Homeசெய்திகள்ஆவடிஆவடி ரயில் நிலையத்தில் 6 முக்கிய விரைவு ரயில்கள் நின்று செல்லுமா? – 30 ஆண்டுகாலக்...

ஆவடி ரயில் நிலையத்தில் 6 முக்கிய விரைவு ரயில்கள் நின்று செல்லுமா? – 30 ஆண்டுகாலக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் பொதுமக்கள்!

-

- Advertisement -

சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் ஆவடி ரயில் நிலையத்தில், ஆறு முக்கிய விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆவடி ரயில் நிலையத்தில் 6 முக்கிய விரைவு ரயில்கள் நின்று செல்லுமா? – 30 ஆண்டுகாலக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் பொதுமக்கள்!

பயணிகளின் நீண்டகாலச் சிரமங்களையும், இப்பகுதியின் மக்கள் தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பாஜக திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ராஜசிம்மா மகேந்திரா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இதுதொடர்பாகக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

வளர்ந்து வரும் ஆவடி – பயணிகளுக்கு தொடரும் சிரமம்!

சுமார் ஆறு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஆவடி, வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மத்திய அரசின் முக்கியப் பாதுகாப்பு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இப்பகுதி, ஆவடி மட்டுமின்றி பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் முக்கியப் போக்குவரத்து மையமாக விளங்குகிறது.

இருப்பினும், பல முக்கிய விரைவு ரயில்கள் ஆவடியில் நிற்காமல் செல்வதால், லட்சக்கணக்கான பயணிகள் சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணம் வரை சென்று பயணிக்க வேண்டிய நிலை இருப்பதாகக் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ரயில்வே வாரியம் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கோரிக்கை!

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவரும், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவருமான டி. சடகோபன் கூறுகையில், ஆவடி பாதுகாப்புத்துறைப் பணியாளர்கள் அதிகம் வசிக்கும் முக்கியப் பகுதியாக இருப்பதுடன், அருகிலுள்ள பட்டாபிராமில் டைடல் பார்க் அமைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரக்கோணத்தில் இருந்து வரும் பயணிகள் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை சென்று, அங்கிருந்து மின்சார ரயில்கள் மூலம் மீண்டும் ஆவடிக்குத் திரும்ப வேண்டிய சிரமம் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஏ பிரிவு நிலையமாக உயர்ந்தும் விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் இல்லை!

ஆவடியைச் சேர்ந்த திலீப் ஜோசப் கூறுகையில், ஆவடி ரயில் நிலையம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வருவாய் ஈட்டுவதாகவும், ஆவடி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ‘பி’ பிரிவு நிலையத்திலிருந்து ‘ஏ’ பிரிவு ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏ பிரிவு ரயில் நிலையமாக இருந்தபோதிலும், போதிய விரைவு ரயில் நிறுத்தங்கள் வழங்கப்படவில்லை என்றும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர், ரயில்வே ஊழியர்கள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வருவதால், விரைவு ரயில் நிறுத்தங்கள் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

தற்போது சென்னை சென்ட்ரல் நோக்கிச் செல்லும் இரண்டு விரைவு ரயில்கள் மட்டுமே ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்வதாகவும், அரக்கோணம் நோக்கிச் செல்லும் ரயில்களுக்கு அதேபோன்ற நிறுத்த வசதி இல்லாதது பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

நிறுத்தம் கோரப்படும் 6 முக்கிய விரைவு ரயில்கள்!

ஆவடி ரயில் நிலையத்தில் கீழ்க்கண்ட ஆறு முக்கிய விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:

1. 12695 / 12696 – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில்
2. 13351 / 13352 – தன்பாத் – ஆலப்புழா விரைவு ரயில்
3. 12673 / 12674 – சேரன் விரைவு ரயில்
4. 12639 / 12640 – பிருந்தாவன் விரைவு ரயில்
5. 17651 / 17652 – காச்சிகுடா – செங்கல்பட்டு விரைவு ரயில்
6. 17653 / 17654 – காச்சிகுடா – புதுச்சேரி விரைவு ரயில்

மேலும், 43806 அரக்கோணம் – சென்னை கடற்கரை விரைவுப் புறநகர் ரயில் மற்றும் 6634 திருவண்ணாமலை – தாம்பரம் விரைவு ரயில் ஆகியவற்றுக்கும் ஆவடியில் நிறுத்தம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் இந்தக் கோரிக்கைக்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

பட்டாபிராம் ரயில் நிலையத்திற்கு முறையாக ரயில்கள் வருவதில்லை – திருவள்ளூர், அரக்கோணத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்கப் பயணிகள் சங்கம் கோரிக்கை!

MUST READ