தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து, குற்றவாளிகளான 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் கல்லூரி மாணவியை கடத்தி நகையை பறித்து பெல்டால் அடித்து துன்புறுத்தி எடுத்த ஆபாச வீடியோ வெளியானது. இச்சம்பவம் தொடர்பாக பல போராட்டங்களை கடந்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் இருவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனா். அந்த புகாரின் பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சபரீசன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னர், விசாரணையில் இளம்பெண்கள் பலரை மிரட்டி பலாத்காரம் செய்ததுடன் ஆபாச வீடியோவும் எடுத்து மிரட்டியது அம்பலமானது. இந்த வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த வழக்கில் அதிமுக தலைவர்களின் வாரிசுகளுக்கு சம்மந்தம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கின் விசாரணையின் போக்கு மந்தாமானதை கண்டித்து, வழக்கை நேர்மையாக நடத்த பல தரப்பிலும் வலியுறுத்தியதால் இந்த வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
பல பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருண்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் உள்ளிட்டோர் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டு சதி உள்ளிட்ட 13 பரிவுகளில் வழக்கு பதியப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் குற்றப் பத்திரிக்கையும், 2021-ல் 2வது முறை குற்றப்பத்தரிகையும் தாக்கல் செய்யப்பட்டு கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் சுமார் 50 சாட்சிகளிடம் விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது. வழக்கில் சம்மந்தப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் அழித்த ஆதாரங்கள் அனைத்தும் தொழில் நுட்ப உதவியுன் மீட்க்கப்பட்டு வழக்கில் மின்னணு சாதனங்களில் இருந்து வீடியோக்கள் மூலம் விஞ்ஞானப் பூர்வமாக குற்றச்சாட்டு நிருபணமாகியுள்ளதாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளாா். அரசு தரப்பில் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதாகவும், யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமாக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளாா்.
6 ஆண்டுகள் கழித்து, தமிழத்தையே உலுக்கிய இந்த பரபரப்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால், நீதிமன்றத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வழக்கில் கைதான 9 பேரும் கோவை அழைத்து வரப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி 9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று காலையில் தீர்ப்பு அளித்த நிலையில், தற்போது குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளாா்.
மேலும் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் அரசு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா். குற்றவாளிகள் 9 பேரும் பாதுகாப்பாக சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம்… இளைஞர்கள் கைது…