இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டிருப்பது, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாம்பழ விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய மா உற்பத்தி மாவட்டமான கிருஷ்ணகிரியில் இந்த அறிவிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் மா சாகுபடியில் முன்னணியில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மாம்பழங்கள் உள்நாட்டு சந்தைகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிலுக்கும் இப்பகுதி முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில், பழப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் கிருமி நீக்கம் மற்றும் புகைமூட்டும் (Fumigation) நடைமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாகக் கண்டறிந்த ஜப்பான் அரசு, இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பதப்படுத்தும் ஆலையில் ஜப்பானிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாம்பழ ஏற்றுமதிக்காக பின்பற்றப்படும் புகைமூட்டும் நடைமுறைகளில் விதிமுறை மீறல்கள் மற்றும் தரக்குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தடையால் அல்போன்சா, கேசர், லங்க்ரா, தோத்தாபுரி மற்றும் பங்கனப்பள்ளி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாம்பழ ரகங்களின் ஏற்றுமதி நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. மாம்பழ சீசனின் நடுப்பகுதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி விவசாயிகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மேலும், ஏற்றுமதி முடங்கியுள்ளதால் மாம்பழக் கூழ் தயாரிப்பு நிறுவனங்களும் முழுமையான கொள்முதலை மேற்கொள்ளாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு மற்றும் சுகாதார நடைமுறைகளில் தேவையான முன்னேற்றம் ஏற்படும் வரை தடை நீடிக்கும் என ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது. இதனால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கிருஷ்ணகிரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஏற்றுமதியை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைத் தவிர்க்க அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெறிநாய் கடியால் 15 பேர் காயம்…ரேபிஸ் தடுப்பூசி இல்லை என அலட்சிய பதில்!
