அதிமுக – பாஜக அணியில் இடம்கிடைக்காத நிலையில் ஓபிஎஸ்க்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு விஜய் தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக ஓபிஎஸ் முதன் முறையாக கண்டனம் தெரிவித்துள்ளது மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து ஆகியவற்றின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கது என்று முதன்முறையாக ஓபிஎஸ் மத்திய அரசை கண்டித்துள்ளார். ஓபிஎஸ் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பாஜகவின் அரவணைப்பில் இருந்து வந்தார். சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்குவதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி தான் காரணம். அது அவரே ஒப்புக்கொண்டதுதான். பிறகு பிரதமர் மோடி தலையிட்டதால் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டேன் என்கிறார். அதுவே தற்போது தற்போது அரசியல் ரீதியாக ஆபத்தாக உள்ளது என்று சொன்னார். ராமேஸ்வரம் பாலம் திறப்பின்போதே ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு பிறகு தற்போது அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுவிட்டது. அதனால் பிரதமர் மோடி, ஓபிஎஸ்-ஐ பார்க்க வாய்ப்பு இல்லை. அது அவருக்கே தெரியும். ஏனென்றால் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அவர்தான் கசியவிட்டார். பிரதமரை சந்திப்பதற்கு நயினாருக்கே வாய்ப்பு கிடையாது. அவர் எப்படி ஓபிஎஸ்க்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவார்.
ஓபிஎஸ்க்கு, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புகளே கிடையாது. காரணம் எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறபோதே இந்த நிபந்தனைகளை விதித்திருப்பார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார். ஓபிஎஸ் பெரிய அளவுக்கு போராடிய போதும் அவருடன் 3 எம்எல்ஏக்கள் தான் போனார்கள். வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் வந்துவிடுவார்கள். ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கினால் அவர்கள் தாமாகவே அதிமுகவுக்கு வந்துவிடுவார்கள்.
டிடிவி தினகரன், விஜய் தலைமையில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார். சீமான் தலைமையில் ஏற்கனவே மூன்றாவது அணி உள்ளது. ஏனென்றால் அவர் ஏற்கனவே 8 சதவீத வாக்குகளை வாங்கிவிட்டார். விஜய் இனிமேல்தான் வாக்குகளை வாங்கிட வேண்டும். அப்படி இருக்கும்போது சீமான் தான் மூன்றாவது அணி ஆவார். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் என்றுதான் பார்க்க வேண்டும். விஜய் நான்காவதாக களத்தில் நிற்கும் நபராவார்.
அப்போது விஜய் தலைமையில் ஒரு அணி, அமையப் போகிறது என்று டிடிவி தினகரன் சொல்வதாக நாம் புரிந்துகொள்ளலாம். ஏனென்றால் அதிமுக அணியில் அவருக்கும் இடம் கிடையாது. புதிய ஜனநாயக கட்சி பார்க்கிறது. மதிமுக எம்.பி. துரை வைகோ திருச்சியின் எம்.பி. என்கிற முறையில் பார்தேன் என்று சொல்கிறார். வைகோ, ஒன்றிய பாஜக அமைச்சர்களை சந்தித்து மனு அளித்துக் கொண்டிருக்கிறார்.
டிடிவியின் அறிக்கை, ஓபிஎஸ்ன் கண்டனம், எடப்பாடி கூட்டணியில் இன்னும் கட்சி சேரும் என்று சொல்வது இவற்றை எல்லாம் சேர்த்து பார்க்கும் போது தமிழ்நாட்டில் 4 அணிகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. 4 அணிகள் இருக்கும்போது திமுக மற்றும் திமுக அணிக்கு எதிரான வாக்குகள் தான் பிளவுபடும். அதனால்தான் விஜய், திமுக – பாஜக மறைமுக கூட்டணி. பாஜகவுக்கு ஆதரவாக தான் திமுக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைக்கிறார். ஏனென்றால் திமுக எதிர்ப்பு வாக்குவங்கி பிளவுபடுவதால் லாபம் இல்லை. பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கியும் பிளவுபட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
பண்ருட்டி ராமச்சந்திரன், என்.டி.ஏ கூட்டணியை ஆபத்தானது என்று சொல்கிறார். அவர் ஓபிஎஸ்க்கு எது நல்லது, எது கெட்டது என்றுதான் சொல்கிறார். ஓபிஎஸ் இன்னமும் பாஜக அணியில் இருப்பதில் அர்த்தமில்லை. எதற்கு அங்கே இருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை அவருக்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு விஜய்தான். அதேவேளையில் விஜய், அவரை ஏற்றுக்கொள்வாரா என்கிற கேள்வி இருக்கிறது. ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்த்தால் அவருடன் இருக்கும் எக்ஸ்ட்ரா லக்கேஜ்களையும் சேர்க்க வேண்டிவரும். புதிதாக கட்சி தொடங்கிய விஜய், எதற்காக பழைய அரசியல்வாகளை சேர்க்கிறார். அப்படி சேர்த்தால் எத்தனை இடங்களை வழங்குவார். ஓபிஎஸ் உடன் சென்ற 3 எம்எல்ஏக்கள் விஜயுடன் போக தயாராக உள்ளனரா? இதில் பல கேள்விகள் உள்ளன.
டிடிவி தினகரனுக்கு தனிக்கட்சி, தனி சின்னம் உள்ளது. அவர் எந்த கூட்டணிக்கு வேண்டுமென்றாலும் போகலாம். இல்லாவிட்டால் அவரே ஒரு கூட்டணியை கட்டமைக்கலாம். அவருக்கு வாய்ப்புகள் அதிகம். ஒபிஎஸ் நிலையில் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் அவரிடம் கட்சியே இல்லை. இனிமேல்தான் புதிய கட்சிக்கான முயற்சியே அவர் தொடங்க வேண்டும். பாஜகவை பகைத்துக்கொண்டு கட்சி தொடங்கினால், தேர்தல் ஆணையம் தங்களால் முடிந்த அளவுக்கு கால தாமதம் செய்துவிடும். அமமுகவுக்கு கட்சிக்கான பதிவுக்கு ஒன்னேகால் வருடமானது. அப்படி இழுத்துவிட்டால் ஓபிஎஸ் என்ன செய்வார்?

ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்தால், அவரது மகன் அதை ஏற்றுக்கொள்வாரா? எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தால் அவருக்கு தேனி எம்.பி., சீட்டோ, பெரியகுளம் எம்எல்ஏ சீட்டோ உறுதியாகிவிடும். அப்பா அரசியல் ரீதியாக ஒரு முடிவு எடுக்கிறார். அது அரசியல்
ரீதியாக எடுபடாது என்று அவர் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் நினைத்தால் என்னாவது? பாமகவில் பிரச்சினையே அதுதானே. அப்பாவின் அரசியல் பார்வை ஒன்றாகவும், மகனுடைய பார்வை ஒன்றாகவும் உள்ளதுதானே பிரச்சினை. வைகோவுக்கும், அவரது மகனுக்கும் கூட அந்த வேறுபாடு தெரிகிறது. அப்படிபட்ட ஒரு நிலையை எடப்பாடி பழனிசாமியே உருவாக்கி விடுவார். எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றவர்களை அதிமுகவுக்குள் அனுமதித்தால், ஓபிஎஸ் அணி உடைந்துவிடும். தற்போது ஓபிஎஸ்தான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்.
பாஜக தன்னுடைய இடங்களில் ஓபிஎஸ்க்கு சீட் கொடுத்தால், அவர் கூட்டணியை விட்டு செல்லாமல் இருப்பார் என்கிற வாதம் உள்ளது. அப்படி பாஜக இடம் கொடுத்தால் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். அது ஓபிஎஸ்க்கு சிக்கலாகும். பாஜக தரப்பில் இருந்து 3 சீட்டுகள் கொடுத்தால் ஓபிஎஸ், அவரது மகன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவருக்கு தான் தருவார்கள். அப்போது, வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியனின் நிலை என்னவாகும்? இது உண்மையில் அவரால் தாண்ட முடியாத சிக்கலாகும். தனிக்கட்சி, தனி அணி என்பது சரியானது. அப்போது 3 எம்எல்ஏக்களும் அவருடன் இருப்பார்களா என்று சொல்ல முடியாது.
எடப்பாடி நினைத்தால் அவர்கள் மூன்று பேரையும் அதிமுகவுக்குள் இழுத்துவிடுவார். தன்னை நம்பி வரக்கூடியவர்களுக்கு வெற்றியை தேடித் தருபவர்தான் தலைவர். இல்லாவிட்டால் அவரை ஏன் தலைவர் என்று அழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி Vs திமுக கூட்டணி. என்டிஏ கூட்டணியில், பாஜக, அதிமுக உள்ளன. புதிய நீதிக்கட்சி போன்ற சிறிய அளவிலான கட்சிகள் இருக்கலாம். அவர்களுக்கு சில குறிப்பிட்ட பகுதிகளில்தான் செல்வாக்கு உள்ளது. இதை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு இருக்கின்ற சீமானோ, செல்வாக்கு உள்ளதாக சொல்லப்படுகிற விஜயோ அதற்குள் வர வாய்ப்பு இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.