முன்விரோதம் காரணமாக சேலம் அருகே பட்டியல் இனத்தை சேர்ந்தவரை தாக்கிய வழக்கில், சேலம் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் கீழ் தண்டனை வழங்குவது அரிதான ஒன்றாக இருப்பதாகவும் வழக்கறிஞர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம், புத்தூர் கிராமம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்கள் அந்தப் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நல்லதம்பி பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்தவர். இவர்களுக்குள் ஏற்கனவே மண் அள்ளுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 7-8-2016 அன்று பட்டியலினத்தை சேர்ந்த சேகர் , தோட்டத்திற்கு பக்கத்தில் உள்ள ஓடையில் சிறிய பாலம் ஒன்றினை கட்டியிருந்தனர். அந்தப் பாலம் கட்டுவற்காக தோண்டிய மண்ணை, சேகரின் தோட்டத்தில் கொட்டியிருந்தனர். பாலம் அமைத்தப் பின்பும் நீண்ட நாட்களாக கொட்டிய மண்ணை அள்ளி செல்லாததால், அந்த மண்ணை தனது நிலத்திற்கு சேகர் சமன்படுத்தியுள்ளார். இதனை அறிந்த பக்கத்து தோட்டத்தை சேர்ந்த நல்லதம்பி , அவரது தம்பி துரைவேல், மற்றும் சங்கர் , சின்னையன் ஆகியோர் சேர்ந்து அந்த மண்ணை எப்படி நீ எடுக்கலாம் என்று ஆபாசமாக, ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு , இரும்பு கம்பியை எடுத்து சேகரின் தலையில் அடித்துள்ளனர். இதைப் பார்த்து தடுக்க வந்த சேகரின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது தாய் அங்கம்மாள் ஆகியோரையும் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக சேகர், தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணையானது சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதன் நீதிபதி ஜெயசிங் விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் பட்டியலின சேகரை தாக்கிய முதல் எதிரியான நல்லதம்பிக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 11 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. துரைவேலுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருடம் சிறை தண்டனையும், மூன்றாயிரம் அபராதமும் சின்னையன், சங்கர் ஆகியோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறை தண்டனையும், 2000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெய்சிங் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பாண்டியன் ஆஜராகி வாதாடினார். இது குறித்து வழக்கறிஞர் பாண்டியன் கூறுகையில், உயர் சாதியினர் நிலங்களுக்கு மத்தியில் பட்டியல் இனத்தவரின் நிலம் இருந்ததால், மேல் சாதியினருக்கு முன் விரோதத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை எவ்வாறு பழி தீர்க்கலாம் என்று எண்ணியிருந்த சூழலில் இந்த மண் பிரச்சனையை கையில் எடுத்து சாதி ரீதியாக திட்டி தாக்கியுள்ளனர். இந்த வழக்கில் எதிரிகள், ஜாதி துவேசத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளது கண்கூடாக தெரிகிறது . எனவே குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே நீதிக்கு உகந்ததாக அமையும் என்று வாதிட்டதின் அடிப்படையில் இந்த நீதிமன்றம் அதனை தீர்மானித்து , நீதிபதி தனது தீர்ப்பில் தண்டனை வழங்கியுள்ளதாகவும், பொதுவாக இது போன்ற வழக்குகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குவது அரிதான ஒன்றாக இருப்பதாகவும் வழக்கறிஞர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.