்கு அனுமதியை வழங்கியது. தனியார் பள்ளிகள் பெருகின. சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவரகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இப்படி சமூகத்தில் பலர் தம்பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்த காரணத்தினால் தனியார் பள்ளியின் ஆதிக்கம் அதிகமாக தொடங்கியது.
பெரும்பான்மையான பெற்றோர்கள் தனியார் பள்ளி மோகத்தில் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பிள்ளைகளின் சேர்க்கையை அதிகரிக்க கட்டுமான பணிகளையும், அனைத்துவித வசதிகளையும் உயர்த்தி பெற்றோர்களையும், பிள்ளைகளையும் கவர்ந்து, ஈர்த்து சேர்க்கையை கூட்டி வருகின்றனர்.
அரசு பள்ளிகள் என்றாலே தரம் குறைந்த கல்வி என்னும் ஒரு பார்வை மக்கள் இடத்திலே எழ தொடங்கி உள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையின் கண்காணிப்பில் அரசு பள்ளிகள் இருந்த வரையில் இந்த நிலை இல்லை. கல்வி பயில்வதில் சமூகநீதி இருந்தது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சதவீதம் ஆண்டுக்கு, ஆண்டு தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. அதனை கூட்டுவதற்கு அரசு பள்ளிகளில் பல முன்னெடுப்புகளை அரசும், ஆசிரியர்களும் செய்தாலும் மக்கள் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் ஆர்வம் இன்றி உள்ளார்கள். இதற்கு அரசு பள்ளிகளின் கட்டமைப்பும், அதன் சூழலும் இதற்கு பெரிய காரணமாகும்.
சமூக பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் உள்ள மற்றும் எளிய குடும்பத்தைச் சார்ந்து இருக்கின்ற மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் பயில வருகிறார்கள் என்பதை அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளியிடுகின்ற குறிப்பு மற்றும் கணக்கீட்டில் இருந்து தெரிய வருகிறது. இதிலும் பெரும்பான்மையான மாணவர்கள் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும், பட்டியலின சமூகத்தை சார்ந்த மாணவர்களாக தான் இருக்கிறார்கள். இந்த மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் கல்வியை கற்பிக்க மிகக் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை தற்போது பள்ளிகளில் நிலவி உள்ளது. மாணவர்களிடத்தில் பள்ளி கல்வி பயில்வதில் கண்டிப்பை கடைப்பிடித்தால் மாணவர்கள் பள்ளியிலிருந்து இடையில் நிற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதை ஆசிரியர் பெருமக்கள் கூறி வருகின்றனர்.
இதைப் பார்க்கும்போது பள்ளி கல்வியில் சமூகநீதி மிக தேவை என உணர வேண்டியுள்ளது. அரசு பள்ளி கல்விக்கும், தனியார் பள்ளி கல்விக்கும் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம் உள்ளது என தெளிவாகத் தெரிகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இடையே சமூக இடைவெளி ஏற்பட்டு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இவைகள் உடனே போக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.
தமிழக அரசு ஒவ்வொரு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்று, இரண்டு என மாதிரி பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக உருவாக்கியது. இந்த திட்டத்தை கொண்டு தமிழகம் முழுவதும் அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த கட்டுமானத்தை தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், போதிய இருக்கை வசதி மற்றும் அனைத்து வசதிகளை கொண்டும், போதிய ஆசிரியர்கள் மற்றும் அனைத்து கட்டமைப்புகளுடனும் தனியார் பள்ளிக்கு நிகராக உருவாக்கப்பட்டு சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாதிரி பள்ளிகளை உருவாக்கி அந்தப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தையும், மதிப்பெண்ணையும் உயர்த்தியது வரவேற்க கூடியது.
அந்த மாதிரி பள்ளிகள் ஒரு ஒன்றியத்திற்கு ஒன்று, இரண்டு தான் தற்போது வரை உள்ளன. அந்த மாதிரி பள்ளிகளை தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளும் அதே கட்டமைப்புகளுடனும், கல்வி தரத்துடனும், போதிய ஆசிரியர்களுடனும் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆர்வம் வரும். அரசு பள்ளிகள் மீதும் மதிப்பு கூடும். தனியார் பள்ளிகளை நோக்கி செல்லுகின்ற அனைத்து தரப்பு மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும். அதற்கான அனைத்து வழிவகைகளையும் பள்ளி கல்வித்துறை முன்னெடுக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாதிரி பள்ளிகலே சிறந்த பள்ளி என்பதை போக்கி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் சிறந்த பள்ளிகளாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த சிறந்த கல்வி சூழலையும், கட்டமைப்பையும், அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு பள்ளிகளில் உருவாக்கி போதிய ஆசிரியர்கள் உடன் தரமான கல்வியையும் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை தனியார் பள்ளிகளை விட மேம்பட்ட வசதிகளை அரசு ஆரம்ப பள்ளி முதல் உயர் பள்ளி வரை மேற்கொண்டு பள்ளி கல்வியில் சமூகநீதியை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும்.
பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசு பள்ளியில் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளி வளர்ச்சிக்கு புரவலராக இருந்து பள்ளி கல்வியை பயில ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் தமிழக பள்ளி கல்வித்துறை உடனே செயல்படுத்த வேண்டும். இதற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீட்டு செய்து தமிழகத்தில் கல்வி கற்பதில் சமூக நீதியை செயல்படுத்த வேண்டியது கட்டாயமாகும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!


