2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சென்னையில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா செல்லும் நெடுஞ்சாலையில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் (எல்சி-2) உள்ளது. இந்த ரயில்வே கேட் சுமார் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மூடப்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறை மூலம் கடந்த 2010 ம் ஆண்டு 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. பின்னர் திட்டத்தை மறுமதிப்பீடு செய்து, ரூ.52.11 கோடியாக உயர்த்தி கடந்த 2018-ம் ஆண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்க தீர்மானிக்கப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது.
இதனால் சென்னை – திருப்பதி ரேணிகுண்டா நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் தற்போது 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றனர்.
இது குறித்து முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு அஞ்சல் அட்டைகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி பணிகளை விரைவில் முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெயக்குமாரிடம் பேசும்போது, கடந்த 25 ஆண்டுகாலமாக மேம்பாலம் வேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த பாலத்தின் வேலை ஆமை வேகத்தில் நடைபெறுவதால் இந்த பகுதி பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கருத்துக்கள்;
புஷ்பா: மேம்பாலப்பணி நடைபெற்று வரும் பகுதியில் வசித்து வருகிறோம். கட்டுமானப்பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதால் சாலையில் ஏற்படும் புழுதிகளால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், மழைக்காலங்களில் வீட்டின் அருகே சேறும், சகதியுமாய் இருப்பதால் மிகவும் அவதிக்குள்ளாகிறோம்.
ராதா: இப்பகுதியில் மேம்பாலப்பணி நடைபெற்று வருவதால் பேருந்துகள் வழக்கமாக செல்லாமல் வேறு வழியில் இயக்கப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதலால் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டுகிறோம்.
கோபி: நான் இப்பகுதியில் 15 வருடமாக வசித்து வருகிறேன். இப்பகுதியில் மேம்பாலப்பணி நடைபெற்று வருவதால், 5 லிருந்து 6 கிலோ மீட்டர் வரை சுற்றி வேறு சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இப்பகுதியில் இருசக்கர வாகனங்களை இயக்குவது கடினமாக உள்ளது. விபத்துகள் நிகழ்கிறது. நான் மழையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது இப்பகுதியில் சேற்றில் வாகனம் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானேன்.
ஆட்டோ பிரகாஷ்: சுற்று வட்டாரத்திற்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இச்சாலை உள்ளது. இச்சாலை இங்கிருந்து திருப்பதி வரை செல்லும் நெடுஞ்சாலையாகவும் உள்ளது. அவசர காலங்களில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துசெல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இப்பகுதியில் ரயில்வே கேட் போடும் பொழுது குறைந்தது அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேம்பாலப்பணி முடிவடையும் வரை பக்கத்திலேயே மற்றொரு சாலையை ஏற்படுத்தி கொடுத்திருந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருந்திருக்கும். மேப்பாலப்பணியை 4 பேர் மட்டுமே செய்து வருவதால் எப்போது இப்பணி முடிவடையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகவே, அரசு இம்மேம்பாலப்பணியை விரைந்து முடித்து தந்தால் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவிப்போம் என்று கூறினார்.