spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

-

- Advertisement -

ஜென்ராம்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

“நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பேன்” என்று இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்.

we-r-hiring

“மதம் ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். எந்த மனிதனும் அவன் விரும்பும் கடவுளை வழிபடலாம்; அதில் எந்த அரசாங்கமும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை” என்றும் அவரே கூறி இருக்கிறார். எந்தக் கடவுளையும் வழிபடலாம் என்று மக்களுக்கு இருக்கக்கூடிய உரிமை, எந்தக் கடவுளையும் வழிபடாமல் இருப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கியது.

காந்தி சொன்னதன் பொருள் என்ன? ஓர் அரசின் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலுமாக மதங்கள் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும். மதச்சார்பின்மை என்ற சொல்லுக்கு இதுதான் அர்த்தம். மதச்சார்பின்மை என்ற சொல்லை காந்தி பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் சமத்துவம், மதச்சார்பின்மை என்ற சொற்களை இந்திய அரசமைப்புச் சட்டம் இன்று தாங்கி நிற்கிறது.

சமத்துவம் என்ற சொல்லும் மதச்சார்பின்மை என்ற சொல்லும் வெறும் கோட்பாடுகள் அல்ல. அவை மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல செயல்களோடு தொடர்புடையவை. அந்தச் சொற்கள் மதவாத அரசியலைத் தீவிரமாக முன்னெடுக்கும் வலதுசாரிகளுக்குக் கடுமையான ஒவ்வாமையைத் தருகின்றன. அரசமைப்புச் சட்டத்தில் இருந்து அந்த சொற்களை நீக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுக்கும் ஒரு காலகட்டத்தில் இன்று நாம் இருக்கிறோம்.

எதற்காக இந்தச் சூழலை நாம் இப்போது பேச வேண்டும்? மதச்சார்பின்மை என்றால் என்ன? அரசு எல்லா மதங்களையும் சமமாக மதிக்கும் என்ற அளவிலேயே இந்தியாவில் நாம் மதச்சார்பின்மையைப் புரிந்து வைத்திருக்கிறோம். எந்த மதத்தின் வழிபாட்டு உரிமையிலும் உள் விவகாரங்களிலும் அரசு தலையிடாது என்பதை மதச்சார்பின்மை என்று புரிந்துகொண்டிருக்கிறோம். இன்னும் சிலர், மதச்சார்பின்மையை ஏறத்தாழ மத நல்லிணக்கமாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறார்கள்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

ஆனால், இரண்டும் வெவ்வேறானவை. மதச்சார்பின்மையை அரசு உறுதிசெய்ய வேண்டும். சட்டத்தின் மூலமாக, ஆட்சியின் கோட்பாடாக, அரசின் வழிகாட்டுதலாக மதச்சார்பின்மை இருக்க வேண்டும். மத நல்லிணக்கம் சமூக இயல்பு சார்ந்தது. அரசு சார்ந்ததல்ல. அது எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்வதைக் குறிக்கும். மதச்சார்பின்மை அரசின் சட்டரீதியான கொள்கை. மத நல்லிணக்கம் நாம் வாழும் சமூகத்தின் பண்பு. இந்தப் பின்னணியில் இருந்து நாம் தமிழ்நாட்டில் தமிழ்ச் சமூகத்தின் பண்பாக நல்லிணக்க உணர்வு எப்படிப் பற்றிக்கொண்டது என்றும் அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி என்ன விதமான பங்களிப்பை அளித்தது என்பதையும் பார்க்கலாம்.

இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்தியச் சூழல் எப்படி இருக்கிறது என்பதையும் தமிழ்நாடு அதிலிருந்து எப்படி மாறுபட்டு இருக்கிறது என்பதையும் முதலில் அறிந்திருக்க வேண்டும். பிரதமராக நரேந்திர மோடி 2014ல் பொறுப்பேற்றதற்குப் பிறகு, பெரும்பான்மை இந்து மதவாத அரசியல் இந்தியாவில் பல மாநிலங்களில் மேலோங்கியிருக்கிறது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பன்மைத்துவ இந்தியப் பண்பு மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. அரசமைப்புரீதியாகவும் சமூகரீதியாகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரமும் அதன் தவிர்க்க முடியாத விளைவாகக் குற்றச்செயல்களும் பெருகிவிட்டன.

தி.மு.க. ஆள்கின்ற தமிழ்நாட்டில் இருக்கும் நமக்கு இதுபோன்ற நிலைமைகளைப் புரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. பாஜக ஆளும் இந்திய மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான், நாம் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறோம் என்பது தெரியும். நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளும் எத்தனை உரிமைகளுக்காக அந்த மாநிலங்களில் மக்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பது புரியும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

காதலர் தினம் வந்தால் அந்த மாநிலங்களில் என்ன நடக்கிறது ‘ஹிஜாப்’ என்று அழைக்கப்படும் தலையங்கி அணிந்து வரக்கூடாது என்ற சர்ச்சைகள் ஏன் சில மாநிலங்களில் வருகின்றன? பசுவை வதைக்கிறார்கள் என்ற போர்வையில் கும்பல் வன்முறையில் கொலைகள் ஏன் நடக்கின்றன? கோயில் திருவிழாக்களில், கோயில் வளாகங்களில் இஸ்லாமியர்கள் கடை வைக்கக் கூடாது என்ற புதிய விதிகள் ஏன் முளைக்கின்றன?

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஏன் ஒரு முஸ்லிம்கூட இடம்பெறவில்லை? விடுதலை பெற்ற இந்தியாவில், முதல் முறையாக இப்போதுதான் முஸ்லிம்களே இல்லாத ஓர் அமைச்சரவை இருக்கிறது என்பது இந்தியாவுக்குப் பெருமையா? பல மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களில் ஏன் ஒரு முஸ்லிம்கூட இருப்பதில்லை?

வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை சிறிதளவுகூட மதிக்காமல் பல மசூதிகளில் கோயிலகள் இருந்ததற்கான ஆதாரம் குறித்த சர்ச்சைகளும் அதையொட்டி கலவரங்களும் ஏன் நடந்தன? இந்தியக் குடியுரிமை வழங்குவதில் மதரீதியான பாகுபாடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்த்திருப்பது அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை தானா? நகரங்களில் இந்துக்கள் தனியாகவும் முஸ்லிம்கள் தனியாகவும் வெவ்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் போக்கு அதிகரிப்பதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன?

அரிதாக ஆங்காங்கே நடந்துகொண்டிருந்த மத வெறுப்புப் பிரச்சாரம், பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்களால் இயல்பாகத் தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்படுவது எதைக் காட்டுகிறது? இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்செயல்களைத் தூண்டும் பிரச்சாரத்தைப் பகிரங்கமாகச் சிலர் செய்கிறார்களே, இது எந்த வகை பேச்சுரிமை? முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்ட உடனேயே குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் எந்தச் சட்டத்தின் கீழ் புல்டோசரால் இடிக்கப்படுகின்றன? தன் குடிமக்களை மதரீதியான பாகுபாட்டுடன் அரசு பார்க்கத் தொடங்கினால், அதன் பிறகு அவர்களால் அங்கு எப்படி கண்ணியமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்?

தமிழ்நாட்டிலும் இப்படிப் பதற்றங்கள் நிறைந்த ஒரு சூழலை உருவாக்குவதற்கு மதவாத சக்திகள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால், அந்த முயற்சிகள் வெற்றிபெறாமல் இஸ்லாமியர்களின் காவல் அரணாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. அதிலும் 2018 முதல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் அரசியல்ரீதியாக வலிமையான கூட்டணியை உருவாக்கி, தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவருகிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

1949ல் தி.மு.க. பிறக்கும்போதே சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களுடன்தான் பிறந்தது. இது சம்பிரதாயமான வார்த்தைகள் அல்ல. இவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள்கள் என்பதை அதிகாரபூர்வமாக கட்சியே அறிவித்திருக்கிறது. “அரசமைப்புச் சட்டத்தில் முழு நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டு, சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும் பற்றும் கொண்டு, இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக்காப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள் ஆகும்” என்பதே அந்த அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மதச்சார்பின்மையை ஒழுங்கமைப்பதிலும் இந்திய அரசியலிலும் அதற்கான சூழலை உறுதிசெய்வதிலும் தி.மு.க. முன்னணி பங்கு வகிக்கிறது. சமத்துவத்தை நோக்கிய பாதையில், சாதி ஒழிப்பு, சமூக நீதி இரண்டையும் உறுதிசெய்யும் சட்டரீதியான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு முன்னெடுத்திருக்கிறது. சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி இருக்கிறது. பகுத்தறிவையும் அறிவியல் உணர்வையும் வளர்த்தெடுப்பதற்கான பணிகளில் முதன்மையான மாநில அரசாக தி.மு.க. அரசே இருந்திருக்கிறது.

அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைவதற்கான உரிமை, அர்ச்சகராகும் உரிமை, பொதுவான நிறுவனங்களில் சாதி அடிப்படையில் இருந்த சடங்குகளை நீக்குதல், அரசியல் உரையாடல்களிலும் பொது வாழ்விலும் கல்வியிலும் அறிவியல் உணர்வை வளர்ப்பதற்கான முயற்சிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அரசு அலுவலகங்களில் எந்த வழிபாட்டுத் தலமும் இருக்கக் கூடாது என்பதோடு, அரசின் உதவி பெறும் பள்ளிகளில் மதரீதியான போதனைகளும் கூடாது என்ற மதச்சார்பற்ற நடவடிக்கையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தியது தி.மு.க. அரசு.

பெரும்பான்மை மதத்தின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் இந்திய மக்களின் பண்பாகச் சித்திரிக்கும் முயற்சிகளுக்குத் தீவிரமான எதிர்ப்பை தி.மு.க. வெளிப்படுத்திவருகிறது. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, குறிப்பாக மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை விதைக்கும் சக்திகளைத் தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மதக் கலவரங்களுக்கு எதிராகவும் மத மோதல்களுக்கு எதிராகவும் பெரும்பான்மை மதத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறது.

பெரும்பான்மையாக இந்துக்களாக இருந்தாலும் சரி, சிறுபான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களுமா ஆக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி அரசு செயல்பட்டு வருகிறது. சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றின் உண்மையான பொருள் அறிந்த இயக்கமாக இருப்பதால், எந்த வித சச்சரவுகளுக்கும் இடமின்றி எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அரசாகத் தி.மு.க. அரசு இருக்கிறது.

மக்களுடைய வாழ்வின் அடிப்படை அம்சங்களுக்குப் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுப்பதை நான் ஏற்கவில்லை என்று மகாத்மா காந்தி அன்றே சொல்லி இருக்கிறார். இந்தப் பார்வைக்கு ஏற்பவே, சிறுபான்மையினரின் நலன்களையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் பணியைத் தி.மு.க. அரசு மேற்கொண்டுவருகிறது. பெரும்பான்மையாக இருப்பவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, சிறுபான்மையினரின் நலன்களையும் பாதுகாப்பதே ஜனநாயகம் என்ற கொள்கையில் உறுதியாக நிற்கிறது. அந்த அடிப்படையில்தான் சிறுபான்மையினருக்குத் தங்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசு நடத்துவதாக ஓர் உணர்வு வந்துவிடக் கூடாது என்பதைத் தி.மு.க. உறுதிசெய்கிறது.

தி.மு.க.வின் இந்தச் செயல்பாடு காரணமாக, தமிழ்நாட்டில் மத அடிப்படையில் பிளவு அரசியலை வலதுசாரிகளால் செய்ய முடியவில்லை. அந்த எரிச்சலில், தி.மு.க.வை ‘இந்துக்களின் விரோதி’ என்று சித்திரிக்க முயல்கிறார்கள். ‘சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும்’ அரசியலைத் தி.மு.க. செயல்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பெரும்பான்மையினரைப் புறக்கணித்து, சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் போக்கை இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்வதில்லை. சிறுபான்மையாக இருக்கக்கூடியவர்களைப் பெரும்பான்மைக்குக் கட்டுப்படுத்திவைக்க வேண்டும் என்று விரும்பும் சிலருக்கு எல்லோரையும் சமமாக அரசு நடத்துவது கசப்பாக இருக்கிறது.

அதனால், தங்கள் ஆதிக்கத்தை உறுதிசெய்வதற்காகத் தி.மு.க.வைப் போன்ற மதச்சார்பற்ற கட்சிகள்மீது இப்படிப்பட்ட அவதூறுகளை அவர்கள் முன் வைக்கிறார்கள். இதுபோன்ற அவதூறுகளில் எள்முனை அளவுகூட உண்மை இல்லை.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

சாதி மறுப்புத் திருமணங்களைத் தி.மு.க. ஊக்குவிக்கிறது. வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் செய்துகொள்ளும் திருமணத்தை தி.மு.க ஆதரிக்கிறது. சாதிக்குள்ளும், மதத்திற்குள்ளும் மட்டுமே திருமணங்கள் நடக்க வேண்டும் என்று நினைக்கும் சாதியவாதிகளும் மதவாதிகளும் இதனால் தி.மு.க.வைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ‘சமூக ஒழுங்கை’ தி.மு.க. சிதைக்கிறது என்று கூக்குரல் இடுகிறார்கள். மதச் சடங்குகள் சிறிதும் இல்லாமல் நடத்தப்படும் சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் கொடுத்தது தி.மு.க. ஆட்சி. தமிழ்நாட்டில் சிறப்புத் திருமண சட்டம் இருக்கும் நிலையில் இந்தியாவில் பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்கள் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதற்காகக் கடுமையான விதிகளுடன்கூடிய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படுகிறது!

1949 முதல் இன்று வரை திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1967 முதல் தற்போது வரை ஆட்சிக்கட்டிலிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் தி.மு.க. சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய மதச்சார்பின்மையை அதன் கொள்கையாக அறிவித்து செயல்பட்டது.

1967ல் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் இருந்த பள்ளிகள் அனைத்திலும் மதம் சார்ந்த பிரார்த்தனைக் கூட்டங்களை நிறுத்தியது. மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து, அறிவியல் உணர்வை கல்வியின் மையமாக மாற்றியது. சாதி மதம் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. மதங்களைச் சார்ந்து நிற்காமல் திராவிடப் பண்பாட்டின் அடையாளங்களை உறுதிசெய்தது.

கட்சியின் தொடக்க காலத்தில் இருந்து ஹிந்து மகா சபா. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் பெரும்பான்மை மதவாதத் திட்டங்களை மிக உறுதியாக தி.மு.க. எதிர்த்து நின்றுவருகிறது. றது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இணையவேண்டிய சூழல் வந்தபோதும்கூட மதப் பெரும்பான்மைவாதத்தின் அடையாளமாக முன் வைக்கப்பட்ட மூன்று திட்டங்களையும் தவிர்த்த, குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே இணைந்து நின்றது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ இரத்து செய்வது, சீரான சிவில் சட்டம் என்ற மூன்று திட்டங்களும் செயல்படுத்தப்படாது என்ற உறுதிமொழிக்குப் பிறகே பா.ஜ.கவுக்கு தி.மு.க. ஆதரவளித்தது.

2004 முதல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒன்றைத் தமிழ்நாட்டில் உருவாக்கி, மதவாதத்திற்கு எதிரான அரசியல் பண்பாட்டைத் தொடர்ந்து முதன்மைப்படுத்தி வந்திருக்கிறது. மதக் கண்ணோட்டத்துடன் கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்டபோது கண்டனக் குரல் எழுப்பியது. தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து உறுதியாக நிற்கிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

2007ல் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தனித்தனியே பிற்படுத்தப்பட்டவர்கள் ஒதுக்கீட்டில் 3.5சதவிகித உள் ஒதுக்கீடு கொடுத்தது. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, எதிர்த்துப் போராட்டங்களை நடத்தியது. வழிபாட்டு உரிமை என்ற அரசமைப்புச் சட்ட உரிமையை ஒரு கொள்கையாக உயர்த்திப்பிடித்தது.

தன்னுடைய 75 ஆண்டுக்கால வரலாறு முழுவதும் ஆதிக்க அரசியலுக்கு எதிராக மக்களோடு இணைந்து நின்று தி.மு.க. போராடிக்கொண்டே வருகிறது. சாதி ஆணவத்திற்கும் மத ஆதிக்கத்திற்கும் எதிராக செயல்படுகிறதே தவிர, மக்களின் இந்து மத உணர்விற்கு எதிராக தி.மு.க. செயல்பட்டது இல்லை. பல ஆண்டுகள் ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை ஓடச் செய்தது தி.மு.க. அரசுதான். இப்போதும்கூட முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோயில்களில் குடமுழுக்கு நடக்கிறது. கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து சொத்துகளும் நிலங்களும் பறிக்கப்பட்டு, அறநிலையத் துறையின் நிர்வாகத்துக்குள் கொண்டுவரப்படுகின்றன.

ஒரு மதத்தினரை இன்னொரு மதத்தினருக்கு எதிராக நிறுத்தி மோதலைத் தூண்டும் பிளவுவாதத்தை அல்லது மக்கள் மத்தியில் பிரிவினையைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் செய்ததில்லை. இந்துக்கள் மத்தியிலும் ஒரு சாதியினர் மற்றவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவதை தி.மு.க. எதிர்க்கிறதே தவிர, எந்த சாதியினரையும் ஒதுக்கி வைப்பதில்லை. ஆதிக்கத்தைதான் எதிர்க்கிறார்கள் என்பதை ஆதிக்கம் செய்யும் சாதியினரை அழிக்க நினைப்பதாகத் திரிக்கிறார்கள். இதைப்போலவேதான் சனாதன பண்பாட்டிற்கு எதிராகப் பேசியதை இந்துக்களை அழிக்க வேண்டும் என்று பேசியதாகத் திரித்தார்கள்.

வேறு வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், தி.மு.க.வின் மதச்சார்பின்மை சமூக நீதியிலும் சமத்துவத்திலும் ஜனநாயகத்திலும் இரண்டறக் கலந்திருக்கிறது. அது சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறதே தவிர, சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியலை முன்னெடுக்கவில்லை. இந்தியாவில் வாழும் எல்லா மதத்தினருக்கும் உரிமைகள் சமமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. பெரும்பான்மை மதத்திற்கு அடிபணிந்து, மற்ற மதத்தினர் குடிமக்களாக வாழ வேண்டும் என்ற பெரும்பான்மை மதவாதக் கோட்பாட்டை முற்றிலும் நிராகரிக்கிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

தமிழ்நாட்டு அளவில் இந்தச் செயல்பாடுகளின் வழியாக சிறப்பாகச் செயல்படும் தி.மு.க., இந்திய அளவிலும் இந்தியா கூட்டணிமூலம் குறைந்தபட்சம் மதச் சார்பின்மையையாவது மீட்க வேண்டும் என்று போராடுகிறது. பாரதிய ஜனதாவின் பெரும்பான்மை வாதம், இந்தியாவின் பன்மைத்துவ பண்பை அழிக்க முயலும் இன்றைய காலகட்டத்தில் இந்திய அரசியலில் தி.மு.க.வின் கூடுதலான பங்களிப்பு தேவைப்படுகிறது. இருக்கும் கூட்டணியை விரிவுபடுத்தி, சேரும் கட்சிகளை நெறிப்படுத்தி, சமத்துவ, மதச்சார்பற்ற லட்சியங்களை முழுமையாக உறுதிசெய்ய தி.மு.க. தனது தளங்களை விரிவுசெய்ய வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. பெற்றுவரும் வெற்றியை, மதச்சார்பற்ற சக்திகளின் வெற்றியாக இந்தியா முழுவதும் பெறும் காலம் மிகத் தொலைவில் இல்லை. அந்த வெற்றிக்கான அறிகுறிகள் தமிழ்நாட்டில் இருந்தே தொடங்குகின்றன. பாசிச சக்திகளுக்கு ஒரு பெயர் என்றென்றும் கலக்கத்தையே தரும். அது சரிதான்! ஏன் என்றால், அந்தப் பெயர்தான் மதவாத சக்திகளிடமிருந்து இந்தியாவையும் மீட்டெடுக்கும்!

அந்தப் பெயர் அன்று ஜோசப் ஸ்டாலின்! இன்று மு.க.ஸ்டாலின்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கலைஞர் தந்த சொத்துரிமை! 

MUST READ