இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு சதவீதத்தை நடப்பு ஆண்டில் ஒழித்துக் கட்டவும் அல்லது மறு விநியோகம் செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. கௌரவமான வேலைகளுக்கு இந்திய இளைஞர்கள் அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில் ரயில்வே வாரியத்தின் இம்முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது என சிபிஐ(எம்) பெ.சண்முகம் கூறியுள்ளாா்.
இதுகுறித்து, மாநில செயலாளா் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரயில்வேயில் இப்போது 14.80 லட்சம் பதவிகள் அனுமதிக்கப்பட்டவையாக உள்ளன. அதில் 2 சதவீதத்தை அதாவது 29,608 பணியிடங்களை ஒழிப்பது அல்லது மறு விநியோகம் செய்வது என்பதே ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல் ஆகும். இதன் வாயிலாக தென்னக ரயில்வேயில் மட்டுமே 2,000 பணியிடங்கள் வரை பறிபோகும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பணியிட ஒழிப்பு ஒவ்வோராண்டும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. 2024 – 25-ல் 28,815 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன.
உலகமய பொருளாதாரப் பாதையின் “வேலை பறிப்பு வளர்ச்சி” (Jobless Growth) என்பதற்கு ஒரு அரசுத் துறையே பெரும் சாட்சியமாக விளங்குகிறது. இந்த காலத்தில் ரயில்வே வளர்ச்சி அபரிமிதமானது. சரக்கு போக்குவரத்து 74 சதவிகிதம், என்ஜின்கள் 51 சதவிகிதம், தண்டவாளம் 25 சதவிகிதம் அதிகரிப்பை கண்டுள்ளன. ஆனால், 1991 க்கு பின்னர் 25 ஆண்டுகளில் இவ்வாறு ஒழிக்கப்பட்ட பணியிடங்கள் 1.7 லட்சம் ஆகும். ஆனால், பணியிட ஒழிப்பு பிரச்சனை இன்னும் ஆழமானது. அனுமதிக்கப்பட்ட பணி இடங்கள் குறைக்கப்பட்டாலும், குறைக்கப்பட்ட இடங்களாவது நிரப்பப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. அப்படி நிரப்பப்படாத இடங்களான 2.5 லட்சத்தையும் சேர்த்தால் மொத்தம் 4.2 லட்சம் இடங்கள் 25 ஆண்டுகளில் பறி போயிருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்த மோடி அரசு, ஒரு துறையில் மட்டுமே ஒவ்வோராண்டும் பல்லாயிரக் கணக்கான வேலை வாய்ப்புகளை பறித்து வருகிறது. இதற்கு காரணம் தனியார்மயம், காண்ட்ராக்ட் மயம் என்கிற அரசின் கொள்கையே ஆகும்.

மோடி அரசின் கொள்கைகளே ரயில்வே நிர்வாகத்தால் மிகக் கடுமையான முறையில் அமலாக்கப்படுகிறது. இது இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பது, ஊழியர்களின் பணிச் சுமையை கடுமையாக உயர்த்தி பயணிகளின் உயிர்களோடு விளையாடுவது, அரசுத் துறையின் வேலை வாய்ப்புகள் கடுமையாக குறைக்கப்படுவது சமூக நீதி, இட ஒதுக்கீடு மீது கடும் தாக்குதலைத் தொடுப்பது என்ற வகையில் ரயில்வே வாரியத்தின் இம்முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இது சம்பந்தமாக ஏப்ரல் 24ந் தேதி ரயில்வே வாரியத்தின் சுற்றறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது” என பெ.சண்முகம் கூறியுள்ளாா்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
