மருத்துவர்கள் குடும்பம் எனக் கூறி 50 சம்பவங்களில் 200 சவரன் நகைகள் வரை மோசடி செய்த திருட்டுக்குடும்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.
சென்னையைச் சேர்ந்த ஜெகதீஷ், அவரது மனைவி கீதா மற்றும் இவர்களது 16 வயது மகள் ஆகிய மூவரும் திருவண்ணாமலையில் கடந்தாண்டு ஜூன் மாதம் வாடகைக்கு குடி பெயர்ந்து உள்ளனர். வீட்டு உரிமையாளர் ரகுராஜ்ஜிடம் தான் மருத்துவராக பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு தற்போது திருவண்ணாமலையில் பணி கிடைத்துள்ளதாகவும், அதனால் திருவண்ணாமலை வந்ததாகவும் நம்ப வைத்துள்ளனர். வாடகைக்கு குடி பெயர்ந்த 16 நாளிலேயே வீட்டு உரிமையாளரிடம் ஆசை வார்த்தை கூறி சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் தாங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாக கூறி தன்னுடன் வருமாறு வீட்டு உரிமையாளரின் மகனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும் மெரினா பீச்சில் போட்டோ ஷூட் எடுக்கலாம் என கூறி அழைத்துள்ளார். ராயப்பேட்டையில் அமைந்துள்ள பிரபல மாலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். உடைமாற்றும் அறைக்குச் சென்று புதிய மாடர்ன் டிரஸ்களை போட்டுப் பாருங்கள், அதற்கு முன்பாக நகைகளை கழட்டி தங்களிடம் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதன்பேரில் தான் அணிந்திருந்த 16 சவரன் நகைகளையும், தனது செல்போன்களையும் உடன் செலவுக்காக கொண்டு வந்திருந்த ரூபாய் 5000 பணத்தையும் கொடுத்துள்ளார்.

பின்பு வெளியே வந்து பார்த்தபோது ஜெகதீஷ், அவரின் மனைவி கீதா மற்றும் இவர்களது மகள் ஆகியோர் நகை செல்போன்களுடன் மாயமானது அறிந்த அதிர்ச்சி அடைந்தார். இதன் பேரில் அண்ணா சாலை போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். கடந்த ஏழு மாதங்களாக நகை திருடி சென்ற குடும்பத்தினர் குறித்து எவ்வித துப்பும் கிடைக்காததால், இதுகுறித்து மற்ற காவல் துறையினருக்கும் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை அனுப்பினர்.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் பகுதியில் அவர்கள் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஜெகதீஷை (52) போலீசார் கைது செய்துள்ளனர். காசு இல்லாததால் இது மூன்று நூதன திருட்டில் ஈடுபட்டு கிடைக்கும் நகைகளை விற்று நாடு முழுவதும் செல்வதாக ஜெகதீஷ் வாக்குமூலம் அளித்திருந்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெகதீஷ் குடும்பமாக இந்த நூதனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஜெகதீஷ் உடன் சென்னையில் எங்கு இருந்த அவரது மக்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்த இருவரையும் அண்ணா சாலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, ஜெகதீஷ் மருத்துவர் இல்லை என்பதும் இவர்கள் குடும்பமாக சேர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் வாடகைக்கு வீடு எடுத்து வீட்டு உரிமையாளர் அல்லது அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களை ஆசை வார்த்தைக் கூறி நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
குறிப்பாக, இவர்கள் திட்டமிடும் நபரிடம் நட்பாக பழகி வீட்டில் நல் நிகழ்வு வைத்திருப்பாகக்கூறி அவர்களை உயர்தர சலூனுக்கு அழைத்துச் சென்று நூதன திருட்டில் ஈடுப்படுவது. அதேபோல தாங்கள் மருத்துவர் குடும்பம் எனக்கூறி தங்களுக்கு பாராட்டு விழா வைத்திருப்பதாக கூறி தங்களுடனே காரில் வெளியூருக்கு அழைத்துச் சென்று வழிப்பறியில் ஈடுப்படுவது என இரண்டு வகைகளில் நூதன திருட்டில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டு படப்பையில் மீன் வியாபாரம் செய்யும் பெண்ணிடம் நட்பாக குடும்பத்தோடு பழகி வீட்டில் நல்நிகழ்ச்சி வைத்திருப்பதாக கூறி பியூட்டி பார்லர் அழைத்துச் சென்று அவரிடம் இருந்து 6 சவரன் நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டதும், பூந்தமல்லியில் பிரியாணி வியாபாரம் செய்யும் நபர் ஒருவரிடம் குடும்பத்தோடு நட்பாக பழகி, குடும்ப நல்நிகழ்ச்சி எனக்கூறி உயர்தர சலூனுக்கு அழைத்துச் சென்று 3 சவரன் நகை, இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகிவற்றை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
அதேபோல குரோம்பேட்டை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் பெண்ணை நட்பாக்க அந்த கடைக்கு நகை விற்க சென்று நட்பாக்கி பின், அதேபாணியில் அவரிடமிருந்து நகை பணம் ஆகியவற்றை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதேபோல, சென்னையில் மட்டும் சாஸ்திரி நகர், குரோம்பேட்டை, தாழம்பூர், படப்பை, தேனாம்பேட்டை, செம்பியம், பூந்தமல்லி, வேளச்சேரி பகுதிகளில் நூதன முறையில் வழிப்பறி செய்து வந்தததும், இது தவிர கோவை, திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.
மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு வேளச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், அதன்பிறகு பெங்களூரில் ஒருமுறை, ஆந்திராவில் ஒருமுறை கைது செய்யப்பட்டு ஜெகதீஷ் சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது. இவர்கள் சில காலம் ஆந்திராவில் தங்களது பெயர் மாற்றி தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், கோவையில் சொந்த வீடு கட்டியிருப்பதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜெகதீஷ் கேரளாவைச் சேர்ந்த சோனி என்பவரோடு முதல் திருமணம் செய்து திருட்டில் ஈடுப்பட்டு வந்ததும், பின் அவர் பிரிந்து சென்றுவிட்டதால் ஸ்டெல்லா, கீதா என்ற இரு பெண்களோடு திருமணம் ஆகி தற்போது குடும்பத்தோடு நூதன திருட்டில் ஈடுப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. ஆன்லைன் வாயிலாக போலீசார் பின்தொடர் கூடாது என ஆன்லைன் பணப்பரிவத்தனையில் ஈடுப்படாமல் காகித பணப்பரிவர்த்தனை மட்டுமே செய்து வந்தந்தும், 50 க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை ஏமாற்றுவதற்காக பழகும் நபர்களின் பெயரிலேயே வாங்கி அதை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது. கொள்ளையடிக்கும் பணத்தை ஜாலியாக ஜெகதீஷ் பைக் ரைடு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆடம்பரமாக செலவு செய்ததும் தெரியவந்தது.
இதுவரை இவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட மோசடிகளில் 200க்கும் அதிகமான சவரன் தங்க வைர நகைகளை மோசடி செய்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மோசடிக்கும் தனது இரண்டு மனைவிகளையும் மாறி மாறி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 2017 ம் ஆண்டு வேளச்சேரியில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பிறகு செம்பியம், குரோம்பேட்டை, தாழம்பூர், படப்பை, அண்ணா சாலை உள்ளிட 7 காவல் நிலையங்களில் இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டதும், யாரிடமும் சிக்காமல் இத்தனை காலம் மோசடியில் ஈடுப்பட்டதும் தெரிய வந்து காவல்துறையினரே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். விசாரணைக்கு பின்னர், ஜெகதீஷ் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரிடம் இருந்தும் 16 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ஜெகதீஷின் மனைவிகளான கீதா மற்றும் ஸ்டெல்லா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


