ஆசிய இளையோர் கபடி போட்டியில் சாதனை படைத்த கண்ணகி நகர், கார்த்திகா விளையாட்டு உலகில் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.
இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வதற்கு துணை நின்ற அணியின் துணைத் தலைவர், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயல்பான சூழலில் விளையாட்டிலும், கல்வியிலும் சாதனை படைப்பதை விட, நெருக்கடியான சூழலிலும், அழுத்தங்களுக்கு இடையில் வாழ்ந்து கொண்டு சாதனை படைப்பது மிகவும் கடினமானது. அந்த வகையில் கார்த்திகா படைத்திருக்கும் சாதனை கூடுதல் சிறப்பு மிக்கது. விளையாட்டுத் துறையில் அவர் புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன். கார்த்திகாவுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை போதுமானதல்ல. அவருக்கு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை வழங்குவதுடன், அரசு வீடு வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்“ என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.



