ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை கோரி நாடு முழுவதும் சுமார் லட்சம் மருந்தகங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இ-பார்மசி (E-Pharmacy) முறையால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, மருந்து வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யக் கோரி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகளை ஒன்றிய அரசு அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும், ஆன்லைன் மருந்து விற்பனை காரணமாக நாடு முழுவதும் இயங்கி வரும் சிறிய மருந்துக் கடைகளின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிறிய மருந்துக் கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிறிய மருந்துக் கடைகள் மூடப்பட்டால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என்றும், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு அவசர காலங்களில் அத்தியாவசிய மருந்துகள் உடனடியாக கிடைக்காத நிலையும் உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் மருந்து விநியோகம் முழுமையாக சென்றுவிடும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் மருந்துகளை பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, மருந்துகளின் விலையை உயர்த்தும் சூழல் உருவாகக்கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களிலும், பெருந்தொற்று பரவும் சூழல்களிலும் மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காத நிலை உருவாகும் என்பதால், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
இருமொழிக் கொள்கையில் சமரசம் இல்லை – அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
