திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கே.சி. வீரமணி தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.சி. வீரமணி மீது அளவுக்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்திடம் தவறான சொத்து விவரங்களை அளித்துள்ளதாகவும் அவர்கள் புகார் முன்வைத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் ஆவணங்களுடன், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க ஜெயப்பிரகாஷ் (51), ஜெகன் (36), தினேஷ் (34), தணிகைவேல் (52) ஆகிய நால்வரும் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, கே.சி. வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து இந்த நால்வரையும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தணிகைவேல் என்பவரை தாக்குதலுக்குப் பிறகு தனியாக அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் இருந்து தப்பிய மூவர் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் நாட்றம்பள்ளி காவல் நிலையம்க்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், அதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் தவறான சொத்து விவரங்களை வழங்கி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் குற்றச்சாட்டு எழுந்துள்ள இந்த சம்பவம், தேர்தல் காலத்தில் அரசியல் சூழலை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…
