ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

1912 முதல் 1949ல் தி.மு.க. உதயமாகின்ற வரையில் திராவிட இயக்கத்தின் முதல் கட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த முதல் கட்ட அரசியல் கட்டமைப்பை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான் 1949-க்கு பிறகு நடந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் முதல் கட்டமைப்பில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்கிற அமைப்புகள் இருந்தன. முதலாம் உலகப் போருக்கும் ரஷியப் புரட்சிக்கும் முன்பு தோன்றியதுதான் பிராமணர் அல்லாதோர் இயக்கம். இதன் அரசியல் வெளிப்பாடுதான் நீதிக்கட்சியின் தொடக்கம்.

நீதிக்கட்சி அரசியல் விடுதலை என்பதை சமூக விடுதலையுடன் இணைத்துப் பார்த்தது. வெளிநாட்டு முதலாளிகள் விலகி உள்நாட்டு முதலாளிகள் ஆட்சிக்கு வருவது விடுதலையல்ல என்று கருதியவர்கள். இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முதன் முதலில் இடஒதுக்கீடு கொள்கையை யோசித்த ஒரு இயக்கம்தான் நீதிக்கட்சி.
இடஒதுக்கீடு சமத்துவம், சமதர்மம் ஆகிய மூன்று கொள்கைகளும் ஏதோ ஒன்றில் இந்தியாவில் கோலோச்சிக் கொண்டு இருந்த பத்திரிகை முதலாளிகளையும் ஆசிரியர்களையும் பயமுறுத்தியது. அதிகாரப் பகிர்வு என்பது அவர்களுடைய அதிகாரக் குவிப்புக்கு எதிராக இருந்ததால் இந்தச் சமதர்ம பார்வையைப் பிரிவினை வாதம் என்றும் ஆங்கில ஆட்சிக்கு ஆதாரவாக முதல் திரிபு வாதத்தை முன்வைத்தனர். Dyarchy என்ற இரட்டை ஆட்சி முறையை அமல்படுத்தியபோது, முதலில் ஆட்சிக்கு வந்த கட்சி நீதிக்கட்சியாக இருந்ததால், இந்தத் திரிபு வாதம் தேசிய செய்தித்தாள்களில் வலுப்பெற்றது.
இவர்களின் வன்மம் சற்றும் குறையாத காலகட்டத்தில்தான் காலனி ஆதிக்கத்திற்கு எதரான போராட்டத்தில் இடதுசாரிகளும், காங்கிரஸ் பேரியக்கமும் கிட்டதட்ட ஒரே பார்வையில் எதிர்கொண்டன. இந்தப் ஆதிக்கத்திற்கு எதிரான பார்வையில், அரசியல் விடுதலைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் சமூக விடுதலைக்கு அளிக்கப்படவில்லை. அரசியல் விடுதலை மற்றும் இயக்கத்தின்மீது அவர்களின் கோபம் கூடியது. இரண்டாம் உலகப் சமூக விடுதலையும் ஒருசேர கருத்தை முன்வைத்த சுயமரியாதை போர் உச்சத்தில் இருந்தபோது, விரைவில் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வரும் என அனைவருக்கும் தெரிந்தது. காலனி ஆதிக்கத்திற்குப் பிற்பட்ட சுதந்திர இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் அகில இந்திய கட்சிகளுக்கும் அகில இந்திய ஊடகங்களும் ஒரு அணியில் நிற்க மாநில உரிமைகள், மொழி உரிமைகள், சமூக நீதி ஆகியவற்றை முன்னெடுத்த சக்திகள் இன்னொரு அணியாகத் திரண்டன.
இந்த இரண்டாம் வகை போராட்டத்திற்கு இயல்பாய் தலைமைதாங்கும் இடத்திற்கு, சுயமரியாதை இயக்கம் வந்து சேர்ந்தது. ஆனால், இந்த அணியின் தார்மீக குரலை 1947ல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் என்ற பிரிவினை கூர் மங்கச் செய்தது. பாகிஸ்தான் உதயமானவுடன் மாநிலங்களை ஒன்றியத்தின் கீழ் குறைந்த அதிகாரத்துடன் செயல்படும் ஓர் அமைப்பாக மாறியது.
தி.மு.க. உதயமான ஆண்டை நாம் கவனமாக ஆய்வுசெய்யவேண்டியது அவசியம். 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் அடைந்த இந்தியா, 1950ல் குடியரசாக மாறியது. சுதந்திரத்திற்கும் குடியரசிற்கும் இடையில் தோன்றியதுதான் தி.மு.க. தோன்றிய ஆண்டு 1949. தி.மு.கவை தோற்றுவிக்க முக்கியமான காரணம், வரலாறு நம்முடைய வாழ்க்கையை வேகமாக இழுத்துசெல்கிறது. இந்த உண்மையை முழுமையாக உணர்ந்த அறிஞர் அண்ணாவின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு தி.மு.க. எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மக்களுக்கான உரிமைகளைப் பெறும் வண்ணம் தன்னுடைய அரசியலையும் மாநில எதிர்காலத்தையும் மாற்றியமைத்ததுதான் அண்ணாவின் கொடை.

இந்தியா என்கின்ற தேசம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கூர்மையாக இருந்தது. அகில இந்திய தலைமை (அரசியல் அதிகார வர்க்கம் மற்றும் அகில இந்திய ஊடகம்) ஓர் அணியில் இணைந்து, மக்களைவிட தேசம்தான் முக்கியம் என்ற கருத்தை முன்வைத்து, சேர்ந்து பிணைக்கிற அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. ஆனால் மொழி உரிமை, சமத்துவம், அதிகாரப் பங்கீடு, மாநில உரிமையை ஏற்றுக்கொண்ட தி.மு.க. போன்ற மாநில கட்சிகள் சேர்ந்து வருகிற பார்வையில் தங்களுடைய அரசியலை விவரித்துக்கொண்டனர்.
இதில் வலுக்கட்டாயமாக மாநிலங்கள் மீது எந்தக் கருத்து, மொழி, பண்பாட்டையும் ஒன்றிய அரசு திணிக்கமுடியாது. ஆனால், ஒன்றிய அரசு மேற்கொள்ளும் சேர்ந்து பிணைக்கிற என்ற அணுகுமுறையில் மக்களுக்குக் கிடைப்பது ஒற்றைப் பரிமாணம்தான். அன்று ஒரு தேசம், ஒரு மொழி என்று தொடங்கிய இந்த அணுகுமுறை இன்று ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு மதம், ஒரு தேர்தல் என்று மேலும் சுருங்கியுள்ளது.
சேர்ந்து வருகிற என்ற அணுகுமுறையில் மட்டுமே வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்து வலுவடையும். இதில் மட்டுமே மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, இடஒதுக்கீடு உரிமை மற்றும் மாநில உரிமைகளை வென்றெடுக்க முடியும். அகில இந்திய ஊடகத்திற்கு இந்த விசாலமான பார்வை பிடிப்படவேயில்லை. இதற்குக் காரணம் நம்முடைய செங்குத்தான ஏற்றத்தாழ்வுடன்கூடிய வாழ்க்கைதான் என்று பல்வேறு சமூக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, அகில இந்திய அரசியல் தலைமையாக இருக்கட்டும், சட்டத் துறையாக இருக்கட்டும், அரசு இயந்திரத்தில் உயர் பதவியில் இருப்பவர்களாக இருக்கட்டும், அகில இந்திய ஊடகங்களில் சொந்தக்கார்களாக மற்றும் ஆசிரியர்களாக இருப்பவர்களாக இருக்கட்டும், இவர்கள் அனைவரும் மேல்அடுக்கைச் சார்ந்தவர்கள்தான். இவர்களின் பழக்கப்பட்ட சமூகப் பின்னணியினால்தான் தமிழகத்திலிருந்து எழுந்த ஜனநாயக விழுமியங்களைப் பார்க்க மறுத்தனர்.
இந்தப் பின்னணி, நம் முன்னால் ஒரு புதிய கேள்வியை வைக்கிறது. ஊடகப் பின்னணி இல்லாமல் மக்களிடம் தங்கள் கருத்துகளை எப்படி இவர்கள் சேர்த்தார்கள்? அன்றைய தமிழ்நாட்டின் பிரபல ஆங்கில நாளிதழ்கள் The Hindu, Indian Express, The Mail ஆகியவை முக்கிய தமிழ் நாளிதழ்கள் சுதேசமித்ரன், தினமணி; தமிழ் பத்திரிகைகள் ஆனந்த விகடன், கல்கி, குமுதம் இவை அனைத்தும் சந்தேகக் கண்ணோட்டத்துடன்தான் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்தன. தமிழில் அல்லது தமிழ்நாட்டிலிருந்து வந்தாலும் இவை அனைத்தும் தேசிய நீரோடத்தில் ஒரு அங்கமாகவே தங்களைப் பார்த்துக்கொண்டனர்.
இந்தியாவின் முதல் தேர்தல் நடந்த 1952ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு மாபெரும் மாற்றத்தை நான் புரிந்துகொண்டேன். 1952ம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடாவிட்டாலும் தன்னுடைய கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்ல தனக்கான ஒரு பாதையை வகுத்துக்கொண்டது. அன்று இருந்த பத்திரிகைகளைச் சார்ந்து திமுக இருக்கவில்லை. தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்குத் தாங்களாகவே தங்களுக்கென்று ஓர் ஊடகக் களத்தை உருவாக்கிக்கொண்டனர்.
தமிழ்நாட்டில் இளைஞர்களின் ஆதரவு பேரலையாக எழ அரசியல் மட்டுமே காரணமாக இருக்கவில்லை. அது கருத்தாளுமை மிக்க தி.மு.க.வினரால் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு திமுக தலைவரும் குறைந்தபட்சம் ஒரு பத்திரிகையிலாவது ஆசிரியராக இருந்தனர். ‘திராவிட நாடு’ (1942) பத்திரிகைக்கு அண்ணா ஆசிரியர். ‘மாலை மணி ‘ (1949), ‘காஞ்சி’ (1964), ‘நம் நாடு’ (1953) Home Land (1957), Home Rule (1966) ஆகிய பத்திரிகைகளுக்கும் அண்ணாவே ஆசிரியராகப் பணியாற்றினார். முரசொலியும் முத்தாரமும் (1964) கலைஞர் ஆசிரியராகக் கொண்டிருந்தன. முரசொலி இன்று வரை வெளிவந்துகொண்டிருக்கும் ஒரே பத்திரிகையாகும்.
நெடுஞ்செழியன் ‘மன்றம்’ (1955) நடத்தினார். மதியழகன் ஆரம்பித்த பத்திரிகை ‘தென்னகம்’ (1959). 1964ல் எஸ்.எஸ்.தென்னரசு ‘தென்னரசு’ இதழைத் தொடங்கினார். திராவிடன் (1947) இதழுக்கு ஆசிரியர் என்.வி.நடராசன். சி.பி.சிற்றரசுவை ஆசிரியராகக் கொண்டு ‘இனமுழக்கம்’ (1959) என்ற பத்திரிகையை ஆரம்பித்தனர். திராவிட இயக்க வரலாற்றைப் பதிவுசெய்துள்ள க.திருநாவுக்கரசு, ‘திராவிட இயக்கத்திலிருந்து அதன் கொள்கைகள் தாங்கி வந்த பத்திரிகைகள் ஏறக்குறைய இருநூறுக்கும் அதிகம் என்றும், அவை இயங்கிய காலம் ஆறு இதழ்கள் முதற்கொண்டு பத்தாண்டுகள் வரை மாறுபடும் என்றும் சொல்கிறார்.
அவற்றில் மற்ற பத்திரிகைகள் மடிந்து போய்விட்ட பின் முரசொலி மட்டும் நீடித்து நிலைப்பது எப்படி? என்று கலைஞரிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்னார், ‘முரசொலி’ போன்ற பத்திரிகை வியாபாரரீதியாகச் செயல்படாது என்பதை நான் அறிந்திருந்தேன். ஆரம்பத்தில் எனது திரைப்பட வருமானம் அதற்கு துணைநின்றது. பிறகு நான் அதை ஓர் அறக்கட்டளை வெளியீடாக மாற்றினேன். ஆகவே, அதை வியாபார சந்தையின் விளையாட்டுகளிலிருந்து பாதுகாக்க முடிந்தது. இன்றும் அது இயக்கத்தின் குரலாக இயங்குகிறது.
மாநிலம் எங்கும் நிறைந்திருந்த படிப்பகங்கள் என்ற வாசக சாலைகளில் பங்கு பற்றி தனது ‘தி.மு.க. வரலாறு’ என்ற நூலில் பேராசிரியர் அராமசாமி பதிவுசெய்துள்ளார். மக்கள் ஒரு நிலைப்பாடு கொண்டு தங்கள் உரிமைக்காக உரத்துப் பேசும்படி இந்தப் படிப்பகங்கள் அவர்களை உருவாக்கின. கழக வெளியீடுகளுக்கான இலவச நூலகங்களாக இருந்ததோடு அல்லாமல் உலக இலக்கியங்களின் சிறந்த மொழிபெயர்ப்புகளையும் அளித்தன. ரஷ்ய செவ்வியல் இலக்கியங்களைக் குறைந்த விலைக்கு சோவியத் யூனியன் பதிப்பித்துத் தந்ததால், இந்தப் படிப்பகங்களில் தேவையான அளவுக்கு புத்தகங்கள் இருப்பில் இருந்தன. இடதுசாரி தலைவர்களின் நெருங்கிய தோழரான தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் திராவிட இயக்கத்தின்மீது கடுமையான விமர்சனங்கள் கொண்டவர். ஆனால், அவர் ஒருமுறை சொன்னார், இடதுசாரி கட்சிகளைவிட சோவியத் இலக்கியங்களால் அதிகம் பயன் பெற்றவை தி.மு.க.வின் படிப்பகங்கள்தான்.
திரைப்படங்களில் பண்பாட்டுப் பிரச்சாரத்தை முன்னெடுத்த கலைஞர், முரசொலி மூலம் கருத்தியல் பரப்புரையை மேற்கொண்டார். கலைஞர் தனது கலையுலக நண்பர்களை மாநிலம் முழுவதும் சென்று நாடகங்கள் நடத்திவரும்படி செய்தார். அவரும் அவரது நண்பர்களும் எப்படி தேர்தல் நிதி திரட்டினார்கள் என்று தனது சுயசரிதையில் நினைவுகூர்ந்துள்ளார். ஒரு நகரத்தில் ஒரு கலையரங்கம் இருந்தால் அங்கே அவரால் அல்லது அவரது நண்பர்களால் ஒரு நாடகம் நடத்தப்பட்டிருக்கும்.
1966 டிசம்பரில் மணிமகுடம் திரைப்பட வெளியீட்டு விழா அண்ணாவின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய கலைஞர், “எந்த வகை கலையோ, இலக்கியமோ அதற்கு ஒரு குறிக்கோள் இருக்கவேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார். அது தமிழின் தொன்மையான அகஇலக்கிய மரபின்படி ஓர் அகத்தேவை பற்றியோ அதே மரபின் புற இருக்க வேண்டும். இலக்கியத்திற்கேற்ப விரிந்த அரசியல் அல்லது புற யதார்த்தம் பற்றியோ இருக்க வேண்டும். கொடுமையான யதார்த்தத்திலிருந்து கலையைத் தனியே பிரித்தெடுக்க முனையும் கவனம் குலைக்கும் செயல் ஓரு சமூகத்தின் படைப்பூக்கத் தூண்டலின்மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறைக்கு ஒப்பானது என்றார்.
மொழிக்கும் அதிகாரத்திற்கும் உள்ள நுண்ணரசியலைத் திமு.க, புரித்து கொண்ட விதத்தைப் பற்றி ஒரு வார்த்தையும் தேசிய ஊடகங்கள் எழுதவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் 1968ல் உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் மூலம் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, அதில் பொதுமக்களை இணைத்துக் கொள்ளும் வண்ணம் அறிவை ஜனநாயகப்படுத்தியதுதான். பல்கலைக்கழக வளாகத்திற்குள் முடிந்துபோகிற கல்விப்புலம் சார்ந்த நிகழ்வாக அந்த மாநாட்டை நடத்த அண்ணாவுக்கு விருப்பமில்லை. தமிழ் மொழியின் வளத்தையும் பழைமையையும் ஒரு சாதாரண தமிழன் அறிந்துகொள்ளும் வகையில் கவர்ந்திழுக்கப்படும் நிகழ்வாக அந்த மாநாடு இருக்க வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை. கருத்தரங்கங்கள் என்று சொல்லப்படுகிற ஆய்வுரீதியான அமர்வுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தேறின.
அதே நேரத்தில், உலகத் தமிழ் மாநாட்டின் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய மாநில அரசு முயற்சிகள் மேற்கொண்டன. தமிழகத்தின் கலை, பண்பாடு, கட்டடக் கலை ஆகியவற்றைப் பெருந்திரள் மக்களுக்குச் கொண்டுசேர்க்கும் வகையில் ஒரு கண்காட்சியும் அலங்கார அணிவகுப்பு ஒன்றும் ஏற்பாடாகியிருந்தது. அந்த மாநாடு வெகுஜன கலைகளில் அரசு முதலீடு செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றார் கலைஞர். மெரினா கடற்கரைப் பாதையில் இரண்டு பிரபலமான சிலைகள் இருந்தன. காந்தி சிலை ஒன்று : மற்றொன்று உழைப்பாளர் சிலை. ஈராயிரமாண்டுத் தமிழ் உணர்வுக்குப் பங்களித்த பத்து தமிழ்ப் புலவர்களின் சிலைகளை அமைத்திட பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர் ஏற்பாடு செய்தார்.
திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், ஜி.யு. போப், ராபர்ட் கால்டுவெல், சுப்பிரமணிய பாரதி, பாரதிதாசன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சி.ஜெ.பெஸ்கி ஆகியோருக்கான சிலைகள் அவை. வீரமாமுனிவர் என்று புகழப்படும் இத்தாலிய அறிஞரின் இயற்பெயர்தான் பெஸ்கி. இவர், முதல் தமிழ் அகராதியைத் தொகுத்துத் தந்தவர், திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற பழந்தமிழ் நூல்கள் சிலவற்றை மொழிப்பெயர்த்தவரும் அவரே.
அகில இந்திய ஊடகங்கள் பண்பாட்டுத் தளத்தில் தி.மு.க. ஏற்படுத்திய மாற்றங்களைப் பதிவுசெய்யாமல் இருப்பதுகூட மொழி அறிவு இல்லாததால் ஏற்பட்ட ஒரு நிகழ்வாகக் கருத இடமுண்டு. ஆனால், இந்தியா என்ற தேசத்தின் ஸ்திர தன்மைக்கு முக்கிய காரணமாக இருந்த மாநில கட்சி என்பதைப் பதிவுசெய்யாமல்போன மர்மத்தை இன்று வரை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 1969ஆம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாகப் பிளவுப்பட்டபோது, திருமதி இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை. தி.மு.க. எந்த வித நிபந்தனையும் விதிக்காமல் தன்னுடைய 25 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை வைத்து ஸ்திர தன்மைக்கு வழிகோலியது.
இந்த அரசியல் கூட்டணியின் விலைவாகத்தான் வங்கிகள் தேசியமயம், மன்னர் மானிய ஒழிப்பு போன்ற முற்போக்கு சட்டங்கள் உருவாயின. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்திற்குக் காரணமான கட்சியைப் பற்றி விரிவாகவே எழுதவில்லை. இதைத் தொடர்ந்து, இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அவசர காலநிலை பிரகடனம் மாறியபோது, இந்தியா முழுவதும் இருந்த எதிர்கட்சியினருக்கு ஒரு பாதுகாப்பு அரணாய் தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு இருந்தது என்ற செய்தியும் வரலாற்றில் ஒரு சிறுகுறிப்பாக மாறிவிட்டது.
1990ஆம் ஆண்டு, வி.பி.சிங் தலைமையில் அமைந்த ஒன்றிய அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்குத் தத்துவார்த்தமான காரணங்களை எடுத்துச்சொல்லி, சமூகநீதி என்பதை நிலைநாட்டியது இந்தக் கட்சிக்கு இருந்த பங்கும் பெரிதாய் விவரிக்கப்படவில்லை. பின்பு, டோகா நகரில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தையில், இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த முரசொலி மாறனின் பெரும் உழைப்பையும் வளரும் நாடுகளுக்கான உரிமைகளை அவர் பெற்றுத் தந்ததும் பெரிய அளவிற்கு வடஇந்திய ஊடகங்களில் பேசும் பொருளாக மாறவில்லை.
இன்று தி.மு.காவின்மீது அகில இந்திய ஊடகங்களின் பார்வை மாறியிருக்கிறது. இந்தியா முழுவதும் மோடி அலை வீசியபோதும் தமிழ்நாட்டில் அது வெற்றிபெறாதது பார்வை மாற்றத்திற்கான முதல்படி. 2019ஆம் ஆண்டும் 2024 ஆம் ஆண்டும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற தொடர் தோல்விகளும் தமிழகத்தை நோக்கிய தங்களுடைய பார்வையை இந்த ஊடகங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தின. 1980 வரையில் பேசப்பட்ட கேரளா மாடல், 1991ல் இந்திய தாராளமயமாக்கலுக்குப் பிறகு பேசப்பட்ட குஜராத் மாடல் ஆகிய இரண்டிலும் உள்ள குறைபாடுகள் இந்தியா முழுமைக்கும் தெரிய ஆரம்பித்தன.
கேரளா மாடலின் மக்கள் நலனும், குஜராத் மாடலின் வளர்ச்சியும் ஒன்றுசேர செயல்படும் கிராவிட மாடலின் விரிந்த அனைவருக்கும் அனைத்தும் என்கின்ற பொள்கையைச் செயல்படுத்துவதற்கான பொருளாதார வளமையும் பெற்று தமிழ்நாடு செயல்படும் விதத்தினால் இன்று தேசிய ஊடகங்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு இடத்தைக் கொடுத்திருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, முதல் 60 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் போதுமான அளவு கவனம் செலுத்தாத ஊடகங்கள் கடந்த 4 ஆண்டுகளாகப் பொருளாதார முன்னேற்றத்துடன் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாலும், ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பைச் சட்டரீதியாக தி.மு.க. திறன்பட எதிர்கொள்ளுவதாலும் இந்தக் கட்சியின் செயல்பாடுகளை, இயக்கத்தின் புரிதலை ஒற்றைப் பரிமாணத்திற்கு எதிராய் தமிழ்நாட்டிலிருந்து வரும் பன்முக செயல்பாடுகள் அனைத்து இந்திய ஊடகங்களையும் கவர்ந்துள்ளன. இதற்கு சர்வதேச ஊடகங்களும் விலக்கல்ல.


