spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவெடித்த நயினார் விவகாரம்! அண்ணாமலை - ஓபிஎஸ் கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

வெடித்த நயினார் விவகாரம்! அண்ணாமலை – ஓபிஎஸ் கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

நயினார் நாகேந்திரனின் கேம் பிளான் என்பது முக்குலத்தோர் சமுதாயத்தின் ஐகானாக மாற வேண்டும் என்பதுதான். எனவே அவர் என்.டி.ஏ கூட்டணிக்குள் ஓபிஎஸ்-ஐ மீண்டும் உள்ளே விட மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்ட விவகாரத்தில் ஓபிஎஸ், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இதன் பின்னணியை விளக்கி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- ஓபிஎஸ் – நயினார் மோதல் வலுத்துக்கொண்டே செல்கிறது. நயினார் நாகேந்திரனுக்கு முக்குலத்தோர் சமுதாயத்தின் அடையாளமாக வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டது. ஓபிஎஸ் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் சொன்னாலும், அவர் உள்ளூர விரும்பவில்லை. இயல்பாக ஒரு சமுதாயத்தின் ஐகானாக மாற வேண்டும் என்றால் இரண்டு பேருக்கு அங்கு இடமில்லை. ஏற்கனவே சமுதாய அடையாளமாக டிடிவி தினகரன் இருக்கிறார். சசிகலா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. ஒபிஎஸ் விலகல் காரணமாக பாஜக கூட்டணிக்கு ஒரு சில ஆயிரம் வாக்குகள் பாதிக்கப்படலாம். சில தொகுதிகளில் கவனம் செலுத்தி வேலை பார்க்கலாம். அதேவேளையில் கூட்டணி இல்லாமல் ஓபிஎஸ் மற்றும் அவரை நம்பி வந்தவர்கள் மீண்டும் எம்எல்ஏ ஆகிவிட முடியாது. அப்போது ஓபிஎஸ்க்கு எதோ ஒரு கூட்டணி அவசியமாகும். அதனால்தான் ஓபிஎஸ் தனது அறிக்கைகளில் கூட்டணி தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் திமுக கூட்டணிக்கு இன்னமும் கதவுகள் திறந்திருக்கின்றன என்றுதான் நான் எடுத்துக்கொள்கிறேன்.

we-r-hiring

பாஜக கூட்டணிக்கு வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு ஆகும். காரணம் ஓபிஎஸ்க்கு குறைந்தபட்சம் 4 எம்எல்ஏக்கள் வேண்டும். அதிகபட்சம் 7 – 8 இடங்கள் தேவைப்படும். பாஜகவின் பங்கில் இருந்து ஓபிஎஸ்க்கு சீட் கொடுப்பதாக இருந்தால்? என்ற கேள்வி எழலாம். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அதிகபட்சம் 20 அல்லது கூடுதலாக 2 இடங்களை தரலாம். அதில் ஓபிஎஸ்-க்கும், டிடிவி-க்கும் இடங்களை விட்டுக்கொடுத்தால் பாஜகவுக்கு என்ன மிஞ்சும்? 24 இடங்கள் என்று வைத்துக் கொண்டாலும் இருவருக்கும் தலா 4 இடங்கள் கொடுத்தால், பாஜகவுக்கு 16 இடங்கள் மட்டும் தான் கிடைக்கும். எனவே அது சாத்தியமில்லை. தற்போதைக்கு ஓபிஎஸ் நிலைப்பாடு என்பது, தற்போதைய அதிமுக சரியில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக அதன் அடிப்படை கொள்கைகளை கைவிட்டு விட்டது என்பதுதான். ஆனால் 2021 வரை அதிமுக-வின் இரட்டைத் தலைமையில் ஒருவராக ஓபிஎஸ் இருந்துள்ளார்.  2021 தேர்தலில் 70 எம்எல்ஏ-க்கள் வரை வெற்றிபெற்றுள்ளனர். எனவே ஜெயலலிதா மறைந்த பிறகும் அதிமுக ஒன்றும் சோடை போய்விடவில்லை. அப்போது  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பூஜியமாகிவிட்டது என்கிற ஓபிஎஸ் வாதம் ஏற்புடையதல்ல.

ஓபிஎஸ் 2017ஆம் ஆண்டில் தர்மயுத்தம் தொடங்கினார். சில மாதங்கள் தான் தாக்குபிடித்தார். பின்னர் ஏன் பாஜகவின் பேச்சை கேட்டுக்கொண்டு அரசாங்கத்திற்குள் சென்றார்? காரணம் அவரால் பதவி இல்லாமல் இருக்க முடியாது. கிட்டத்தட்ட 25 வருடங்கள் பதவியில் இருந்துவிட்டு, தற்போது ஓபிஎஸ் பதவி இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமாகும். எனவே எங்கே பதவி கிடைக்கும் என்பதற்கு ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். தற்போதைக்கு திமுக கூட்டணியில் எம்எல்ஏ பதவியாவது கிடைக்கும் என்கிற ஒரு எண்ணம் அவர்களுக்கு இருக்கும். இதில் பிரச்சினை என்ன எனில் அதிமுக வாக்கு வங்கி அதை ரசிக்காது. அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு என்று வைத்துக்கொண்டு திமுக கூட்டணிக்கு செல்வது தர்மசங்கடமாகும். அதை ஓபிஎஸ் தாண்ட வேண்டும். அவர் எப்படி கடந்து செல்கிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலையை பொருத்தவரை இன்றைய தேதிக்கு அவருக்கு எந்த பொறுப்பும் கிடையாது. தேசிய அளவில் பொறுப்பு வந்தாலும் அவர் வேறு மாநிலத்திற்கு பொறுப்பாளராக தான் செல்ல வேண்டி வரும். தன்னுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதிமுக – பாஜக கூட்டணி அமைய  அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று அமித்ஷாவை, எடப்பாடி மிரட்டினார் என்ற வாதம் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனையை அமித்ஷா ஏன் ஏற்றுக் கொண்டார்? அண்ணாமலை தலைமையில் பாஜக குறிப்பிடத்தக்க அளவிலான வாக்குகளை வாங்கியுள்ளது. அதை வைத்து பார்த்தால் தற்போதுள்ள எம்எல்ஏ-க்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிடுவார்கள். கூடுதலாக 3 பேர் கூட முயற்சித்திருக்கலாம். அப்போது தனி அணியாக போட்டியிட்டு இருக்கலாம் அல்லவா? எதற்காக அண்ணாமலையை தியாகம் செய்ய வேண்டும்? அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அண்ணாமலை நடந்துகொண்ட விதம் என்பது, ஜெகதீப் தன்கர் நடந்துகொண்டது போன்றுதான். தன்கர் தானாக பதவி விலகினார். அண்ணாமலைக்கு பதவிக்காலம் முடிந்துவிட்டது அவ்வளவுதான்.

2026 தேர்தல்! ஆட்சி அமைக்கப் போவது யார்?

எப்போது கட்சித்தலைமை உடன் ஒற்றுமை இல்லாவிட்டால் இந்த பிரச்சினை ஏற்படும். அரசவையில் நீடிக்க வேண்டும் என்றால், அரசர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். மாற்றுக்கருத்து சொல்லக்கூடாது. ஆனால் அண்ணாமலை மாற்றுக் கருத்து சொல்லியுள்ளார். மோடி, அமித்ஷா சேர்ந்துதான் அண்ணாமலையை மாற்றி உள்ளனர். தேர்தல் வருகிறபோது ஒரு 8 மாதத்திற்கு மாநிலத் தலைவராக அண்ணாமலை நீடிப்பதால் என்ன ஆகிவிடும்? இந்த கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. மத்தியில் மைனாரிட்டி  அரசு அமைத்துள்ள பிரதமர் மோடி, தன்னுடைய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளை சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போது செயல்பாட்டின் அடிப்படையிலா அமைச்சரவை கொண்டுவந்தார். கடந்த முறை பொறுப்பில் இருந்தவர்களையே மீண்டும் அமைச்சராக்கினார். 240 இடங்களை வைத்துக்கொண்டு அமைச்சரவை அமைக்கும்போது தொடர்ச்சி அவசியம் என்று மோடி நினைக்கிறார். அதேபோல் தமிழ்நாடு அரசியலிலும் அண்ணாமலையை தொடர தானே செய்திருக்க வேண்டும். எனவே எடப்பாடி பழனிசாமியின் வற்புறுத்தல் காரணமாக அண்ணாமலை நீக்கப்பட்டார் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

தமிழக பாஜகவின் மாநில தலைவரை மாற்றிவிட்டதால், அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் மறுஜென்மம் என்கிற ஒன்று கிடையாது. நயினார் நாகேந்திரன் புத்திசாலித்தனமாக என்ன நினைக்கிறார் என்றால்? இது நமக்கான வாய்ப்பு. நம்முடைய ஆதரவு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் என்று நயினார் நினைக்கிறார். அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிலும் சாதிய தலைவர்கள் உண்டு. சாதிக்கட்சியாக அவர்கள் இல்லாதபோதும் குறிப்பிட்ட சமுதாயத்தை அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். அவர்கள் மீது கை வைத்தால் சமுதாய வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று நினைப்பார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் என்பதால் சில முடிவுகளை தைரியமாக எடுத்தனர். மற்றவர்களுக்கு அந்த செல்வாக்கு கிடையாது. அப்போது பாஜக, நயினாரின் கேம் பிளான் என்பது அவர், முக்குலத்தோரின் அடையாளமாக மாறுவது தான். அவர் எப்படி ஓபிஎஸ்-ஐ மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் உள்ளே விடுவார். அதற்கு வாய்ப்பு கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ