குமரன்தாஸ்
ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை உணர்வு பூர்வமாக எழுதுகிறான். ஆனால் பிணக் கூராய்வு (Post Mortem) செய்யப்புகும் மருத்துவர் தன்னை அப்பிணமாக நினைத்துக் கொள்வதில்லை! அப்படி நினைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை! அவரைப் பொறுத்தவரை அது ஓர் ஆய்வுக்கான பொருள் (object) அவ்வளவுதான்.
ஒரு மருத்துவர் ஒரு படைப்பாளியைப் (எடு: கவிஞனைப்) போல நடந்து கொள்வாரேயானால் நோயாளிகளின் நிலையும் மருத்துவமனையின் நிலையும் என்னவாகும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒரு பைத்தியக்கார மடம் போல ஆகிவிடாதா?

ஆனால், அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு கடந்த 10.07.2025 அன்று ஓர் அரசியல் கட்சியின் மேடையில் நடந்தேறியது! ஆம், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மாடாகவே மாறி மாடுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்! அவற்றின் தேவைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தார்!?
நீங்கள் கேட்கலாம் ‘உண்மையில் மாடுகளின் தேவை அதுதானா?, அதனை அவர் எப்படி உறுதி செய்தார்?’ என்று.
நியாயமான கேள்விதான்! ஆனால், அப்படிப் பிற உயிரினங்களின் தேவைகளை முழுமையாக உணர்ந்து கொண்டதாக நம்பித்தான் ஓராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் ஆடுகளையும், மாடுகளையும், யானைகளையும், நாய்களையும், குதிரைகளையும், பறவைகளையும் காடுகளில் இருந்து வன்முறையாகப் பிடித்து வந்து பட்டிகளில், தொழுவங்களில், கூண்டுகளில் அடைத்துக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, பூ வைத்து, பவுடர் அடித்து, ஆடை உடுத்தி, சர்க்கரைப் பொங்கலையும், சோற்று வடி தண்ணீரையும் ஊட்டி வளர்த்ததன் காரணமாக, மனிதர்களை இன்று ஆட்டிப் படைக்கும் சர்க்கரை வியாதியானது யானைகளையும், ஆடு மாடுகளையும் பாதிக்கும்படியாகச் செய்திருக்கிறார்கள்.
நாய்களைச் சங்கிலியில் பூட்டிக் கையில் பிடித்துக் கொண்டு பெருமையாகத் தெருவில் நடந்து திரிபவர்களை என்ன வென்று சொல்வீர்கள்? சங்கிலியில் பூட்டப்பட்ட நாய் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சங்கிலியைப் பிடித்துக் கொண்டிருப்பவர் நினைக்கலாம். அடிமைகளின் வேதனையை எஜமானர்கள் ஒரு போதும் உணர்வதில்லை!. அதுவும் அய்ம்பதாயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கிய வெளிநாட்டு நாய்தான் தனது அந்தஸ்தை நன்றாக வெளிக்காட்டும் என்று அய்ம்பது ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யும் மனிதர்கள் நிறைந்த நாடு இது. ஆனால், அந்த நாய்க்குத் தெரியாது தனது விலையும் அதனால் கிடைக்கும் அந்தஸ்தும்.அதே போலத்தான், தானொரு கோமாதா என்பதும், காமதேனு என்பதும் தனது சிறுநீரும், சாணமும் புனிதமானது என்கிற பைத்தியக்காரத்தனமும், தன்னை ஏசுநாதரும், கிருஷ்ணனும் மேய்த்தனர் என்று சீமான் சொல்லும் கதையும் அந்தப் பாவப்பட்ட மாடுகளுக்குத் தெரியாது! அதுமட்டுமா/ தங்களது கறி பல ஆயிரம் கோடிகளுக்கு ஏற்றுமதியாகி இந்திய நாட்டிற்கு வருமானத்தை ஈட்டித் தருகிறது என்ற தற்பெருமையும் மாடுகளுக்கு இல்லை. அதேபோல தங்களது கறியை வைத்து இருந்த ஒரே காரணத்திற்காகவே தலித் மக்களையும், இசுலாமிய மக்களையும் அடித்தே கொல்லும் கொடிய சங்கிகள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதும், அச்சங்கிகளின் மதவெறி அரசியலுக்குத் தம்மைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மாடுகளுக்குத் தெரியாது!
இப்போது பாசிச பாஜகவுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காக சீமான், ‘மாடுகளின் உரிமை மாநாடு’ என்கிற பெயரில் தங்களைத் திரட்டியுள்ளார் என்கிற கொடுமையும், விரகனூரில் 10.07.2025 அன்று கூட்டப்பட்ட மாடுகள் அறியாது! மாடுகள் மீது மட்டுமல்ல, இங்குள்ள அனைத்து உயிரினங்களின் மீதும் இந்து மதம் ஓர் கற்பிதத்தை ஏற்றி வைத்துள்ளது. இப்படித்தான் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் பிளேக் நோய் பரவி மனிதர்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்தபோது பிளேக் நோய் பரவக் காரணமான எலியை ஒழிக்க வேண்டும் என்று அரசும் மக்களும் முடிவு செய்தபோது ‘மூஞ்சுறு பிள்ளையாரின் வாகனம். எனவே அவற்றை அழிக்கக் கூடாது’ என பாலகங்காதர திலகர் தடுத்ததாக வரலாறு பதிவு செய்துள்ளது.
எருமை, எமனின் வாகனம், புலி, அய்யப்பனின் வாகனம், மயில், முருகனின் வாகனம், காளை, சிவனின் வாகனம், நாய் பைரவர் என இன்னும் எத்தனை எத்தனையோ நம்பிக்கைகள், இப்படித் தம்மைச் சுற்றியுள்ள புற உலகில் உள்ள அனைத்துப் பொருள்கள் மீதும் இது புனிதமானது அல்லது தீட்டானது. என்கிற ஒரு பாகுபாட்டை மதங்கள் ஏற்படுத்து வைத்துள்ளன. மக்களிடம் படிந்து போயுள்ளன இந்த நம்பிக்கையைத்தான் பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சீமானும் மக்களின் இந்த நம்பிக்கையைத்தான் இப்போது கையில் எடுத்து தனது அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப் பார்க்கிறார்.அதாவது, மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவை உன்னதப்படுத்துவதன் (romanticize) மூலம் தமிழ் இனம் தோன்றிய திலிருந்தே மாடுகள் மீது காதல் கொண்டிருந்தது போன்றதொரு கற்பிதத்தைக் கட்டமைக்கிறார். மனித குலத்தின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் ஆடுமாடு மேய்த்தலும் விவசாயமும் தோன்றுகிறது. அது மனிதர்களின் (சுயநலத்திலிருந்து) உணவுத் தேவையிலிருந்தே தோன்றுகிறது. அதற்குமுன் மனிதர்கள் அதே மிருகங்களை வேட்டையாடி உண்டுவிட்டு, அதன் தோல்களை ஆடையாகப் பயன்படுத்தி வந்தனர்.
மனிதர்கள் சுயநலத்தோடு தங்களது தேவைக்காக மட்டுமே மிருகங்களைப் பயன்படுத்துகின்றனர். பாரவண்டி இழுக்கும் மாடுகள் மகிழ்ச்சியாகவா இழுக்கின்றன, அதேபோல நுகத்தடியில் மாட்டப்பட்டு நிலத்தை உழும் மாடுகள் மிகவும் ஆனந்தமாக கலப்பையைச் சுமக்கின்றன என்று சீமான் கருதினால், மாடுகளின் குண்டிப்பகுதியில் குத்தும் தார் குச்சியினால் சீமானின் பின் புறத்தில் குத்தினால் தெரியும் பாரவண்டி இழுக்கும் மாடுகளின் வேதனை. உண்மையில் உழுவதற்கும், பாரம் சுமப்பதற்கும் டிராக்டர் எனும் மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப் பட்டு பயன்பாட்டிற்கு வந்தது மாடுகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் குற்றவுணர்விலிருந்து விடுதலையல்லவா?
மாடுகளை விவசாயத்திற்குப் படுத்துவதும் இயற்கையானதில்லை. அதுவும் இடையில் வந்த வழக்கம்தான். மாடுகளை விட விரைவாக, நவீனமாக, சுலபமாக வேலை செய்யும் கருவி கண்டு பிடிக்கப் பட்டுவிட்டதால் பயன்படுத்தும் பழையமுறை மாடுகளைப் பயன்படுத்தும் பழையமுறை ஒழிந்துதான் தீரும். இரும்பு கண்டுபிடிக்கப் படும்வரை மனிதன் கற்கோடரிகளைத்தான் பயன்படுத்தினான் என்பதற்காக இப்போதும் கற்கோடரிகளைப் பயன்படுத்தித்தான் காய்கறி வெட்டுவோம் என்பீர்களா?
சீமான் இப்போது மாட்டு வண்டிகளில் ஒன்றும் பயணம் செய்வதில்லை. 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் நவீன சொகுசுக் கார்களில்தான் பயணிக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஆக, தனது அன்றாடப் பயன்பாட்டுக்கும், தனது குடும்பத்தினரின் பயன்பாட்டுக்கும் நவீன எந்திரங்களையும், சொகுசான வெளிநாட்டுப் பொருள்களையும் பயன்படுத்தும் சீமான், கிராமப்புற ஏழை எளிய மக்களும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளும் பழைய வாழ்க்கையே வாழவேண்டும் என்று ஏன் சொல்கிறார் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அவ்வளவு ஏன்? அவர் வீட்டில் வெளிநாட்டு நாயையும் கிளியையும்தான் வளர்க்கிறார் என்பதையும் எண்ணிப் பாருங்கள். அதாவது அவர் பேசும் தமிழ்த் தேசிய அரசியலை அவரே பின்பற்றாத போது, மற்றவர்களைப் பின்பற்றச் சொல்வதற்கு சீமானுக்கு அருகதை உண்டா? என்பதையும் குறிப்பாக அவர் பின் செல்வோர் சிந்திக்க வேண்டும்.
அடுத்து, மாற்றம் என்பது மாறாதது! என்ற சொற்றொடர் உலகப் புகழ்பெற்ற ஒன்று. அதனை எவரும் மறுப்பதும் இல்லை. இன்று இங்கு தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மாற்றங்கள் வளர்ச்சியடைந்த மேலை நாடுகள் பலவற்றில் ஏற்கெனவே 18, 19ஆம் நூற்றாண்டுகளில் நடந்தேறியவைதான். ஆம், தொழிற்புரட்சி நடந்த நாடுகள் பலவற்றிலும் விவசாயமும், கைவினைத் தொழிலும், விவசாயிகளும் நசிவுற்றுதான் பெரிய பெரிய எந்திர ஆலைகள் முளைத்தன. உற்பத்திப் பெருக்கத்துடன் இணைந்து சரக்குப் போக்குவரத்துக்கான சாலைகள், கப்பல், ரயில், விமானப் போக்குவரத்து போன்ற உள் கட்டமைப்பு வசதிகளும் பெருகின.
அதனால் தம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள், மாசுகள், அழிவுகள் ஏற்படவே செய்தன. இந்த அழிவுகளைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவது தான் அறிவு பூர்வமான வழி ஆகும்.
இவை மனிதகுலத்தின் அறிவு வளர்ச்சியின் தொடர்ச்சியாக உற்பத்திக் கருவிகளில் ஏற்படும் வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகள் ஆகும். பழைய கைவினைஞர் வர்க்கத்தின் அழிவில்தான் பாட்டாளி வர்க்கமும் தோன்றியது.
இந்தப் போக்குகள் 1990களுக்குப் பிறகு இந்தியாவில் வேகமெடுத்தன. இதற்கு எதிர்ப்புக் குரல்களும் உருவாகின. மேலும் மேலை நாடுகளில் இல்லாத இந்தியாவில் மட்டுமே உள்ள ஒன்றான ‘ஜாதிய அமைப்பின்’ மீது இந்தத் தீவிரமான முதலாளித்துவ வளர்ச்சியானது பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்து ஜாதியச் சமூக அமைப்பில் சிதைவுகளை உண்டாக்கி, ஓடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளதை நாம் பார்க்கிறோம்.
ஆக, மேலை நாடு போன்ற ஒரு வர்க்க சமூகத்தில் தொழில் புரட்சியால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் ஒரு ஜாதியச் சமூக அமைப்பில் நவீன எந்திர சாதனங்களின் வருகையால் ஏற்பட்ட சாதகமான விளைவுகளையும் வேறு படுத்திக் காணவேண்டும். எடுத்துக்காட்டாக, நல்ல தம்பி திரைப்படத்தில் (1948இல்) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடும் பாடல் சிந்திக்கத்தக்கது. ‘பெரிய பெரிய மகான்களும் ஒழிக்க முடியாத தீண்டாமையை ஒரு ரயில் வண்டி வந்து ஒழித்து விட்டது. பார்ப்பனர் முதல் பறையர் வரை அனைவரையும் ஒன்றாகத் தன்னுள் ஏற்றிக்கொண்டு பயணிக்கிறது’ என்று பாடியதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
ஆக நவீன எந்திரங்களின் வருகையால் இயற்கை பாழ்பட்டு விட்டது என்று கவலைப் படுபவர்கள், சமூக உறவில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றிப் பேசுவதில்லை. அதுமட்டுமல்ல; சீமான் போன்றவர்கள் இயற்கையானது என்று சொல்வது அனைத்தும் மத்திய காலத்து (ராஜராஜ சோழன் காலத்து) உற்பத்தி முறை, பண்பாடு ஆகியவற்றைத்தான். உண்மையில் இயற்கையான வாழ்க்கை என்பது மனிதர்கள், விலங்குகளோடு சண்டையிட்டுக் கொண்டு காடுகளில் நிர்வாணமாக வேட்டையாடி வாழ்ந்தார்களே அதுதான் இயற்கையான வாழ்க்கை.
என்றைக்கு மனிதன் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கி இயற்கையின் மீது வினை செலுத்தினானோ அதுவே செயற்கைதான். நிலத்தை மரக்கலப்பையால் கீறினால் என்ன? இரும்பு எந்திரக் கலப்பையால் கீறினால் என்ன? இரண்டும் இயற்கை மீதான தாக்குதல் தான். குடிசை வீடும், ஓட்டு வீடும், கான்கிரீட் வீடும் செயற்கைதான். என்னவொன்று கூரை வீடுகளில் மனிதர்களுக்குப் பாதிப்பு அதிகம், இயற்கைக்கு பாதிப்புக் குறைவு. கான்கிரீட் வீடுகளில் மனிதர்களுக்குப் பாதுகாப்பு கூடுதல், இயற்கைக்குப் பாதிப்பு அதிகம் அவ்வளவு தான் வேறுபாடு,
ஆனால், காட்டில் எந்த மிருகமும் வீடு கட்டி வாழ்வதில்லை. மனிதர்கள் இயற்கை யாக வாழவேண்டும் என்றால், மீண்டும் காடுகளுக்குச் சென்று நிர்வாணமாகத் திரிவது தான் இயற்கையானது. சீமான் சொல்வது இயற்கையானதல்ல. வர்ண ஜாதி அடிப்படையில் நாடார்கள் ‘கள்’ இறக்கவும், கோனார்கள் ஆடு மாடு மேய்க்கவும், பார்ப்பனர்கள் மட்டும் அனைத்து உரிமைகளும் பெற்று கல்வி கற்கவும், கோயில்களில் பூஜை செய்யவும், அதிகாரம் செய்யவும் பெரும் பான்மையான மக்கள் எவ்வித உரிமைகளும் இன்றி பண்ணையடிமைகளாக, மாடுகளைப் போல நிலத்தில் உழைக்கவும், பொது வெளியில் புழங்க முடியாமலும் இருந்த நிலவுடைமைக் காலச் சமூகத்திற்கு திரும்ப வேண்டும் என்று சீமான் கூறுகிறார். அதுவே தமிழர்களின் பொற்காலம் என்கிறார்.
அது பார்ப்பனர்களுக்குப் பொற்காலம்! பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட நமக்கு? ஆக பார்ப்பனர்களின், பாசிச பாஜகவின் கனவை நனவாக்கவே சீமான் ஆசைப்படுகிறார்! அதற்காகவே பாடுபடுகிறார் என்பது புரிகிறது. அதனால்தான் எல்லோருக்கும் எல்லாம்’ எனும் சமத்துவ அரசியலைப் பேசுகின்ற திராவிட இயக்கத்தைக் (திமுகவைக்) கண்டால் பார்ப்பனர்களைப் போலவே சீமானுக்கும் எரிகிறது.
இப்போது தெளிவாகிவிட்டது! திராவிட இயக்கம், குறிப்பாக திமுக தலைவர்கள் தமிழ் நாட்டில் நிலவிய பார்ப்பனியச் ஜாதி ஏற்றத் தாழ்வையும், தீண்டாமையையும், பண்ணை ஆதிக்கத்தையும், அதனால் விளைந்த அடிமைத் தனத்தையும், கொடிய வறுமையையும் ஆணாதிக்கத்தையும் ஒழித்து சமத்துவத்தையும், சமூகநீதியையும் நிலைநாட்ட நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையையும், போக்குவரத்து வசதிகளையும், உயர் கல்வியையும், நவீன மருத்துவ வசதிகளையும் தமிழ்நாட்டில் கொண்டு வந்து புகுத்தினர். அதோடு நிற்காமல் இந்த நவீன எந்திரங்களின் வருகையால் பாதிக்கப்படக் கூடிய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு மானியங்களையும், நிவாரணங்களையும் வழங்கிப் பாதுகாக்கவும் செய்து வருகின்றனர்.
அதன் விளைவாக பின்தங்கிய கிராமப்புற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் உயர் கல்வி கற்று வெளிநாடுகளுக்கும் வெளிமாநில மாநகரங்களுக்கும் குடியேறி வளமாக வாழ்வதுடன் தமது குடும்பத்திற்கு கவுரவத்தையும் தேடித் தந்துள்ளனர். இவ்வாறு தங்களுக்குப் போட்டியாக சூத்திரப் பிள்ளைகள் வந்து விட்டார்களே என்று பார்ப்பனர்கள் வயிறு எரிந்து இட ஒதுக்கீட்டால் ‘தரம்’ கெட்டுவிட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இப்போது சீமான் வந்து நமது பிள்ளைகளைப் பார்த்து ‘படிக்காதே. மீண்டும் கள் இறக்க, ஆடு மாடு மேய்க்க வா’ என்று அழைக்கிறார். ஆடு மாடு மேய்ப்பது இழிவில்லை என்கிறார். நாமும் சொல்கிறோம் ஆடு மாடு மேய்ப்பதை இழிவாகக் கருதாததால்தான் எங்களது முன்னோர் நூறாண்டுகளாக ஆடு மாடு மேய்த்து எங்களைப் படிக்க வைத்தனர். ஆனால் இந்த நாட்டில் தங்களை, உழைக்கும் மக்களைவிட பிறப்பால் உயர்ந்தவர்களாகக் கருதிக்கொண்டு இன்றுவரை உழைக்காமல் ஆணவமாக வாழ்ந்துவரும் சிலர் ஆடு மாடு மேய்ப்பவர்களை, கள் இறக்குபவர்களை, உழுபவர்களைப் பார்த்து ‘தள்ளி நில், கோயில் கருவறைக்குள் வராதே! நீ தாழ்ந்தவன்’ என்று சொல்கிறார்களே அவர் மீதான சீமானின் எதிர்வினை என்ன?
மேலை நாடுகளில், அமெரிக்காவில் இத்தகைய தீண்டாமை இல்லை. யாரும் எந்தத் தொழிலும் செய்யலாம். அங்கு ஆடு மாடு மேய்ப்பதும், விவசாயம் செய்வதும், துப்புரவுப் பணிசெய்வதும், அரசு அதிகாரியாக இருப்பதும், பாதிரியராக இருப்பதும் சமம்தான். ஆனால் இந்தியாவில்? இங்கு எவர் உழைப்பதை, ஆடு மாடு மேய்ப்பதை, கள் இறக்குவதை, உழுவதை, துப்புரவுப் பணி செய்வதை இழிவு என்று கருதி அதனைச் செய்யாமல் இருந்து வருகிறார்களோ அவர்களது பிள்ளைகளை எல்லாம் முதலில் இந்தப் பணிகளைச் செய்ய வைத்து அனைத்துப் பணிகளும் அனைவருக்கும் பொது என்ற சமத்துவத்தைக் கொண்டுவர முதலில் போராடுங்கள் சீமான்.
அப்படிப்பட்ட நிலை வந்தபிறகு அதாவது அர்ச்சகர் தொழிலும் துப்புரவுத் தொழிலும் பாதிரியார் தொழிலும் சமம்தான். யாரும் எதையும் செய்யலாம் என்ற நிலையைக் கொண்டுவந்த பிறகு வந்து பாருங்கள் அர்ச்சகர் பிள்ளைகளும் சீமானின் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து ஆடு மாடு மேய்த்துக் கொண்டு உல்லாசமாக வாழ்வார்கள்.
அந்தநாள் வரும்வரை அவாள் பிள்ளைகளை ஆடு மாடு மேய்க்கச் சொல்லுங்கள். எங்கள் பிள்ளைகள் மட்டுமல்ல; உங்களது பிள்ளைகளும் மருத்துவரும், நீதிபதியும், அர்ச்சகரும் ஆகட்டும்!
தற்காப்பு கலையால் பாலியல் சீண்டலிலிருந்து தப்பிய 13 வயது சிறுமி!