spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

-

- Advertisement -

ஆழி செந்தில்நாதன்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

இந்திய அரசியலுக்குத் திராவிட இயக்கமும், குறிப்பாக அதன் ஈட்டி முனையாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகமும் அளித்திருக்கும் முக்கிய அரசியல் பங்களிப்புகள் என மூன்று இலக்குகளைச் சுட்டிக்காட்டலாம்.

we-r-hiring
  1. சமூக நீதி
  2. மாநில சுயாட்சி
  3. மக்கள் நல அரசாங்கம்

இந்த மூன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்றாலும், அவை ஜனநாயகம் என்கிற நவீன அரசியல் சித்தாந்தத்தின் மூன்று வடிவங்களே.

இதில் மாநில சுயாட்சி என்பது ஜனநாயகத்தின் ஆட்சிசார்ந்த கோட்பாடாகும். சமூக நீதியும் மக்கள் நல அரசும் நிலவவேண்டுமானால், அரசாங்கத்துக்கு அதற்குரிய சட்டமியற்றும் அதிகாரமும் அவற்றை நிறைவேற்றும் அதிகாரமும் இருக்க வேண்டும். அந்த அதிகாரங்களை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் எனப் பிரிந்திருக்கும் ஓர் ஆட்சி முறையில், பிரித்தளிப்பதே கூட்டாட்சி-சுயாட்சி முறையாகும். அதில் குறிப்பாக, மக்கள் சார்ந்த சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டுவதற்கான உரிமை மாநிலங்களிடமே இருக்க வேண்டும் என்பதுதான் மாநில சுயாட்சியின் நோக்கம்.

இதில், சமூக நீதிப் போராட்டங்களைப் பற்றியும் மக்கள்நல அரசு என்பது பற்றியும் நாம் சுலபமாகப் புரிந்துகொள்கிறோம். ஏனென்றால், சாமானியர்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் எனப் பல தரப்பினருக்கும் நேரடியாகப் பலன்தரும் கோட்பாடுகளை எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், மாநில சுயாட்சி என்கிற கோரிக்கையை அப்படிச் சொல்லமுடியாது. அதைப் பற்றிய புரிதல் அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள் மத்தியிலும் குறைவாகவே இருக்கிறது. அதிகபட்சம், இதை மத்திய-மாநில அரசுகளின் உறவுப் பிரச்சினையாக மட்டுமே பலரும் பார்க்கிறார்கள்.

இந்தியாவில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லை. அதிகாரம் இல்லாத அரசுக்கு எந்த அர்த்தமும் இல்லை – இந்தப் புரிதலை முதலில் நமக்குத் தந்தவர். பேரறிஞர் அண்ணா. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்கிற மிக முக்கியான முழக்கத்தை நமக்களித்தவர். முத்தமிழறிஞர் கலைஞர். மோடி யுகத்தில் அதைப் புதுப்பித்திருப்பவர், இன்றைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இன்று இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநில சுயாட்சி முழக்கம். தி.மு.க.வின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியது எப்படி? அதற்குப் பின் ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு இருக்கிறது.

இந்தியாவில் ஜனநாயகத்துக்கான பாதை

பிரிட்டிஷ் இந்தியாவில் இரண்டு விதமான ஆட்சிப் பிரதேசங்கள் இருந்தன. பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி நிர்வாகம் நடைபெற்ற மாகாணங்கள் (எடுத்துக்காட்டாக, சென்னை மாகாணம்) மற்றும் உள்ளூர் அரசர்களால் ஆளப்பட்ட சமஸ்தானங்கள் (எடுத்துக்காட்டாக, மைசூர் சமஸ்தானம்).

இதில், சமஸ்தானங்கள் பெரும்பாலும் சுயாட்சி பெற்றிருந்தன. அவற்றின் வெளியுறவுக் கொள்கை போன்ற சிலவற்றின்மீதே பிரிட்டிஷ் உள் கட்டுப்பாடு இருந்தது. சமஸ்தானங்கள் அதிகாரங்களான ஆட்சி நிர்வாகம், நிலம், நிதி,வருவாய், வரி, கல்வி, பண்பாடு, தொழில், விவசாயம் உள்ளிட்ட அனைத்துமே சமஸ்தானங்களிடம் இருந்தன. இதற்கு நேர்மாறாக, மாகாணங்களில் பிரிட்டிஷார் நேரடியாக நிர்வாகம் செலுத்தினர். சட்டமும் நிறைவேற்றலும் அவர்களிடம் மட்டுமே இருந்தது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

எனவே, இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது இயல்பிலேயே மாகாணங்களில்தான் பெரும்பாலும் தொடங்கி நடந்தது. குறிப்பாககல்கத்தா, பம்பாய், சென்னை போன்ற மாகாணத் தலைநகரங்களிலிருந்த உயர்சாதியினரும் பிற மேட்டுக்குடியினரும் புதிதாகப் படித்துவந்த வர்க்கத்தினருமே அதில் ஈடுபட்டனர். அவர்களின் நலன்களே பிறகு இந்திய தேசியமாக உருவானது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்களே அரசாங்கத்திலும் இருந்தார்கள், தேசிய இயக்கத்திலும் இருந்தார்கள். இரு இடங்களிலும் அவர்களது நலன்களைத் தக்கவைத்துக்கொண்டார்கள். அதே சமயம், பார்ப்பனரல்லாத பிற சமூகங்களின் தலைவர்களும் தீவிரமான சமூக விடுதலைக் கோட்பாடுகளை உருவாக்கி, அரசியல் அதிகாரத்தில் தமக்கான பங்கை வலியுறுத்தினார்கள். இந்த முரண்பாடே சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை உருவாக்கியது.

இதற்கிடையில், இந்தியர்களின் சுயராஜ்ஜியக் கோரிக்கையை மெல்ல மெல்ல பிரிட்டிஷாரும் கவனிக்க ஆரம்பித்தனர். 1911ல் இந்தியாவைத் தன்னாட்சி மாகாணங்களின் ஒன்றியமாக ஆக்க வேண்டும் என வைஸ்ராய் ஆர்டிஞ்ச் பிரபு லண்டனுக்கு குறிப்பு அனுப்பியிருந்தார். இந்தியர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, அப்போது உருவாகியிருந்த காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீகும், 1916ல் தங்களுக் கிடையில் ஏற்படுத்திக்கொண்ட லக்னோ உடன்படிக்கையில், இதே கருத்தை எதிரொலித்தன.

முதல் உலகப் போரில் பிரிட்டிஷுக்கு ஆதரவாக இந்தியர்கள் இருந்த சூழலில், இந்தியாவில் மாகாணங்களில் உருவான சுதந்திரக் குரல்களைச் சமாளிக்கவும் தங்களுடைய சொந்த நிர்வாகத் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் லண்டன் இந்திய மாகாணங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சலுகைகளை அளிக்க முன்வந்தது. 1919ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதை காங்கிரசும் முஸ்லிம் லீகும் கடுமையாக எதிர்த்தபோதும், இதன் விளைவாக உருவான இரட்டையாட்சியை தமிழ்நாடு தன் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளத் தயங்கவில்லை.

1916ல் சி.நடேசனார், டி. எம். நாயர். சர்பி.டி. தியாகராயர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைக் கட்சி (நீதிக்கட்சி) 1920ல் முதல் நேரடி தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. அதன்பிறகு 1937 வரை நான்கு அமைச்சரவைகளை அது அமைத்தது. அதன் ஆட்சிக்காலத்தில்தான் பிற்காலத் தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகப் போக்கை வடிவமைத்த முயற்சிகள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இரட்டையாட்சி என்கிற காலனிய அரைகுறை அரசியல் உரிமைக்காலத்திலேயே, மேட்டுக்குடிகளால் வழிநடத்தப்பட்ட ஒரு மாகாண அரை-அரசாங்கத்தாலேயே இவ்வளவும் சாதிக்கமுடியமானால், முழுச் சுதந்திரமும் சுயநிர்ணயமும் எவ்வளவு நன்மைகளைத் தரமுடியும் என்கிற சிந்தனை சுயமரியாதை இயக்கத்தில் பரவியதில் வியப்பில்லை. அது, திராவிடநாடு திராவிடர்க்கே எனப் பெருமுழக்கமாக மாறியதிலும் வியப்பில்லை.

பாதி சுதந்திரம்

1924ல் முகமது அலி ஜின்னா தலைமையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் முழுமையான தன்னாட்சி கொண்ட மாகாணங்களின் கூட்டரசை அமைப்பதே எதிர்கால இந்தியாவுக்கு உகந்த திட்டம் என்று தீர்மானிக்கப்பட்டது. 1928ல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இணைந்து உருவாக்கிய, மோதிலால் நேரு தலைமையிலான எதிர்கால இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் தொடர்பான அறிக்கை, இந்தியாவை ஒரு கூட்டரசாக ஆக்குவதற்கான சில முனைப்புகளையும் வெளிப்படுத்தியது. இந்த நேரு குழு அறிக்கையில், சுயாட்சிப் பரிமாணங்கள் முழுதாக இல்லை என்று கூறி எதிர்வினை ஆற்றிய ஜின்னாவின் முக்கியத்துவம் வாய்ந்த 14 அம்ச கொள்கைகள் (14 Points of Jinnah) என்கிற அறிக்கை மேலும் விரிவான, ஆழமான முறையில் மாகாண சுயாட்சியையும் மத்தியக் கூட்டாட்சியையும் பற்றிக் கனவுகண்டது. பின்னாளில் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்பின் முன்வடிவம் என்று கூறப்படும் 1935 இந்திய அரசுச் சட்டம், சுதந்திர இந்தியா ஒரு கூட்டாட்சியாக அமைக்கப்பட வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!ஒரு பக்கம், உருவாகவுள்ள புதிய இந்தியா இந்து ராஷ்ட்டிரமாக இருக்க வேண்டும் என்று இந்திய தேசிய இயக்கத்திலுள்ள இந்துத்துவ நோக்கமுள்ளவர்கள் கருதினார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறு தேசத்தவர்கள் என்றே இன்றைய இந்துத்துவ வாதிகளின் பிதாமகரான சாவர்க்கர் தன்னுடைய இரு தேசக் கோட்பாட்டைமுன்மொழிந்தார். இது, முஸ்லிம்களிடையே பெரும் அச்சத்தையும் காங்கிரஸ்மீது அவநம்பிக்கையையும் உருவாக்கியது.

இதன் காரணமாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாகாணங்களில், அவர்களின் பண்பாட்டு வாழ்வியலை உறுதிப்படுத்த, மாகாண சுயாட்சி உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்கிற கருத்து, முஸ்லிம்களிடையே வலுப்பெற்றபோது, காங்கிரசில் பலர் அதை எதிர்த்தார்கள். இதுவே பிறகு பாகிஸ்தான் கோரிக்கை உருவானதற்கான காரணங்களிலேயே மிகப்பெரிய காரணமாக இருந்தது. மாகாண சுயாட்சியை மறுக்கும் காங்கிரசாரின் அடாவடிப்போக்கால் முஸ்லிம்கள் மத்தியில் தனிநாடு கோரிக்கை வலுப்பெற்றது. இந்தியாவிலிருந்து வெளியேறும் முடிவை பிரிட்டன் எடுத்துவிட்ட பிறகு, 1945-47-களில் இந்து முஸ்லிம் பிரிவுச் சூழலை சமாளிக்க பல நடவடிக்கைகளை எடுத்துவந்தது. அதில் ஒன்றாக, பிரிட்டிஷ் அரசு அனுப்பிய காபினெட் தூதுக்குழு, இந்தியாவுக்கு ஒரு விரிவான கூட்டாட்சியைத் தீர்வாக முன்மொழிந்தது. இக்கூட்டாட்சிக் கோட்பாடுகள் பரிசீலிக்கப்பட்டிருந்தால், பாகிஸ்தான் பிரிந்துகூட போகாமலிருந்திருக்கலாம்.

ஆனால், எந்த விதத்திலும் கூட்டாட்சிக் கோரிக்கைகள் ஏற்கப்படக் கூடாது, மாகாணங்களோ சமஸ்தானங்களோ – தங்களுடைய எதிர்கால அரசியல் தகுதியைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஜவஹர்லால் நேரு, வி.பி.மேனன், வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் நாடு பிரிந்தாலும்சரி, இந்தியா ஓர் ஒற்றையாட்சியைநோக்கி நகரட்டும் என முடிவுசெய்திருந்தார்கள். அதுநாள் வரை மாகாண சுயாட்சி குறித்தும் மொழிவாரி மாகாணங்கள் குறித்தும், மக்களாட்சி குறித்தும் காந்தியும் காங்கிரசும், ஏன் நேருவுமேகூட, கொண்டிருந்த கோட்பாடுகள் அனைத்தும் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது ரத்தவெள்ளத்தில் கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்களோடு சேர்த்தே கொல்லப்பட்டன.

இந்தக் காலகட்டங்களில், குறிப்பாக 1945-46 வாக்கில், அண்ணா லண்டனிலும் தில்லியிலும் பம்பாயிலும் நடந்தேறிய காட்சிகளை உற்று கவனித்துவந்தார். தனது மேடைப்பேச்சுகளிலும் ‘தம்பிக்குக் கடிதங்கள்’ வழியாகவும் உருவாகிவரும் சுதந்திர இந்தியாவின் தன்மைகளைக் கூறுபோட்டு ஆராய்ந்தார். திராவிட நாடு கோரிக்கை, அவர் மனத்தில் இருந்தபோதும், கூட்டாட்சி இந்தியா என்கிற சாத்தியப்பாட்டை மிகவும் வரவேற்று எழுதிவந்தார். இந்திய சுதந்தரத்தை வரவேற்ற அவர், அதே சமயம் கூட்டாட்சியாக மலராமல் போவதை வருத்தத்தோடு பதிவுசெய்தார். ஆனால், குடியாட்சி முறை தொடர்ச்சியாகச் சில சாத்தியப்பாடுகளைத் தருவதாகவும் அவர் நம்பினார்.

இதற்கிடையில், எதிர்கால இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான அரசமைப்பு நிர்ணய அவையில், அதன் குறிக்கோளை வரைந்தளிக்கும் தீர்மானத்தை நேரு, டிசம்பர் 12, 1946ல் சமர்ப்பித்தார். அந்தத் தீர்மானத்தில்கூட, மாநிலங்கள் சுயாட்சி பெறும் என்றும் எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கே அளிக்கப்படும் என்றும் உறுதி தரப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளில் எல்லாம் மாறியது. 1950ல் இந்தியா ஏற்றுக்கொண்ட அரசமைப்புச் சட்டம் மாநிலங்களின் உரிமைகளைக் காலில்போட்டு மிதித்துவிட்டது. கூட்டாட்சி அல்ல, அரைகுறை கூட்டாட்சிகூட அல்ல. சாராம்சத்தில் ஒற்றையாட்சி என்று கருதத்தக்க ஓர் ஆட்சியே சுதந்திர இந்தியாவில் உருவானது. அண்ணா கூறியது போல, ‘சென்னைச் சிறையில் இருந்த கைதி, வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்! கலைஞர் சொன்னதுபோல, ‘1947ல் காலில் கட்டப்பட்டிருந்த சங்கிலிகள் உடைந்தன. ஆனால், கைகளைக் கட்டியிருக்கும் விலங்குகள் அகற்றப்படவில்லை’.

1963ல், பிரிவினைவாதத் தடைச்சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்திய அரசமைப்பின் (The Constitution of India) 16 ஆவது சட்டத்திருத்தம் மூலமாக, நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் சுயநிர்ணய உரிமையைக் கோரமுடியாத ஒரு தடை உருவாக்கப்பட்ட நேரத்திலும்கூட, தேசம், இறைமை, கூட்டாட்சி, தன்னாட்சி போன்ற கருத்துருக்களை அண்ணா மறுவியாக்கியானம் செய்துகொண்டிருந்தார். அந்த சட்டத்திருத்தத்திற்குப் பிறகு, பிரிவினைக் கோரிக்கையை அதிகாரபூர்வமாகக் கைவிடுவதாகஅறிவித்தாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பதை அவர் அழுத்தந்திருத்தமாகக் கூறிவந்தார். ஆனால், எந்த வடிவில் இனித் தீர்வுகளை முன்வைப்பது என்ற கேள்வி எழுந்தது. 1967ல் மக்கள் தந்த வெற்றியே அந்த வடிவத்தையும் உருவாக்கித்தந்தது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!1967ல் அண்ணாவின் ஆட்சி அமைந்த பிறகு, ஒன்றிய மாநில உறவுச் சிக்கல் என்பது தி.மு.க ஆட்சியின் அன்றாடச் சிக்கலாக மாறியது. தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மாற்றத்துக்கான அடிப்படையை உருவாக்க முயன்றபோதுதான், நாம் நினைத்ததைவிட ஒன்றிய – மாநில அதிகாரப் பிரச்சினை ஆழமாக இருப்பதை அண்ணாவும் உணர்ந்தார். பிறகு, மாநில சுயாட்சி விவகாரத்தை முன்னிலைப்படுத்தவேண்டிய அவசியம் அதிகரித்தது. 1969 ஜனவரி மாதம், அவர் ‘ஹோம்ரூல்’ இதழிலும் காஞ்சி இதழிலும் இதழிலும் மறைவதற்கு முன்பு அவர் எழுதிய கடைசிக் கட்டுரையிலும், அவர் மாநில சுயாட்சி அரசியலை நோக்கி கழகத்தை உந்தித்தள்ளினார். அண்ணாவின் ‘இறுதி உயில்’ என்று அழைக்கப்படும் அந்த உரையினை அவரது மறைவுக்குப் பிறகு அரசியல் கட்டளையாக எடுத்துக்கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் கலைஞர்.

மாநில சுயாட்சித் தீர்மானம்

1969ல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, அதே ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள், மாநில உரிமைகள் குறித்து ஆராய ஒரு குழுவை முதல்வர் கலைஞர் அமைத்தார். டாக்டர் பி.வி.ராஜமன்னார் தலைவராகவும், டாக்டர் ஏ.லட்சுமணசுவாமி முதலியாரும் திரு பி. சந்திரா ரெட்டியும் உறுப்பினர்களாகவும் இருந்தார்கள். ஒரு சரியான கூட்டாட்சி அமைப்பில் ஒன்றிய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையில் அதிகாரம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை ஆராய்வது ராஜமன்னார் குழுவின் முக்கிய நோக்கமாகும். இந்திய அரசமைப்பில் ஏழாவது அட்டவணையில் ஒன்றியப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் மற்றும் மாநிலப் பட்டியல் என்று பிரிக்கப்பட்டுள்ள அதிகாரப் பகுப்புகள் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பதை அது ஆராய்ந்தது.

சட்டமியற்று துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை ஆகியவற்றில் மாநிலங்கள் உச்ச அளவு தன்னாட்சி உரிமையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அக்குழு பரிந்துரைசெய்தது. இந்தக் குழு, மே 1971ல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது: அது அதிகாரங்களை மூன்றாகப் பிரித்தது. 1. ஒன்றிய அரசின் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கோ ஒத்திசைவுப் பட்டியலுக்கோ மாற்றப்படவேண்டிய அதிகாரங்கள், 2. ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து மாநிலங்களுக்கு மாற்றப்படவேண்டிய அதிகாரங்கள், 3. ஒன்றிய அரசு அல்லது ஒத்திசைவுப் பட்டியிலிருந்து நீக்கப்படவேண்டிய அதிகாரங்கள். அத்துடன் எஞ்சிய அதிகாரங்கள் குறித்த முடிவுகள்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

நிதி, வரிகள்,திட்டமிடல் போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் தேவைப்படுவதை இந்தக் குழு சுட்டிக்காட்டியது. நீதித் துறை, ஆளுநர், நெருக்கடி கால அதிகாரங்கள், மாநிலங்களிடை மன்றம், திட்டக்குழு, நிதிக்குழு, வெளியுறவுக்கொள்கை, அனைத்திந்திய குடிமை ஊழியங்கள், மாநிலத்தின் எல்லைகள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம், ஆட்சிமொழி, வர்த்தகம், வணிகம், பொது ஒழுங்கு, தேர்தல் முறை, ஆற்றுநீர்த் தகராறு, கடலோர மாநிலங்களில் நீர் எல்லை விவகாரங்கள். மைய அரசு அமைப்புமுறை, அரசமைப்பு திருத்தப்படும் விதம் என பல துறைகளில் செய்யவேண்டிய மாற்றங்களைக் குழு பரிந்துரைத்தது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு, இராணுவம், வெளியுறவுக் கொள்கை, நிதி போன்ற கூட்டுப்பொறுப்புத் துறைகள் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் கணிசமான அதிகாரங்களை மாநிலங்களுக்கு மாற்றியளிக்க வேண்டும் என அது பரிந்துரைத்தது.

டாக்டர் பி.வி.ராஜமன்னார்இந்தப் பரிந்துரைகளுக்குப் பிறகு, கட்சி சார்பாக இரா.செழியன், முரசொலி மாறன் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை அமைத்த சுலைஞர், ராஜமன்னார் குழு அறிக்கையை ஆராய்ந்து, சாத்தியமானவற்றைத் தொகுத்து அரசின் கருத்துரைகளை உருவாக்கச் செய்தார். இடையில் குறுக்கிட்ட சட்டமன்றத் தேர்தலால் ஏற்பட்ட காலதாமதத்தைத் தாண்டி, 1974ல் இறுதி முடிவெடுக்கப்பட்டு, அரசின் கருத்துரைகள் தொகுக்கப்பட்டன.

ஏப்ரல் 16, 1974ல் முதல்வர் இந்தக் கருத்துரைகளின் அடிப்படையில் பின்வரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்:

“தலைவரவர்களே, மாநில சுயாட்சி பற்றியும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும் ராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் இப்பேரவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, பல்வேறு மொழி, நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை பேணிக்காக்கவும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்களுடன் நெருங்கிய தொடர்புகொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும் மாநில சுயாட்சி பற்றியும், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துகளை மத்திய அரசு ஏற்று மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவுசெய்கிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

இத்தீர்மானத்தை முன்மொழிந்து கலைஞர் ஆற்றிய உரை மிக முக்கியமானதாகும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

1945ல் காங்கிரஸ் கட்சி முன்வைத்த தேர்தல் அறிக்கையிலேயே இந்தியா ஒரு கூட்டாட்சியாக இருக்கும் என்று உறுதி கூறப்பட்டதையும் அதன் பிறகு எவ்வாறு படிப்படியாக அந்த வாக்குறுதிக்குத் துரோகமிழைக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டிய முதல்வர், அதிகாரங்களற்ற மாநிலங்களின் நிலைகுறித்து அண்ணா கூறிய கருத்துகளையும் எடுத்துரைத்தார். இந்திய சுதந்திரத்தின் நீட்சிதான் மாநில சுயாட்சி என்பதை வலியுறுத்தினார்.

கலைஞரின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அதன் மீதான விவாதங்கள் நடந்தன. தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்துக்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், தமிழரசுக் கழகம் ஆகியன ஆதரவளித்தன. ஸ்தாபன காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், அண்ணா தி.மு.க. உள்ளிட்டவை எதிர்த்தன.

தீர்மானத்தின் மீதான விவாதங்களாக, அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் சட்டமேலவையிலும் நடந்தேறிய உரையாடல்கள் மிக முக்கியமானவை. மாநிலங்கள் சுயாட்சி பெற்றால் பிரிவினைப் போக்கு அதிகமாவிடும் என்கிற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தீர்மான ஆதரவாளர்கள், அதற்கு மாறாக, மாநில சுயாட்சியை மறுத்ததுதான் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானும் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசமும் உருவானதற்கான காரணங்கள் என்பதை சுட்டிக்காட்டினார்கள். மாநில சுயாட்சிக் கோரிக்கையை எதிர்ப்பதற்காகத் தீர்மான எதிர்ப்பாளர்கள் வைத்த முக்கியமான வாதம், மத்திய அரசு பலமாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவியும்போது, அது பலமிழந்துவிடுவதுடன் தன் கவனத்தை நாட்டின் பாதுகாப்பின்மீது செலுத்தாமல்போகிறது என்று தீர்மான ஆதரவாளர்கள் பதிலளித்தார்கள்- பலமான மாநிலங்கள் இல்லாமல் பலமான ஒன்றியம் இல்லை என்றும் மணல் அஸ்திவாரத்தின்மீது மாபெரும் கோட்டையைக் கட்டமுடியாது என்றும் விளக்கினார்கள்.

இந்தியா பலமாக இருக்க வேண்டுமென்றால், மத்திய அரசு பலமாக இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட தீர்மான ஆதரவாளர்கள், எது பலம் என்று கேள்வி கேட்டார்கள். ஒற்றை அதிகாரப்போக்கு பலமல்ல, அது பலவீனம் என்று சுட்டிக்காட்டினார்கள். அன்று மிகப்பெரிய வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கூட்டாட்சி அரசமைப்பையே கொண்டிருக்கின்றன என்றும் கூட்டாட்சி முறை அவர்களைப் பலவீனப்படுத்தவில்லை என்றும் தி.மு.க.வினர் வாதங்களை முன்வைத்தார்கள்.

“என் அரசியல் வாழ்வில் இந்தத் தீர்மானத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றியதன்மூலம் நான் ஒரு பெரிய கடமையைச் செய்துமுடித்ததாகக் கருதுகிறேன்” என்றார், முதல்வர் கலைஞர். அத்தருணத்தில், கலைஞர் மொழிந்த தீர்க்கதரிசனமிக்க வார்த்தைகளை நாம் இப்போது நினைவுகூராமலிருக்க முடியாது.

அவையில் நடந்த விவாதத்திலிருந்து ஒரு பகுதி:

“திரு ஜே.ஜேம்ஸ் (காங்கிரஸ் உறுப்பினர்): ஜனசங்கம் மதத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு கட்சியாக இருக்கிறது. ஒருவேளை ஜனசங்கம் ஆட்சியில் இருக்கக்கூடிய நிலைமை ஒரு மாநிலத்தில் வந்தால், அங்குள்ள முஸ்லிம் மைனாரிட்டிகள் நிலைமை என்ன ஆகும்?”

மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி: அதுபோல ஜனசங்கம் பெரும்பான்மை பெற்று மத்தியில் ஒரு அரசு அமைக்கிற சூழ்நிலை ஏற்பட்டால் என்ன ஆகும்?”

கலைஞர் அஞ்சிய அந்த அரசு இப்போது மத்தியில் இருக்கிறது! அன்றைய ஜனசங்கம்தான் இன்றைய பாரதிய ஜனதா கட்சி,

அந்த விவாதத்தில் ஓரிடத்தில் பேசுகையில், “மாநிலத்தில் ஒரு முன்னேற்ற சர்க்கார் வந்து, முற்போக்கான சமதர்ம திட்டத்தை நிறைவேற்றுகிற சர்க்காராக, இன்னும் தீவிர சர்க்காராக அமைந்து, அதற்கு நேர்முகமாக மத்திய அரசு ஒரு சனாதன சர்க்காராகப் பிற்போக்கு சர்க்காராக அமைந்தால், அப்போது நிலைமை என்ன?” என்று அன்று கலைஞர் கேட்ட கேள்வி இன்றும் அர்த்தமுள்ளது. இன்றைய முதல்வர் முகஸ்டாலினுக்கு முட்டுக்கட்டை போடும் மோடி-ரவி ஜோடியைத்தான் அன்று கலைஞர் யூகித்திருக்கிறார். ‘அஞ்சுவது அஞ்சுதல் அறிவார் தொழில்’ என்றார் வள்ளுவர்!

மீண்டும் எழும் மாநில சுயாட்சி முழக்கம்

2014ல் இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற பாரதிய ஜனதா கட்சியும் அதன் பிரதமர் நரேந்திர மோடியும் மாநிலங்களின் நிலைமையை இதுவரை காணாத அளவுக்கு கேள்விக்குறியாக ஆக்கியிருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுவருகின்றன. இந்தியாவில் ஏற்கெனவே நிலவும் அரைகுறை கூட்டாட்சியும் அழிக்கப்பட்டு, ஒற்றையாட்சியை நோக்கி இந்த நாடு நகர்த்தப்படுகிறதோ என்கிற அச்சம் அனைவரிடமும் காணப்படுகிறது. இந்த நிலையில்தான் மாநில சுயாட்சி பற்றிய விவாதங்கள் தமிழ்நாட்டிலும் வேறு மாநிலங்களிலும் அண்மைக்காலத்தில் அதிகரித்துவருகின்றன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

கடந்த பத்தாண்டுகளில், தமிழ்நாடு சந்தித்த அனைத்துப் பிரச்சினைகளுமே அடிப்படையில் மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளாவே இருப்பதில் ஆச்சரியமில்லை. பார்ப்பன-பாசிச அரசு என நமது தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட மோடி அரசின் கீழ் நாம் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடுகிறோம்; நீட் விவகாரத்தில் மருத்துவக் கல்வி உரிமைக்காகப் போராடுகிறோம்; கல்வித் துறையில் நிதி உரிமைக்காகப் போராடுகிறோம்; தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை நமக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகப் போராடுகிறோம்; தொழில்துறையில் கோடிகோடியாக வருமானத்தை உருவாக்கி, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உயர்ந்த பிறகும், தில்லி நம்மை அடிமையைப் போல நடத்த நினைக்கிறது. அது மாநில அரசை கொஞ்சமும் மதிக்காதவர்களை கவர்னர்களாகப் போட்டு அவமானப்படுத்துகிறது.

ஆனால், மாநில சுயாட்சி இல்லாத இந்நிலையில்கூட உலக அரங்கில் தமிழ்நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது. நமது திராவிட மாடல் அரசு அதைச் சாதித்துக்காட்டியதற்கு தமிழ் மக்களின் ஆதரவும் நமது முன்னோடித் தலைவர்களின் வழிகாட்டலும் முதல்வரின் உறுதியான நிலையும்தான் காரணம், இந்த நிலையை எப்போதும் பாதுகாப்பதற்குமாநில சுயாட்சியை உண்மையிலேயே வென்றெடுப்பது அவசியமாகும். சுவரில்லாமல் இனி சித்திரம் வரையமுடியாது.

ராஜமன்னார் குழுவுக்குப் பிறகு மற்றுமொரு குழுவை தமிழ்நாட்டு அரசு இப்போது அமைத்திருப்பது அத்திசையில் முக்கியமானதொரு தொடர்ச்சியாகும். இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் திரு குரியன் ஜோசப் தலைமையிலான அக்குழுவின் பரிந்துரைகளும் தீர்மானங்களும் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் அரசியல் சாசன வாளும் கேடயமுமாக மாறும் என நாம் திடமாக நம்பலாம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

MUST READ