Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் நிர்மல்குமாருக்கா விதிமீறலா?…ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

அமைச்சர் நிர்மல்குமாருக்கா விதிமீறலா?…ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்வதற்காகக் கோவில் நடை தாமதமாக அடைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடுத்த வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் நிர்மல்குமாருக்கா விதிமீறலா?…ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

தமிழக அமைச்சரவையில் அண்மையில் பதவியேற்ற அமைச்சர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் கடந்த 15ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் மதியம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். அவரை வரவேற்க கோயில் முன்பாக தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

we-r-hiring

அமைச்சருக்கு கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், அவர் தனது ஆதரவாளர்களுடன் மூலஸ்தானத்திற்கு சென்று தரிசனம் செய்தார். வழக்கமாக கோயிலில் மதியம் 12.45 மணியளவில் நடை சாத்தப்பட்டு, அதன்பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், அமைச்சர் வருகையையொட்டி நடை சாத்தப்படுவது தாமதமானதாக கூறப்படுகிறது.

தகவல்களின் படி, அமைச்சர் நிர்மல் குமார் மதியம் 1 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து, 1.06 மணிக்கு தரிசனம் முடித்ததாகவும், 1.15 மணிக்கு வெளியேறிய பிறகே நடை சாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுவாக பக்தர்கள் வெளியேறும் வழிமுறைக்கு மாறாக, அமைச்சருக்காக பிரதான வாசல் திறக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, “பக்தர்களுக்கு ஒரு விதி, அமைச்சருக்கு வேறு விதியா?” என்ற கேள்வி எழுந்து சர்ச்சை அதிகரித்தது.

இந்த விவகாரம், கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறை தொடர்பான வழக்கின் விசாரணையின் போது மதுரை கிளை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, “அமைச்சரின் தரிசனத்திற்காக நடை சாத்துவது தாமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது; மேலும், அமைச்சர் உள்ளிட்டோர் கருவறை அருகே சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஆகவே, அன்றைய தினம் கோயிலில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவான அறிக்கையை அறநிலையத் துறை செயலாளர் அடுத்த வாரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பான வழக்கிற்கு பின்னர், கோயில் நிர்வாக நடைமுறைகள் குறித்த மற்றொரு முக்கிய விவகாரத்திலும் நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை!

MUST READ