ஜனநாயக முறைப்படி திமுக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுகவினர் டெபாசிட்டை பெற ரவுடிகளை வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கொடுத்து குளறுபடி செய்வதாக ஆதாரத்துடன் திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறாதவாறு காவல்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா தலைமையில், சேத்துப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக செயல்பட்ட இருவரை திமுக நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிடிபட்டவர்களை உடனடியாக சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்த திமுக தரப்பு, அவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், உடனடி கைது நடவடிக்கை எடுக்க முடியாது என தேர்தல் பறக்கும் படையினரும் காவல்துறையும் தெரிவித்ததால், அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழன் பிரசன்னா, “எழும்பூர் தொகுதியில் அதிமுகவினர் தொடர்ந்து பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். நேற்றும் இதேபோன்று இரண்டு பேர் பணம் வழங்கியதாக புகார் அளித்துள்ளோம். இன்று பிடிபட்டவர்களும் வாக்காளர் பட்டியலை வைத்தே பணம் விநியோகம் செய்துள்ளனர்” என்று கூறினார்.
மேலும், “சேட்டா வினோத் மற்றும் வசந்த் டேவிட் உள்ளிட்ட ரவுடிகளை பயன்படுத்தி பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. இதை தடுக்க முயன்றபோது எங்களை கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுக்கப்படுகிறது” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுக தரப்பு ஜனநாயக முறையில் தேர்தலை நேர்மையாக எதிர்கொண்டு வருவதாகவும், எந்தவித பணப்பட்டுவாடாவும் செய்யாமல் இரவு பகலின்றி உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், அதிமுகவினர் டெபாசிட் காப்பாற்றுவதற்காக சட்டவிரோத முறைகளை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய தமிழன் பிரசன்னா, “சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேன்” என எச்சரிக்கை விடுத்தார்.
40 ஆண்டு காலமாக தான் செய்த சாதனைகளை பட்டியலிட்டார் அமைச்சர் துரைமுருகன்
